கியூபா ஒரு அரசியல் பயணமும் மார்க்சியப் பாடமும் - பி.வெங்கட்
3 Oct 2026, 9:15 pm

கியூபா ஒரு அரசியல் பயணமும் மார்க்சியப் பாடமும் - பி.வெங்கட்

கியூபாவிற்குச் சென்றது எனக்கு ஒரு சாதாரண வெளிநாட்டுப் பயணம் அல்ல; அதுவொரு அரசியல் ஆய்வுப்

பயணம் ஆகும். தோழர் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஹவானாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச விவாதங்களில் பங்கேற்பதும், கியூபா மக்களின் வாழ்க்கையைநேரடியாகப் புரிந்துகொள்வதும் எனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது. பல்லாண்டுகளாக அமெரிக்கஏகாதிபத்தியத்தின் கடுமையான பொருளாதாரத் தடையை எதிர்கொண்டாலும், ஒரு சிறிய நாடு எவ்வாறு தனதுசுதந்திரத்தையும், இறையாண்மையையும், சோசலிச அமைப்பையும் பாதுகாத்து வருகிறது என்பதை ஆழமாகப்புரிந்துகொள்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

சர்வதேச மாநாடு

2026 ஆகஸ்ட் 10 முதல் 13 வரை, ஹவானாவில் நடைபெற்ற “பிடல் - லெகசி அண்ட் பியூச்சர்” என்ற சர்வதேச மாநாட்டில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் விஜூ கிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர்கொண்ட இந்தியத் தூதுக்குழுவின் உறுப்பினராக கலந்துகொண்டேன். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில், இந்தத் தூதுக்குழுவில் இடம்பெற்று கியூபாவிற்குச் செல்லும்வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்வந்திருந்த அறிவுஜீவிகள், அரசியல் தலைவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள் பெரியஅளவில் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் அதிகாரப்பூர்வ விவாதங்களைத் தாண்டி, பிடல் காஸ்ட்ரோ ரூஸ் மையம், கியூபாவின் புரட்சிகர வரலாற்றுடன் தொடர்புடைய பல வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்கள், சே குவாராவின் நினைவிடங்கள், முக்கிய அருங்காட்சியகங்கள், நவீன மற்றும்பாரம்பரிய மருத்துவமனைகள் மற்றும் பழைய ஹவானா நகர் போன்ற இடங்களுக்கும் நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம். அங்கு நாம் வரலாற்றின் நேரடிச் சாட்சிகளைக் காணமுடிந்ததுடன், கியூபாவின் கடந்த காலப்போராட்டங்களையும் சோசலிசத்தின் மகத்தான சாதனைகளையும் மிக நெருக்கமாக உணர முடிந்தது.

கியூபாவின் தற்போதைய யதார்த்தமும் நெருக்கடிகளும்

நாங்கள் ஹவானாவில் கால் பதித்தபோது, புத்தகங்களில் படித்த புரட்சியை மட்டும் நாம் சந்திக்கவில்லை; மாறாக, கடுமையான மின்வெட்டு, குடிநீர்தட்டுப்பாடு, கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் இரவுகளில் இருளில் மூழ்கிய நகர வீதிகள் போன்ற கடுமையான யதார்த்தங்களை எதிர்கொண்டோம். எங்களின் தங்குமிடத்தில்கூட தண்ணீர் தட்டுப்பாடு இருந்ததுடன், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீச்சல் குளத்திலிருந்துவாளிகளில் தண்ணீர் கொண்டுவர வேண்டிய சூழலும் அங்கு ஏற்பட்டது.ஒரு சாதாரண சுற்றுலாப் பயணியின் பார்வையில் இது வெறும் சிரமமாகவோ அல்லது தற்காலிகத்தொல்லையாகவோ தோன்றலாம். ஆனால் ஒரு அரசியல் செயற்பாட்டாளராக, இவ்வளவு பெரிய மற்றும்உன்னதமான நாடு ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற ஆழமான கேள்வி உடனடியாக எழுந்தது. இலவச கல்வி, உலகளாவிய சுகாதாரம் மற்றும் அறிவியல் துறையில் இன்றைக்கும் உலகிற்கு உதாரணமாகத் திகழும் கியூபா, இன்று ஏன் இவ்வளவு கடுமையான எரிபொருள்மற்றும் மருந்துத் தட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கான விடைகளைத் தேடுவதே இந்தப்பயணத்தின் முக்கிய பகுதியானது.

மாநாட்டின் தொடக்க உரையில் கியூபா ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கானெல், நாட்டின் முன் உள்ள நெருக்கடியின் தீவிரத்தை எதையும் மறைக்காமல் வெளிப்படையாக விளக்கினார். கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகமின்வெட்டைத் தவிர்க்க முடியவில்லை என்றும், சில பகுதிகளில் மக்கள் நாளொன்றுக்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரமின்றி சிரமப்படுவதாகவும் அவர்கவலையுடன் தெரிவித்தார். சுகாதாரத் துறையின் நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது; அவசியமான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இல்லாததால் சுமார் 88,500 பேர் அறுவை சிகிச்சைக்காகக்காத்திருக்கிறார்கள், அவர்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆவர்.அத்தியாவசிய மருந்துகளில் 30 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் நோயாளிகளை அவசரமாக அழைத்துச் செல்லப் பயன்படும்ஆம்புலன்ஸ்களில் 22 சதவீதம் மட்டுமே தற்போது இயக்கத்தில் உள்ளன. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும்புற்றுநோய் நோயாளிகள் பலரும் அவசியமான மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் நிலையை அதிபர் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.

