நூற்றாண்டை நெருங்கும் பள்ளியை நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரிக்கை கடலூர் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
14 Jul 2026, 1:23 am
<p><strong>நூற்றாண்டை நெருங்கும் பள்ளியை நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரிக்கை கடலூர் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு</strong></p><p>கடலூர், ஜூலை 13- நூற்றாண்டு விழாவை நோக்கிப் பயணிக்கும் கோமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளி யாகத் தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, தலைமை ஆசிரியர் லட்சுமி தேவி தலைமையில் கல்வி மேலாண்மைக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருத்தாசலம் வட்டம், கோமங்கலம் கிராமத்தில் 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டு தோறும் 110-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், நடப்பு 2026-27 கல்வியாண்டில் 116 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பள்ளியில் 5-ம் வகுப்பை முடிக்கும் மாணவர்கள், மேல்நிலை கல்விக்காக 3 முதல் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, பேருந்து மூலம் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகப் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாகப் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மாணவர்களின் நலன் கருதி இப்பள்ளியை உடனடியாக நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
