வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.75.92 லட்சம் மோசடி செய்தவர் கைது
20 May 2026, 1:08 am
<p><strong>வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.75.92 லட்சம் மோசடி செய்தவர் கைது</strong></p><p>கடலூர், மே19- கடலூர் மாவட்டத்தில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.75.92 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். விருத்தாசலம் திருவிக நகரைச் சேர்ந்த இளவரசன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் ரஷ்யாவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தார். இதனை நம்பி, 37 பேரின் கடவுச்சீட்டு நகல்களுடன், தமிழ்செல்வனின் வங்கிக் கணக்கிற்கு ரூ.38.73 லட்சமும், அவரது நண்பர் பிரவீன் குமாரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.27.89 லட்சமும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக மும்பையில் 15 நாள் பயிற்சி அளிக்கப்பட்சு, 10 பேர் ரஷ்யாவுக்கும், 22 பேர் கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகருக்கும் அனுப்பப்பட்டனர். மேலும், 5 பேர் மும்பையில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், வெளிநாடு சென்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படாததுடன், அவர்களை மீண்டும் தாயகம் திரும்ப அனுப்பவும் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் எடுத்துச் சென்ற ரூ.4 லட்சம் கைச்செலவுத் தொகையும் பறிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை ரூ.5.30 லட்சம் சொந்த செலவில் தாயகம் திரும்பினர். இந்த விவகாரத்தில், பணத்தை திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும், தமிழ்செல்வன் திருப்பித் தராமல் ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டார். எனவே, தமிழ்ச்செல்வன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை, வெளிநாட்டில் பறிக்கப்பட்ட ரூ.4 லட்சம், சொந்த செலவில் ஊர் திரும்பிய தொகை ரூ.5.30 லட்சம் என தங்களுக்கு சேர வேண்டிய ரூ.75,92 லட்சம் பணத்தை மீட்டுத் தரவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கணங்கூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (வயது29) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள பிரவீன் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>