கியூபாவின் புரட்சிகர வரலாறும் சோசலிச சாதனைகளும்

கியூபாவின் கடந்த காலத்தைப் படிக்காமல் இன்றைய கியூபாவின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்வது இயலாது. ஸ்பெயினின் காலனித்துவ ஆட்சி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பத்தாண்டுகால கொடூரமான சுரண்டலுக்குப் பிறகு, பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக புரட்சித் தீ மூண்டது. ஜூலை 26, 1953இல் பிடல்காஸ்ட்ரோவின் தலைமையில் புரட்சியாளர்கள் மன்காடா முகாம் மீது துணிச்சலான தாக்குதலை நடத்தினர். 1956இல் புகழ்பெற்ற கிரான்மா படகில் 82புரட்சியாளர்கள் ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் புறப்பட்டு, சியரா மாஸ்ட்ரா மலைகளைத் தளமாகக் கொண்டு கொரில்லா போர்முறையின் மூலம் பாடிஸ்டாவின் பாசிச ஆட்சியை வீழ்த்தினர். ஜனவரி 1, 1959இல் கியூபாவில் மகத்தான புரட்சி வெற்றி பெற்றது.அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கொடூரமான சதித்திட்டங்களை மீறி, கியூபா உலகிற்கேமுன்னுதாரணமாக பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது: 1961 எழுத்தறிவுப் புரட்சி மூலம் 100 சதவீதஎழுத்தறிவையும் இலவசக் கல்வியையும் எட்டியது; உலகப் புகழ்பெற்ற இலவச சுகாதார அமைப்பை உருவாக்கி,கோவிட் காலத்திலும் சொந்தமாகத் தடுப்பூசிகளை உருவாக்கி உலகின் பல நாடுகளுக்கும் மருத்துவர்களைஅனுப்பியது; இன்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு நடுவிலும் பாலஸ்தீன மாணவர்கள் உட்படவெளிநாட்டு மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி வழங்கி சர்வதேச ஒற்றுமையைக் காத்து வருகிறது.

அமெரிக்கத் தடையின் தாக்கமும் கியூபாவின் மீள்திறனும்

சோவியத் யூனியனின் வரலாற்றுச் சோகமான வீழ்ச்சிக்குப் பிறகு, கியூபா கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அமெரிக்கா தனது மிருகத்தனமான பொருளாதாரத் தடையை மேலும் கடுமையாக்கியது. கியூபாவின் இயற்கை வளங்களின் வரம்புகள் மற்றும் அமெரிக்காவின் தொடர்ச்சியான கொடூரமானதடைகள் காரணமாக சுற்றுலாத் துறை 70 சதவீதம் வரை சரிந்துள்ளது. மருத்துவப் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும்உதிரிபாகங்கள் பெறுவதில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.ஆனால், இந்தச் சிரமங்களுக்கு நடுவிலும் கியூப மக்கள் சோசலிசக் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மறுப்பதுதான் கவனிக்க வேண்டிய அம்சம். அமைச்சர்களும் ஆளும்கட்சித் தலைவர்களும் சாதாரண பொதுமக்களுடன் சேர்ந்து இந்தச் சிரமங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நெருக்கடியைத் தைரியத்துடன்எதிர்கொள்வதும், அதைச்சோசலிச வழியில் வென்று காட்டப் போராடுவதும்தான் கியூபாவின் உண்மையான ஆன்மாவாகும். “விவா! விவா!” (நீண்ட காலம் வாழ்க!) என்ற முழக்கம்வெறும் வாயளவில் சொல்லப்படுவதில்லை; அது அவர்களின் இரத்தத்தோடும் வாழ்வோடும் கலந்த மூச்சாகமாறியுள்ளது. பிடல், சே குவாரா மற்றும் ஜோஸ் மார்ட்டி ஆகியோரின் புரட்சிகர நினைவுகளும் தியாகங்களும்இன்றைய இளம் தலைமுறைக்குத் தொடர்ந்து பெரும் உத்வேகம் அளிக்கின்றன.

புதிய தலைமுறைக்கான அரசியல் பாடம்

இன்றைய உலகச் சூழலில், கியூபாவிற்குச் சென்று திரும்புவது என்பது வெறும் சுற்றுலா அனுபவம் மட்டுமல்ல; அது ஒரு தீவிர அரசியல் மற்றும் மார்க்சியப் பாடம் ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் சிறிய நாடுகளின் மீது திணிக்கும் வன்கொடுமைகளையும், தடைகளையும் மீறி ஒரு சமதர்ம சமுதாயம் எவ்வாறு போராட வேண்டும் என்பதை கியூபா தனது அன்றாட வாழ்வின் மூலம் உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. நமது சொந்த நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிவதையும் காணும்போது, கியூபாவின் சமத்துவ சமூகக் கட்டமைப்பு நமக்கு ஒரு மிக முக்கியமான வரலாற்றுவழிகாட்டியாகத் திகழ்கிறது. மனிதகுலத்தின் எதிர்காலம்சோசலிசத்தில்தான் உள்ளது என்ற ஆழமான நம்பிக்கையை இப்பயணம் எமக்கு மேலும் வலுப்படுத்தியுள்ளது.