குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி காலி குடங்களுடன் தர்ணா
11 Jun 2026, 11:31 pm
<p><strong>குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி காலி குடங்களுடன் தர்ணா</strong></p><p>கடலூர், ஜூன் 11- கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள மன்னம்பாடி கிராமத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னம்பாடி கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால், பொதுமக்கள் தண்ணீருக்காகத் தொலைதூரத்திற்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்டோர் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பிரச்சினை குறித்து விருத்தாசலம் கோட்டாட்சியர் மற்றும் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மக்கள், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய இந்தத் தர்ணா போராட்டத்தைக் கையில் எடுத்தனர். போராட்டத்தின்போது கிராமத்திற்குப் போர்க்கால அடிப்படையில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில், கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
