காவல்துறை தலைமை இயக்குநருக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடிதம்
3 hours before

சிவகங்கை மாவட்டம், திருக்காளப்பட்டியில் மதுபானக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்குமார் என்பவர் மீது பழி தீர்க்கும் நோக்குடன் செயல்பட்ட பார் உரிமையாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதுவிலக்கு பிரிவு காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதம் வருமாறு:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், திருக்காளப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பள்ளிக் கூடத்தின் அருகிலும் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக அவ்வூர் பொதுமக்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பலமுறை போராட்டம் நடத்தினர். கடந்த 04.11.2026 அன்று நடைபெற்ற போராட்டத்தையொட்டி, 14.11.2026ல் கடையினை அப்புறப்படுத்துவதாக அதிகாரிகள் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தனர்.

இந்நிலையில், மதுபானக் கடையில் பார் நடத்தி வரும் சொக்கநாதன் என்பவரின் தூண்டுதலில் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியாய் செயல்பட்ட ராஜ்குமார் என்பவர் நடத்திவரும் பெட்டிக்கடையின் முன்புறம் 05.11.2026 காலை 8.13 மணி அளவில் ராஜபாண்டி, ஆசை ஆகியோர் கஞ்சா பொட்டலத்தை வைத்துச் சென்றனர். இவர்கள் சென்ற இரண்டு நிமிடத்தில் மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் காவலர் விக்னேஷ் மற்றும் பெயர் தெரியாத ஒருவர் சீருடை அணியாமல் வந்து தடை செய்யப்படட போதை பொருள் விற்பதற்காக உங்களை கைது செய்கிறோம் என ராஜ்குமாரிடம் கூறி உள்ளனர். ராஜ்குமார், தனது கடையில் சிசிடிவி கேமரா உள்ளது. அதில் பார்த்த பின் நடவடிக்கை எடுங்கள் எனக் கூறிய பின், அந்த காவலர்கள் இதை பெரிதுப்படுத்த வேண்டாம் எனக் கூறி கஞ்சாவை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகார் மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் வழக்கு பதிவு செய்யவில்லை. மது விலக்கு பிரிவு காவலர் விக்னேஷ், ராஜ்குமாரின் கடையில் போதை பொருள் வைப்பதற்கு உடந்தையாக இருந்துவிட்டு, தான் தப்பிப்பதற்காக அவரே புகார் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மதுபானக் கடையில் செயல்பட்ட பார் உரிமையாளருக்கு உடந்தையாக மதுவிலக்கு காவல்துறையினர் ஏற்கனவே தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர்.

சமூக அக்கறையுடன் மதுபானக் கடை எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியாய் செயல்பட்ட ராஜ்குமார் மீது பழி தீர்க்கும் நோக்குடனே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கு உடந்தையாக மதுவிலக்கு காவல் துறையினர் இருந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.