“பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்போம்!” கம்பத்தில் பாலியல் வன்முறைக்கு எதிராக 1,400 பேர் பங்கேற்ற மினி மாரத்தான்!
28 Jun 2026, 9:28 pm

“பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்போம்!” கம்பத்தில் பாலியல் வன்முறைக்கு எதிராக 1,400 பேர் பங்கேற்ற மினி மாரத்தான்!

தேனி, ஜூன் 28 தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை களுக்கு எதிராகவும், அவர்களின் பாது காப்பை உறுதி செய்ய வலியுறுத்தி யும் தேனி மாவட்டம் கம்பத்தில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து ஒருங்கி ணைத்த இப்போட்டியில் 1,400-க்கும் மேற்பட்டோர் உணர்ச்சிப் பெருக்கு டன் பங்கேற்றனர்.

தடம் பதித்து ஓடிய இளைய தலைமுறை

“நம்ம குழந்தைகளை... நமக்கான குழந்தைகளை... பாதுகாக்க தடம் பதித்து ஓடுவோம்...” என்ற நெஞ்சைத் தொடும் முழக்கத்துடன் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மினி மாரத்தான் நடத்தப்பட்டது.

காலை 6 மணிக்குக் கம்பம் வ.உ.சி. திடலில் திரண்டிருந்த நூற்றுக்கணக் கான பள்ளி மாணவ, மாணவிகளின் உற்சாக முழக்கங்களுக்கு இடையே, கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் கொடியசைத்து ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்தத் துணை நிற்போம் என்ற விழிப்புணர்வு உறுதிமொழியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பம் ஏரியா செயலாளர் கே.ஆர். லெனின் வாசிக்க, அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

கம்பம் வீதிகளில் எதிரொலித்த விழிப்புணர்வு

17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஆர்வத்துடன் ஓடினர். வ.உ.சி. திடலில் தொடங்கிய இந்த ஓட்டம் குமுளி ரோடு, நாலந்தா பள்ளி, ஆங்கூர்பாளையம் ரோடு மற்றும் எல்.எப். ரோடு வழியாகச் சென்று மீண்டும் வ.உ.சி. திடலிலேயே நிறைவடைந்தது. வீதிகளின் இருபுறமும் திரண்டிருந்த பொது மக்கள், தங்களின் எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாக்க ஓடிய குழந்தைகளுக்குக் கைகளைத் தட்டி தங்களது நெகிழ்ச்சியான ஆதரவைத் தெரிவித்தனர்.

போட்டியில் வென்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.5,000 வரையிலான ரொக்கப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ரத்த வங்கி தலைமை மருத்துவர் பாரதி, சித்தா மருத்துவர் சிராஜுதீன், கவிஞர் ராஜா, தமுஎகச தலைவர்கள் அய்.தமிழ்மணி, சுருளிப்பட்டி சிவாஜி, சமூகச் செயற்பாட்டாளர் கார்த்திகா கண் ணன், வாலிபர் சங்க நிர்வாகிகள் விஸ்வா, விக்னேஷ், மாதர் சங்க நிர்வாகிகள் சத்யா, கனகேஸ்வரி மற்றும் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பன்னீர் வேல், வீ. மோகன் உட்படத் திரளானோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளின் பாது காப்பு அரணாகத் திகழ உறுதியேற்றனர்.