பருவம் தவறிய மழையால் புதுக்கோட்டையில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்
13 Jan 2026, 3:17 pm
<p><strong>பருவம் தவறிய மழையால் புதுக்கோட்டையில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்</strong></p>
<p>புதுக்கோட்டை, ஜன.13 - புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. தமிழ்நாடு அரசு உரிய ஆய்வை நடத்தி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கும் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2026 ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையிலும், விவசாயிகள், விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து நெல் விற்பனை கிடங்குகளுக்கு கொண்டு செல்லக்கூடிய நிலையிலும், திடீரென தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகாக்களில் உள்ள நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால், விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் பாதிப்புக்குள்ளான வயல்வெளியை பார்வையிட்டு, பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழுவின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>
