பட்டியலினத்தவரின் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்ய விடாமல் தடுத்து அராஜகம்
6 Oct 2026, 10:11 pm

பட்டியலினத்தவரின் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்ய விடாமல் தடுத்து அராஜகம்

ஈரோடு, அக். 6 -பெருந்துறை அருகே பெரும்பாளி பகுதியில் உள்ள பொது மயானத்தில் பட்டியலினத்தவரின் சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து,காலில் விழ வைத்த கொடுமை காவல் துறையினர் முன்னிலையில் நடந்துள்ளது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது மடத்துப்பாளையம் கிராமத்திற்குட்பட்ட பெரும்பாளி பகுதியாகும். இங்கு பட்டியலினத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள பொது மயானம் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் நான்கு கிலோமீட்டர் அப்பால் சென்று திங்களூர் ஊராட்சியின் ஒரு பகுதியில் சடலங்களை புதைத்து வருகின்றனர்.

இந்நிலையில், திங்களன்று காளியப்பன் என்பவரின் தந்தை சென்னி காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சடலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பொது மயானம் என்ற நிலையில் ஏற்கெனவே, ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலும் இருந்து வந்த காரணத்தினால் காவல்துறைக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சடலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் காவல்துறையினர், வருவாய் ஆய்வாளர், கிராம ஊராட்சி செயலர், உதவியாளர் உள்ளிட்டோர் அங்கு வந்திருந்னர். இததையடுத்து அங்கு திரண்டிருந்த ஆதிக்க சக்தியினர், ‘பட்டியலினத்தவர்கள் இங்கே சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது’ என்ற அச்சுறுத்தினர். இதனைக்கண்டு அஞ்சிய பட்டியலினத்தை சேர்ந்த இருவர், ரிதுபரண் என்பவரின் காலில் விழுந்து மன்றாடினர். இவை அனைத்தையும் காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு, பார்வையாளராக மட்டுமே இருந்தனர்.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் திங்களூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.பி. பழனிசாமி, மாவட்டச் செயலாளர் ஏ.கே. பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர். அர்ஜூனன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் சுந்தர் வடிவேல், ராஜசேகர், லலிதா, பூ பாலகுமார், கோகிலா உள்ளிட்டோர் பிரச்சனையில் தலையிட்டு உடலை அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.இதனையடுத்து சடலம் அடக்கம் செய்யப்பட்டது.