அமெரிக்கா, இஸ்ரேலுடன் அணி சேரும் போக்கை இந்தியா கைவிட வேண்டும்! - சிபிஎம் அரசியல் தலைமைக்குழு
19 Jun 2026, 8:00 pm

அமெரிக்கா, இஸ்ரேலுடன் அணி சேரும் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு நம்பிக்கையளிக்கும் ஒரு முன்னேற்றமாகக் கருதுகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட தேவையற்ற தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு, இந்த ஒப்பந்தம் ஓரளவு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பினரும் ஒருவரின் இறையாண்மையையும், நிலப்பரப்பு ஒருமைப்பாட்டையும் மற்றொருவர் மதிப்பதுடன், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்கா, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் ஈரானிய கப்பல்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கும். அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதிக்கும். இது எரிசக்தி மற்றும் உரங்களின் கிடைப்புத்தன்மை மீதான நெருக்கடியைக் குறைக்கும்.

சர்வதேச எரிசக்தி சந்தைகளில் கச்சா எண்ணெய் விலைகள் ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ளன. இதனால், சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் செய்யப்பட்ட உயர்வை உடனடியாகக் குறைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குறிப்பாக யூரியா உள்ளிட்ட உரங்கள் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அவசர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் வரம்புகளை வெளிப்படுத்துகிறது. ஈரான் மக்கள் ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல், அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களை எதிர்த்து உறுதியாகப் போராடியுள்ளனர். இதன் விளைவாக, ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கவும், முடக்கப்பட்டிருந்த ஈரானின் சொத்துகளை விடுவிக்கவும் அமெரிக்கா கட்டாயப்படுத்தப்பட்டது. மேலும், தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் அரசு இந்த வளங்களைப் பயன்படுத்தி மக்களின் உடனடி பொருளாதார பிரச்சனைகளைத் தீர்த்து, அவர்களின் வாழ்க்கைக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

ஈரான் மீதான தனது ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்த மக்கள் கோபமே அமெரிக்காவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியது. அமெரிக்காவிலும் பல்வேறு நாடுகளிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, அந்தந்த நாடுகளின் அரசுகள் அமெரிக்க ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

இஸ்ரேல், உலக மக்களின் உணர்வுகளை மதித்து, லெபனான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தி, ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தைப் பின்பற்ற வேண்டும். உலகளாவிய பொதுமக்களின் மனநிலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகவே உள்ளது என்பதை இந்திய அரசு இனியாவது உணர்ந்து, அவர்களுடன் அணிசேரும் போக்கைக் கைவிட வேண்டும்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.