தோழர்களே, உங்கள் குரலே கியூபாவின் பலம்! தில்லி கருத்தரங்கில் கியூப வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் பரில்லா உருக்கமான அறைகூவல்
17 May 2026, 9:04 pm

தோழர்களே, உங்கள் குரலே கியூபாவின் பலம்! தில்லி கருத்தரங்கில் கியூப வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் பரில்லா உருக்கமான அறைகூவல்

இந்தியாவில் உள்ள கியூபா ஒருமைப்பாட்டு இயக்கத்தின் அன்பான நண்பர்களே, சிறப்பு தூதுவர்களே — என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்கள் ஒவ்வொருவருக்கும், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மகத்தான சர்வதேச ஒருமைப்பாட்டு இயக்கத்திற்கும் என் ஆழமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கியூபாவின் புரட்சிக்காக, கியூபா மக்களுக்காக, நீங்கள் அர்ப்பணிப்புடன், அயராமல், வெற்றிகரமாக ஒருமைப்பாட்டை வளர்த்துவருகிறீர்கள்.

தோழர் சுர்ஜித் அன்பை நினைவுகூர்கிறேன்

இந்த இடத்தில் நிற்பது என்னையும் என் தூதுக்குழுவையும் ஆழமாக உணர்வு கொள்ள வைக்கிறது. இங்கே — தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்ற மனிதரின் பெயரில் அமைந்த இந்த இடத்தில் நிற்பது எழுச்சியூட்டுகிறது. மக்களிடையே ஒருமைப் பாட்டை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் விதத்தில் வாழ்ந்தவர் அவர். 30 ஆண்டு களுக்கு முன்பு, தோழர் சுர்ஜித் ஒரு தூதுக்குழுவை வழிநடத்தி கியூபாவிற்கு வந்தார் — பத்தாயிரம் டன் கோதுமையும் பத்தா யிரம் டன் அரிசியும் எடுத்துக் கொண்டு. கமாண்டர் பிடல் காஸ்ட்ரோ அந்த அரிய கொடையை நெகிழ்வுடன் ‘இந்தியாவின் ரொட்டி’ என்று அழைத்தார். இன்று அவரது பெயரில் நாம் கூடியிருப்பது அந்த ஒருமைப்பாட்டு உறுதிமொழியை மறுபடியும் புதுப்பிக்கிறது.

அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் நிஜமான அச்சுறுத்தல்!

கியூபா இன்று தன் சமகால வரலாற்றின் மிகக் கடுமையான நெருக்கடிகளில் ஒன்றை எதிர்கொள்கிறது. என் நாடு அமெரிக்க அரசாங்கத்தின் நேரடி இராணுவ ஆக்கிர மிப்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இது வெறும் சந்தேகம் அல்ல; இது யதார்த்தம். உயர் பதவியிலுள்ள அமெரிக்க அதிகாரி கள் திரும்பத் திரும்ப இதை தெளிவாக சொல்லி யிருக்கிறார்கள். ஜனவரி 29 மற்றும் மே 1 ஆம் தேதி டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக ஆணைகளே இதை உறுதிப்படுத்துகின்றன. கடந்த ஜனவரி 8 ஆம் தேதி ஒரு வானொலி நேர்காணலில் அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக கூறினார்: கியூபாவின் மீது அதிக பொருளாதார அழுத்தம் கொடுக்க முடியுமா என்று கேட்கப்பட்டபோது, ‘அங்கே சென்று எல்லாவற்றையும் அழிப்பதை விட அதிகமான அழுத்தத்தை நம்மால் கொடுக்க முடியும் என்று நினைக்கவில்லை’ என்று தயங்காமல் சொன்னார். அவர் பகிரங்க மாகவே கூறினார். இனி மீதமிருப்பது நேரடி படையெடுப்பு மட்டுமே என்று. கியூபா மக்கள் தங்கள் இறை யாண்மையையும் சுதந்திரத்தையும் தன்னாட்சி யையும் பாதுகாக்கும் உறுதியை யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. அமெரிக்கா வின் தீவிர வலதுசாரிகள் கியூப மக்கள் தங்கள் தாயகத்தைக் காக்க தயாராக நிற்பதை காண்பார்கள்.

இரத்தம் வேண்டாம் — ஆனால் கியூபா ஒருபோதும் மண்டியிடாது!

