சிபிஎம் மதுரை மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் மறைவு - சிபிஎம் இரங்கல்
27 Apr 2026, 4:45 pm

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பினரும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், மதுரை மாநகராட்சியின் 23ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.குமரவேல் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:

"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பினரும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், மதுரை மாநகராட்சியின் 23ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான தோழர் டி.குமரவேல் திடீர் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் டி.குமரவேல் ஆரம்ப காலத்தில் எவர்சில்வர் பட்டறை தொழிலாளியாக பணிபுரிந்தவர். 1981ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றியவர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வந்தார். கட்சியின் புதூர் அண்ணாநகர் பகுதிக்குழுவின் செயலாளராகவும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியவர். எளிய மக்களின் நலன்களுக்காகவும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும் பல்வேறு இயக்கங்களை தலைமையேற்று நடத்தியவர். கைத்தறி தொழிலாளர்களின் போராட்டங்களில் பங்கேற்று கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் செல்லூர் 23ஆவது வார்டில் இருந்து மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் இடமளிக்காமல் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று செயல்பட்டவர். இவரது அப்பழுக்கற்ற மக்கள் பணிக்காக பல்வேறு அமைப்புகளின் சார்பில் விருதுகளையும் பெற்றவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி தோழர் லீலாவதிக்கும், மகன்கள் பாலசுப்பிரமணி, கார்த்தி ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது."