கூட்டு விவாதங்களும் சோசலிச கட்டுமானத்திற்கான மக்கள் அங்கீகாரமும்!
7 Jul 2026, 10:28 pm

கூட்டு விவாதங்களும் சோசலிச கட்டுமானத்திற்கான மக்கள் அங்கீகாரமும்!

“நெருக்கடியான காலகட்டத்திலும், வளர்ச்சிக்கான வேட்கையை நாம் கைவிட முடியாது” என்ற மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் புகழ்பெற்ற தத்துவமே சோசலிச கியூபா இன்று ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் புதிய பொருளாதார நகர்வுகளின் உந்துசக்தியாகும். அமெரிக்க அரசாங்கம் கியூபா மீது ஏவியுள்ள பன்முகத் தாக்குதல்களும், தலையீட்டு அரசியலும் கியூப உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் குடும்பப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனால், இந்த ஏகாதிபத்திய அழுத்தங்கள் எதற்கும் மண்டியிடாமல், கியூபாவின் புரட்சிகர அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தின் கூட்டுச் சிந்தனையையும், நாட்டின் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டு புதிய மாற்றுப் பொருளாதாரப் பாதையை வகுத்துள்ளது.

சோசலிச மாதிரியை மாற்றியமைத்த மக்கள் விவாதம்

கியூபாவின் தற்போதைய வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது கடந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட “2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார மற்றும் சமூகத் திட்டம்” குறித்த விரிவான மக்கள் விவாதமாகும். இந்த வரைவுத் திட்டம் வெறும் அதிகார மட்டத்தில் இறுதி செய்யப்படாமல், நாடு தழுவிய அளவில் உழைக்கும் மக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைவரின் பொது விவாதத்திற்கு வைக்கப்பட்டது. இதன்மூலம், பொருளாதார மற்றும் சமூக மாதிரியை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்பது குறித்துப் பொதுமக்களிடமிருந்து எண்ணற்ற ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளும் திருத்தங்களும் வந்தடைந்தன. மக்கள் வழங்கிய விமர்சனங்களும் ஆலோசனைகளும் ஆரம்ப வரைவு ஆவணத்தை மேலும் வலுப் படுத்தியதோடு, சோசலிசப் பொருளாதாரக் கொள்கைகளைச் செழுமைப்படுத்தவும் உதவின.

மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச வல்லுநர்களின் அளவுகோல்களைக் கொண்டு இந்தத் திட்டங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டன. குறிப்பாக, சோசலிச கட்டுமானப் பாதையில் பயணிக்கும் சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் ஏகாதிபத்திய முற்றுகைகளையும் சவால்களையும் எவ்வாறு கையாண்டன என்ற உலகளாவிய அனுபவங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் தளங்களின் (AI) துணையோடு கியூபாவின் தனித்துவமான சூழலுக்கு ஏற்ப ஒப்பிட்டு ஆராயப்பட்டன. இவ்வாறு முதிர்ச்சியடைந்த நிலையில் வடிவமைக்கப்பட்ட திட்டங்களே கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவிற்கும் தேசிய நாடாளுமன்றத்திற்கும், இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.

முற்போக்கான நிர்வாகமும் அதிகாரப் பரவலாக்கலும்

இந்தத் தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, அரசு நிர்வாக அமைப்பு, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளை மறுசீரமைப்பதற்கான சட்டவரைவு ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற அரசுப் பதவிகளும், அமைச்சகங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைக்கப்பட்டு, அரசு நிர்வாகம் மிகவும் நெகிழ்வுத்தன்மையுடனும், அதிகாரத்துவமற்ற முறையிலும் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் அரசு நிதி, சமூக நலத்திட்டங்களுக்கும், அரசுத் துறையினரின் அவசர ஊதியச் சீர்திருத்தங்களுக்கும் பயன்படுத்தப்படும்.

இந்தப் புதிய நடைமுறை உத்தியின் பிரதான நோக்கம், நாட்டின் மத்திய திட்டமிடலுக்கும் உழைப்பிற்கான ஊக்கத்தொகைகளுக்கும் இடையே உள்ள பழைய முரண்பாடுகளைக் களைவதாகும். தேசத்தின் உற்பத்தித் திறனைத் தூண்டுவதற்கும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றிக் கொண்டு சேர்ப்பதற்கும் இருந்த தடைகள் அனைத்தும் இந்த மக்கள் விவாதங்களின் மூலம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, நுகர்பொருட்களுக்கான அரசு மானியங்களை படிப்படியாகக் குறைத்து, மிகவும் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை தனிநபர்களுக்கான நேரடி மானியங்களாக மாற்றியமைக்கும் திட்டமும் உழைப்பா ளர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நாட்டின் பொருளாதார வளத்தை சமமாகப் பகிர்ந்தளிக்க உதவும். அதேபோல், உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்க மின்னணு விலைப்பட்டியல் மற்றும் டிஜிட்டல் தளங்களை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல், கியூபாவின் எதிர்கால தூண்களாக விளங்கும் இளம் தகுதிவாய்ந்த உழைப்பாளர் சக்தியைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்குப் போதுமான ஊதிய ஊக்கத்தொகைகளை வழங்கி நாட்டின் உள்நாட்டு வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கும் விவாதங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது கியூபாவின் மனிதவள ஆற்றல் அந்நிய நாடுகளுக்குப் புலம்பெயர்வதைத் தடுத்து நிறுத்தும் முற்போக்கான நடவடிக்கையாகும்.மேலும், ஏகாதிபத்தியத்தின் ராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், மக்களின் ‘நீண்டகால உத்தி சார்ந்த திட்டங்களின்’ கீழ் பிராந்திய பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதும், வாராந்திர பாதுகாப்பு தினங்களைப் பயன்படுத்தி மக்கள் பங்கேற்புடன் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்துவதும் இந்த வியூகத் தயாரிப்பில் மிக முக்கிய முன்னுரிமையாக முன்வைக்கப்பட்டிருந்தது.

சுருக்கமாகக் கூறின், கியூப உழைக்கும் வர்க்கத்தின் கூட்டு விவாதங்களின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொருளாதாரப் பாதை, ஏகாதிபத்தியத்தின் சதியை முறியடிப்பதற்கான கியூபாவின் கூட்டுப் பிரகடனமாகும். “நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்வதும், அந்தச் செல்வத்தைச் சமூக நீதியுடன் விநியோகிப்பதும்” மட்டுமே இந்த ஒட்டுமொத்தப் தயாரிப்புப் பணிகளின் இறுதி இலக்காகும்.