இந்துத்துவா சக்திகளை வலுவாக எதிர்த்து நிற்போம்! 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஎம் அறிக்கை
11 May 2026, 10:04 pm

இந்துத்துவா சக்திகளை வலுவாக எதிர்த்து நிற்போம்! 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஎம் அறிக்கை

புதுதில்லி, மே 11-இந்துத்துவா மதவெறி சக்திகளின் வளர்ச்சிக்கு எதிராக எப்போதும் போல முன்னணியில் நிற்போம், என்றும்; சமூகத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்க உறுதிமிக்க போராட்டத்தை நடத்துவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலு வலகமான ஏ.கே.ஜி. பவனில் மே 10 -11 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

காங்கிரசால் பாஜக வளர்ச்சி

ஏப்ரல் மாதத்தில் அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.

கேரளத்தில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சி நடத்திய இடது ஜனநாயக முன்னணி, இத்தேர்தலில் ஒரு கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. முதன்முறையாக, பாஜக மூன்று தொகுதிகளில் வெற்றிபெற முடிந்துள்ளது. இது ஒரு தீவிரமான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு களை முன்வைப்பதும், அவதூறுகளைப் பரப்புவதும், அதேவேளையில் வகுப்பு வாத சக்திகளிடம் மென்மையான அணுகுமுறையைக் கையாள்வதும் என காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட செயல்பாடுகளே, கேரளத்தில் பாஜக வின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.

கேரளத்தில் கிடைத்த 37.6 சதவிகித வாக்குகள்

தேர்தல் முடிவுகளில் பின்னடைவு ஏற்பட்டபோதிலும், இடது ஜனநாயக முன்னணியால் 37.6 சதவிகித வாக்குகளைப் பெற முடிந்துள்ளது. இது மக்களிடையே கட்சிக்கு உள்ள ஆத ரவை வெளிப்படுத்துகிறது.

இத்தேர்தல் காலத்தில் கடுமையாக உழைத்த அனைத்து இடது ஜனநாயக முன்னணி தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அத்துடன் எங்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மதவெறி சக்திகளை வலுவாக எதிர்ப்போம்

மாநிலத்தில் இந்துத்துவா மதவெறி சக்திகளின் வளர்ச்சியை எதிர்த்து நிற்பதில் கட்சி எப்போதும் போல முன்ன ணியில் நிற்கும். மேலும் சமூகத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்ட மைப்பைப் பாதுகாக்கும். மக்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து கையில் எடுப்பதோடு, அவர்களின் வாழ்வா தாரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான எத்தகைய தாக்குதல்களையும் கட்சி உறுதியாக எதிர்த்து நிற்கும்.

விரிவான ஆழமான ஆய்வு நடத்தப்படும்

தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி ஒரு பூர்வாங்க ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்தத் தேர்தல் பின்னடைவுக்குக் காரணமான பலவீனங் களைக் கண்டறியும் வகையில், வரும் நாட்களில் ஒரு விரிவான மற்றும் ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேவையான திருத்தங்களும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படும்.

மே.வங்கத்தில் பாஜக வெற்றி ஒரு பெரும் பின்னடைவு

மேற்கு வங்கத்தில் பாஜக பெற்ற வெற்றி ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்துத்துவா மதவெறி, பிளவுபடுத்தும் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த வெறுப்புப் பிரச்சாரம்; தேர்தலுக் காகச் செலவிடப்பட்ட பிரம்மாண்டமான நிதி, இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தேசியக் குடியுரிமைப் பதிவேடு தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட மத்திய முகமைகளின் அப்பட்ட மான தவறான பயன்பாடு - ஆகி யவையே பாஜகவின் இந்த வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன. ஊழல் மிகுந்ததும், சர்வாதிகாரப் போக்கு கொண்டதுமான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களிடையே நில விய கடும் ஆட்சி எதிர்ப்பு அலையும் (anti-incumbency), பாஜகவின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்தது.

அசாமிலும் தொடரும் வலதுசாரிகளின் செல்வாக்கு

அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது பெரும்பான்மையை அதிகரித்துக் கொண்டிருப்பதையும் சேர்த்துப் பார்க்கையில், இந்துத்துவா சார்ந்த வகுப்புவாத மற்றும் வலதுசாரிச் சக்திகளின் எழுச்சியை நாம் காண முடிகிறது. புதுச்சேரியிலும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் பாஜக அமைத்த கூட்டணி வெற்றிபெற்றது.

பாஜக முயற்சி தமிழகத்தில் முறியடிப்பு

தமிழ்நாட்டில் வெளியான தேர்தல் தீர்ப்பைச் சீர்குலைக்கும் முயற்சியில், ஆளுநர் அலுவலகத்தைப் பயன்படுத்தி பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஈடுபட்டன.

தவெக-வின் தலைவரான சி. ஜோசப் விஜய் தலைமையில் ஓர் அரசாங்கம் அமைவதை முறியடிக்க அவர்கள் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தமிழகத்தின் முதலமைச்சராக அவரைப் பதவியேற்கச் செய்ய ஆளுநர் நிர்பந்திக்கப்பட்டார்.

மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கட்சியும் தவெக தலைமையிலான அரசாங்கத்திற்குத் தனது ஆதரவை வழங்கியது. புதிதாகப் பதவியேற்றுள்ள இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இது மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றும் நம்புகிறோம். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு தன் அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)