அணு கனிமக் கல் சுரங்க அனுமதி நீட்டிப்பா? சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்
2 Jul 2026, 9:24 pm

அணு கனிமக் கல் சுரங்க அனுமதி நீட்டிப்பா? சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்

கோவை, ஜூலை 2 – அணு கனிமக் கல் சுரங்கத்திற்கான அனுமதியை மாநில அரசு நீட்டித்திருப்பது மிகத் தவறான நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.

கோவையில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தலில் திமுக அணியின் வெற்றிக்காக நாங்கள் உழைத்தோம், ஆனால் தேர்தல் முடிவு மாறிவிட்டது என பெ.சண்முகம் தெரிவித்தார். தற்போது சிபிஎம், சிபிஐ மற்றும் சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சிகள் இணைந்து ‘இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு’உருவாக்கியுள்ளோம் என்றும், இந்த அணி மக்களின் நலனுக்காக மட்டுமே தனித்துச் செயல்படும் என்றும் அவர் விளக்கினார். அதேபோல், மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதில் உடன் பாடு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், காவிரிப் பிரச்சனையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி பொதுக்கருத்தை உருவாக்குவதே தமிழ்நாட்டின் மரபு என வலியுறுத்தினார்.

கல்வி மற்றும் கட்டணக் கொள்ளை

ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையைத் திணித்தாலும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர வேண்டும் என பெ.சண்முகம் கூறினார். தனியார் கல்வி நிறுவனங்களின் பல லட்ச ரூபாய் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதலாக வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு முறைகேடுகளால் மாணவி கீர்த்தனா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகப்பெரிய துயரம் என்றார்.

மேலும், ஒப்பந்த மற்றும் வெளிமுகமை (Outsourcing) நியமன முறையைத் தொடர்ந்து எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ‘சிங்கப் பெண் படை’ காவலர்களுக்குப் பிரத்தியேகப் பயிற்சிகள் தேவை என்பதை முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.