அமைதியை விரும்பும்மக்களிடம், நீதிக்கான காரணங்களுக்காக போராடும் அனைவரிடமும் என் வேண்டுகோள் இதுதான்: பொய்களை எதிர்த்து நில்லுங்கள்; முன்னரே கணிக்கக்கூடிய இந்த இராணுவ ஆக்கிரமிப்பை தடுக்க அணி திரளுங்கள். இராணுவ நடவடிக்கை நடந்தால் அது இந்தப் பகுதிக்கும் கியூபாவிற்கும் கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். மனிதாபிமான பேரழிவையும் இரத்தக்களரியையும் தடுக்க விரும்புகிறோம். ஆனால் இராணுவ நடவடிக்கை நடந்தாலும், வெள்ளை மாளிகையின் போர்வெறி, போரா ளிகளான கியூப மக்களின் உறுதியையும் தயார்நிலையையும் எதிர்கொள்ளும். ஒரு வல்லரசு இப்படிப்பட்ட காட்டு மிராண்டித்தனமான, கொடூரமான செயலுக்கு என்ன நியாயம் சொல்ல முடியும் என்று யாரும் கேட்கலாம். இது சர்வதேச சமூகம் முழு மைக்கும் பெரும் சவாலை முன்வைக்கிறது. இன்று கியூபாவிற்கு ஆதரவான நிலை எடுக்காத எந்த நாடும் நாளை தன் இறையாண்மையோடு, சுதந்திரமாக செயல்பட முடியாமல் போகும் அபாயம் நிச்சயம் ஏற்படும். எந்த நாடும் தன் தேசிய சட்டங்கள் மட்டுமே தன் மண்ணில் நடைமுறையில் இருக்கும் என்று நம்பி இருந்துவிட முடியாது.

அறுபது ஆண்டு முற்றுகை — இது போர்க் குற்றம்!

கடந்த பத்து ஆண்டுகளில் தீவிரப் படுத்தப்பட்ட முற்றுகை கியூபாவின் பொரு ளாதார திறனிலும் சமூக மனித நல நிலை களிலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. 2019 முதல் 243 புதிய தடை நட வடிக்கைகளுடன் அமெரிக்கா எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கியூபா விற்கு மறுக்க தீவிர முயற்சிகள் எடுத்திருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆகியவற்றை மறுத்தது; வென்டிலேட்டர்களை கியூபாவிற்கு பெற அனுமதி மறுத்தது; மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதை தடுத்தது — இதை எம் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இது ஏகாதிபத்திய கொள்கை யின் மிகக் கொடூரமான வெளிப்பாடு. இந்த ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி டிரம்ப்பின் ஒரு நிர்வாக ஆணை கூடுதல் அசாதாரண நடவடிக்கையை அறிவித்தது — கியூபாவிற்கு எரிபொருள் ஏற்றுமதியை எந்த நாட்டிலிருந்தும், எந்த நிறுவனத்திலிருந்தும் மேற்கொண்டாலும் பழிவாங்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று. இது உண்மையில் ஒரு முழுமையான எரிபொருள் முற்றுகை. இது முந்தைய முற்றுகையுடன் சேர்த்து அறுபதாண்டுகளின் மொத்த விளைவுகளை மேலும் சுமத்து கிறது. இது ஒரு போர்ச் செயல். ஒரு கடல் முற்றுகைக்கு இணையானது.

எரிபொருள் தட்டுப்பாடு — குழந்தை களும் முதியோரும் படும் துயர்

கியூபா தனக்குத் தேவையான கச்சா எண்ணெயில் பாதியை உற்பத்தி செய்கிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக சுதந்திரம் மற்றும் கடல்வழி போக்குவரத்தின் உரிமையை பயன்படுத்தி கியூபா எரிபொருளை இறக்குமதி செய்கிறது. ஆனால் அந்த எரிபொருளை அமெரிக்கா தடுக்கும்போது வெறும் ஒரு கப்பலை நிறுத்துவதோ ஒரு சரக்கு நிறுவனத்திற்கு பாதிப்பு விளைவிப்பதோ என்பதல்ல — கியூபா வில் போக்குவரத்தையே நிறுத்துகிறது. மருத்துவ சேவைகளை பாதிக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கிறது. குழந்தைகள், முதியோர், நோயாளிகள் — அனைவரும் பாதிக்கப்படு கிறார்கள். மே 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட புதிய நிர்வாக ஆணையானது கியூபாவை அமெரிக்கா விற்கு அசாதாரண அச்சுறுத்தல் என்று மீண்டும் முத்திரை குத்தியது — இது வெளிப்படையான பொய். முதல்முறையாக இந்த ஆணை இரண்டாம் நிலை தடைகளை நிறுவுகிறது — அமெரிக்காவுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் மீதும் ஏவப்படலாம். இது புவி எல்லைகளைத் தாண்டிய முற்றுகையின் மிகவும் ஆக்கிரமிப்பு மிக்க, முன் நடந்திராத புதிய வகை தாக்குதல் ஆகும். இது கியூபாவிற்கு மட்டுமல்ல — அனைத்து நாடுகளின் இறையாண்மையின் மீதும் கிரிமினல்தனமான தாக்குதல்.

குழந்தை இறப்பு இரட்டிப்பானது — இது இனப்படுகொலை!

இது வெறும் பொருளாதார பேரழிவு மட்டு மல்ல. இது கூட்டுத் தண்டனை. இது இனப்படு கொலை. எரிபொருள் முற்றுகை கியூபாவின் மின் உற்பத்தியை பாதித்திருக்கிறது — நீண்ட மின்தடை, நீர் பம்பிங்கில் சிக்கல், திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகத்தில் இடைஞ்சல். உணவுப் பொருட்கள், சேவைகள் இவற்றின் உற்பத்தியும் விநியோகமும் பாதிக்கப்படுகிறது. போக்குவரத்தும் மருத்துவ சேவைகளும் சீர்குலைகின்றன. இவற்றின் விளைவாக, 2025 ஆம் ஆண்டு இறுதியில் கியூபாவின் குழந்தை இறப்பு விகிதம் இரட்டிப்பானது — ஆயிரம் பிறப்பு களுக்கு 9.9 இறப்புகள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்வாழும் விகிதம் 85 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக குறைந்திருக்கிறது. 1,00,000 நோயாளிகள் அறுவைசிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள் — அதில் 12,000 குழந்தைகள். இவை வெறும் எண்கள் அல்ல — இவை உயிர்கள். இவை அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையின் கோர முகத்தை காட்டுகின்றன.

கியூபா மக்கள் தளரவில்லை — படைப்பாற்றலும் விடாமுயற்சியும்!

இந்த நெருக்கடியின் விளைவுகள் மற்ற பெரும்பாலான நாடுகளுக்கு எவ்வளவு கடுமை யாக இருக்குமோ அவ்வளவு கடுமையாக கியூபாவிற்கு இல்லை — ஏனென்றால் கியூபாவின் சோசலிச சமூக-பொருளாதார அரசியல் மாதிரியின் மனிதநேய மிக்க, சமூக நீதி அடிப்படையே அதற்கு காரணம். கியூபக் குடும்பங்கள் இந்த நெருக்கடி சூழ்நிலைகளை எதிர்கொள்ள எவ்வாறு தகவமைத்திருக்கின்றன என்பதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. படைப்பாற்றல், புத்தாக்கம், விடா முயற்சி, உறுதி — ஆனால் அதே நேரத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கூட. கியூபா தனக்குத் தேவையான எண்ணெ யில் கிட்டத்தட்ட பாதியை உற்பத்தி செய்கிறது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுத்திகரிக்கிறோம். நிக்கல் மற்றும் கோபால்ட் இருப்புகளில் உலகின் மிகப் பெரியவற்றில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம். போதுமான விவசாய நிலமும் நீரும் உள்ளது. உயிரி மருத்துவ மற்றும் மருந்து துறைகள் போன்ற புத்தாக்கம் மிக்க, போட்டித்தன்மை வாய்ந்த தொழில்கள் உள்ளன. ஆனால் மிக முக்கியமானவர்கள் மக்கள் — கியூபப் புரட்சி யின் முக்கிய நாயகர்கள் அவர்கள்தான்.

சீரமைப்பும் சீர்திருத்தமும் — அரசாங்கம் செயலில் இறங்கியது

இந்த சூழ்நிலையில் கியூப அரசாங்கம் தீவிரமான செயலில் இறங்கியுள்ளது. நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கான விதிகளை மேம்படுத்தி தளர்த்தியிருக்கிறோம். வெளி நாட்டில் வாழும் கியூபர்கள் எங்களது சமூக-பொருளாதார வளர்ச்சித் திட்டத்தில் பங்கேற்க புதிய வாய்ப்புகளை திறந்திருக்கிறோம். நட்பு நாடுகளின் விலைமதிப்பற்ற உதவியுடன் ஒளி மின்னாற்றல், சூரிய ஆற்றல் முதலீடுகள் மூலம் எங்களது ஆற்றல் உற்பத்திக் கட்டமைப்பை மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். உணவுப் பொருள் உற்பத்தியை ஊக்குவித்து உணவு இறையாண்மை அடைய முயல்கிறோம். நிதி மற்றும் வங்கி அமைப்பை மேம்படுத்துகிறோம். சமூக ஏற்றத்தாழ்வை குறைக்க முயல்கிறோம், மற்ற நாடுகளுக்கு சகோதர உதவியையும் ஒத்துழைப்பையும் தொடர்கிறோம்.

அமெரிக்காவுடன் உரையாடல் — ஆனால் இறையாண்மையில் சமரசமில்லை!

