கடலூர் மாநகராட்சிப் பகுதியில் பன்றிகளைப் பிடிக்க எதிர்ப்பு
14 Jul 2026, 1:17 am
<p><strong>கடலூர் மாநகராட்சிப் பகுதியில் பன்றிகளைப் பிடிக்க எதிர்ப்பு</strong></p><p>கடலூர், ஜூலை 13- கடலூர் மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதாரச் சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, மாநகராட்சி ஆணை யரின் உத்தரவின்பேரில், பன்றிகளைப் பிடிக்கும் பணி திங்கள்கிழமை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்திலி ருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள், உண்ணாமலை செட்டிச்சாவடி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உள்ளூர் பன்றி வளர்ப்பாளர்கள் அப்பணியைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பி னருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் மாநகராட்சி அலுவல கத்திற்கு அழைத்துச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டே பன்றிகளைப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வும், அரசுப் பணிக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, காவல்துறை பாதுகாப்புடன் பன்றி பிடிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. அப்போதும் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றவர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து, பணி தொடர்ந்து நடைபெற்றது. இதுகுறித்து பன்றி வளர்ப்பாளர்கள் கூறுகையில், “மாடு உள்ளிட்ட இதர கால்நடைகள் பிடிக்கப்படும்போது, அபராதம் விதித்து உரிமையாளர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்படுகின்றன. அதே நடைமுறையைப் பன்றிகளுக்கும் பின்பற்றி, பிடிக்கப்படும் பன்றிகளுக்கு அபராதம் விதித்து எங்களிடமே ஒப்படைக்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தனர்.</p>
