ஹைதராபாத்தில் ட்ரம்ப் பெயரில் சாலை - சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கண்டனம்!
17 Jun 2026, 4:05 pm

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் சாலை திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

"வியட்நாமில் அமெரிக்கா நடத்திய போரின் உச்சக்கட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியான ஹோ சி மின்-னை கௌரவிக்கும் வகையில், கொல்கத்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே இருந்த ஹாரிங்டன் தெருவிற்கு 'ஹோ சி மின் சரணி' என்று இந்தியா பெயர் மாற்றம் செய்தது. ஆனால் இன்று, ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட அமெரிக்கா, ஈரான் மீதான போர், காசாவில் இனப்படுகொலை, வெனிசுலாவில் ராணுவத் தலையீடு மற்றும் கியூபாவுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள சூழலில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகிலுள்ள சாலைக்கு டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரைச் சூட்ட இருகிறார். மனிதகுலத்திற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரின் தற்போதைய முகமாகவும், நம் காலத்தின் ஹிட்லராக மாற விரும்பும் ஒருவராகவும் விளங்கும் ட்ரம்ப்பை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்புதான், அமெரிக்கக் கடற்படை ஆயுதமற்ற வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி மூன்று இந்திய மாலுமிகளைக் கொன்றது. தனது தாக்குதல்களைத் தொடரப்போவதாக அமெரிக்க அரசு மிரட்டி வரும் நிலையிலும், இந்தக் கோழைத்தனமான ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசு முறையான கண்டனத்தைப் பதிவு செய்யத் தவறிவிட்டது; மோடியும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்தியாவின் இறையாண்மையையும் சுயமரியாதையையும் விட்டுக் கொடுப்பதில் பாஜகவுக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை; இப்போது தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசுக்கும் அத்தகைய தயக்கம் இல்லை என்றே தோன்றுகிறது.

இந்த அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடம் கவனத்தில் கொண்டு, அதைத் திரும்பப் பெறுவதை உறுதிசெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறப்படும் கருத்துகள் வெறும் வார்த்தைகளுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.