குடியிருப்பாளர்களுக்குப் பட்டா வழங்கக் கோரி திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மாபெரும் போராட்டம்
6 Jan 2026, 4:23 pm

குடியிருப்பாளர்களுக்குப் பட்டா வழங்கக் கோரி திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மாபெரும் போராட்டம்

பெ. சண்முகம் எழுச்சி உரை!

திருத்துறைப்பூண்டி, ஜன. 6 - திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வகையான அரசு புறம்போக்கு நிலங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதலமைச்சருக்கு மனு கொடுக்கும் போராட்டம், ஜனவரி 5 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சிப் பேரணி திருத்துறைப்பூண்டி வேதை சாலை டாக்டர் அம்பேத்கர் சிலையிலிருந்து திரளான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்ற மாபெரும் ஊர்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக முழக்கமிட்டு வந்த இந்த ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. இப்போராட்டத்திற்கு நகரச் செயலாளர் கே. கோபு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன் முன்னிலை வகித்தார். போராட்டத்தைத் துவக்கி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, கே.என். முருகானந்தம், கே.பி. ஜோதிபாசு உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பெ. சண்முகம் வலியுறுத்தல் போராட்டத்தை நிறைவு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது: தமிழகத்தில் 75 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தாலும், இன்னமும் லட்சக்கணக்கான மக்கள் புறம்போக்கு நிலத்திலேயே பிறந்து அங்கேயே மடியும் அவலம் தொடர்வதற்கு இந்த பெருந்திரள் மக்களே சாட்சி. கடந்த மாதம் சென்னையில் பல லட்சம் குடும்பங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி நாம் நடத்திய போராட்டத்தின் பலனாக, மாநிலம் முழுவதும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் களம், குளம், நீர்நிலை, மந்தை என 26 வகையான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இதில் நத்தம் புறம்போக்கு தவிர மற்ற நிலங்களை வகை மாற்றம் செய்தால்தான் பட்டா வழங்க முடியும். கடந்த 2024 அக்டோபரில், நகராட்சி பகுதிகளில் பட்டா வழங்க 1962 முதல் இருந்த தடையை (Belt Area) இந்த அரசு நீக்கியுள்ளது பாராட்டுக்குரியது. இப்போது எஞ்சியிருக்கும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களை, பல தலைமுறைகளாக மக்கள் வசிக்கும் நிலையை உணர்ந்து, நத்தம் புறம்போக்காக வகை மாற்றம் செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். அதிகாரிகள் தானாக முன்வந்து செய்யாத காரணத்தாலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வீதியில் இறங்கிப் போராடுகிறது. கோவில் நிலங்கள் கோவில் நிலங்களைப் பொறுத்தவரை, நாங்கள் அவற்றை இலவசமாகக் கேட்கவில்லை. ‘சிவன் சொத்து குலநாசம்’ எனப் பழமொழி பேசும் கும்பல்கள், மறுபுறம் கோவில் சிலைகளையும் சொத்துக்களையும் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்களின் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டுள்ளது. கேரளாவில் இடதுசாரி ஆட்சியில் இ.கே. நாயனார் முதலமைச்சராக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட முன்மாதிரி திட்டத்தைத் தமிழகமும் பின்பற்ற வேண்டும். நிலங்களைச் சந்தை விலைக்கு மக்களுக்கே கிரையம் செய்து, அந்தத் தொகையை வங்கியிலிட்டு அதன் வட்டியிலிருந்து கோவில் காரியங்களைத் தடையின்றி நடத்தலாம். ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கும்பல் கடவுளைக் காப்பதாகக் கூறிக்கொண்டு, ஏழை பக்தர்களை நடுத்தெருவில் நிறுத்த நினைக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 318-வது அரசாணைக்குச் சேலத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நபர் நீதிமன்றம் சென்று தடை பெற்றார். இவர்கள் இந்து அறநிலையத் துறையையே ஒழிக்கத் துடிக்கிறார்கள். இத்துறை அதிகாரிகளில் நூறு சதவீதம் இந்துக்களே பணியாற்றினாலும், இவர்களால் அத்துறையை ஏற்க முடிவதில்லை. இத்தகைய முட்டுக்கட்டைகளைத் தாண்டி ஏழை மக்களின் வாழ்வுரிமையை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை; உறுதிமொழி இதனைத் தொடர்ந்து, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆயிரக்கணக்கான பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1112 கோரிக்கை மனுக்களை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) பி. கலைவாணியிடம் நேரில் ஒப்படைத்தார். அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் முதற்கட்டமாக 519 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் குறித்து உடனடியாகக் குழு அமைத்து விசாரணை நடத்தி, தகுதியுள்ள அனைவருக்கும் பாரபட்சமின்றி பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் உறுதியளித்தார். இந்த வெற்றிகரமான போராட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சாமிநாதன், ஆறு. பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் காரல் மார்க்ஸ், நகர்மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.