அமெரிக்காவுடன் நாங்கள் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறோம். இது எதுவும் வழக்கத் திற்கு மாறானதல்ல. கடந்த காலத்தில் கிட்டத் தட்ட அனைத்து அமெரிக்க நிர்வாகங்களுடனும் நாங்கள் இப்படிச் செய்திருக்கிறோம். புரட்சி யின் வெற்றியிலிருந்து தொடர்ந்து பதின்மூன்று நிர்வாகங்கள் வந்திருக்கின்றன. ஃபிடல் காஸ்ட்ரோ, ரால் காஸ்ட்ரோ, ஜனாதிபதி தியாஸ்- கேனல், கியூபா கம்யூனிஸ்ட் கட்சி தலைமை, அரசு மற்றும் அரசாங்க நிர்வாகம் — எப்போ தும் அமெரிக்காவுடன் மரியாதையான, தீவிரமான, பொறுப்பான உரையாடலுக்கு தயாராக இருந்தோம். நாம் முன்னோக்கி செல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் கியூபாவின் அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கு எந்த வகையிலும் அந்த பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்காது. நமது மக்கள் மற்றும் புரட்சி தொடர்பான எந்த உள்நாட்டு விவகாரமும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் பகுதியாக இருக்காது. கியூபர்களின் இறையாண்மை, சுதந்திரம், சுயாட்சி ஆகியவற்றில் உள்ளார்ந்த விவகா ரங்களை நாங்கள் ஒருபோதும் அமெரிக்கா வுடன் விவாதிக்க மாட்டோம்; விட்டுக் கொடுக்கவே மாட்டோம்.

இந்திய-கியூபா நட்பு — வரலாற்று பிணைப்பை மேலும் வலுப்படுத்துவோம்!

கியூபா தனியாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம். இந்தியாவின் வெவ்வேறு பகுதி களிலிருந்து நிதி திரட்டும் ஒவ்வொரு முயற்சி யும், அவதூறுப் பிரச்சாரத்திற்கு எதிரான ஒவ்வொரு போராட்டமும், ஒருமைப்பாட்டின் ஒவ்வொரு வெளிப்பாடும் ஹவானாவை ஒரு பெரும் தழுவலாக சென்றடைகிறது. கியூபாவிற்கு நீண்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் மனிதாபிமான ஒருமைப்பாட்டு மரபு உண்டு. அது நமது கமாண்டர் பிடல் காஸ்ட்ரோ வின் மரபு. இந்த ஆண்டு நாம் அவரது நூறா வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம் — அந்த மரபை என்றும் காப்பாற்றுவோம். கியூபா மற்றும் இந்திய மக்களுக்கிடையேயான நெருங்கிய உறவு நகரங்கள் மற்றும் நாடுகளுக்கிடையே ஒருமைப்பாடு என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கான பதிலாக வலுப்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பேசுங்கள்!

இன்றைய சர்வதேசச் சூழல், கியூபாவுடன் ஒருமைப்பாடுகொள்ளும் இயக்கங்களின் நிரந்தர அணி சேர்க்கையை கோருகிறது. இன்று முழு நேர்மையோடு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன் — உங்கள் ஆதரவை வலுப்படுத்து ங்கள். தளரவிடாதீர்கள். உங்கள் சமூகங்களில், குடும்பங்களில், குழந்தைகளிடம், உங்கள் அமைப்புகளில் கியூபாவைப் பற்றி பேசுங்கள். எங்கள் தீவில் உண்மையில் என்ன நடக்கிறது என்று உண்மையை சொல்லுங்கள். தோழர் சுர்ஜித் கியூபத் துறைமுகங்களுக்கு அரிசியும் கோதுமையும் கொண்டுசென்றதன் அதே நம்பிக்கையோடு அமெரிக்காவின் முற்றுகையை கண்டிப்புடன் கண்டியுங்கள். நாம் வரலாற்றில் சரியான பக்கத்தில் இருக்கிறோம் என்ற நிச்சயத்தோடு இருங்கள். கியூபா எதிர்க்கிறது. கியூபா தளரவில்லை. உலகில் எமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எம்மை மேலும் வலிமையாக உணரவைக்கிறது. நாங்கள் போராடுவோம், கனவு காண்போம், சோசலிச கட்டுமான செயல்முறையை தொடர்ந்து மேம்படுத்திட உறுதியோடு இருப்போம். ஜோஸ் மார்ட்டியின் கருத்துக்கு நம்பிக்கையாக இருப்போம் — தாயகம் என்பது மனிதகுலம் என்று உணர்ந்து. தோழர்கள் பிடலைப் போலவும் சே குவேராவைப் போல வும் — இறுதி விளைவுகள் வரையில் — ஆழ மான சர்வதேசியவாதிகளாக தொடர்ந்திருப்போம். இந்திய மற்றும் கியூபா மக்களின் நட்பு வாழ்க! தமிழில் : எஸ்.பி.ஆர்.