என்.டி.ஏ, தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்திடுக! - சிபிஎம்
17 Aug 2026, 7:25 pm

யுஜிசி நெட் தேர்வில் 3 வினாத்தாள்களில் குளறுபடிகளின் பின்னணியில், கல்வி அமைப்பின் சீரழிவுக்கு மூல காரணமாக விளங்கும் தேசியத் தேர்வுக் முகமையை கலைத்து, தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“தேசிய தேர்வு முகமை நடத்திய மூன்று யுஜிசி-நெட் தேர்வு வினாத்தாள்களில் ஏற்பட்ட பிழைகளின் பின்னணியில், இந்தியக் கல்வி அமைப்பின் சீரழிவுக்கான அடிப்படைக் காரணமான தேசிய தேர்வு முகமை மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்ய வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

இந்த வெட்கக்கேடான சம்பவம், இந்தியக் கல்வி அமைப்பில் வேரூன்றியுள்ள சீரழிவை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மேலும், இத்தகைய தேர்வுகளை நடத்துவதில் என்டிஏ-வின் மோசமான திறனின்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது.

வருந்தத்தக்க வகையில், தேசிய கல்விக் கொள்கையின் பேரழிவுகரமான விளைவுகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அந்த அமைப்பை கேள்விக்குட்படுத்துபவர்களையே பாஜகவும் அதன் இணை அமைப்புகளும் குறிவைத்து வருகின்றன. மேற்கு வங்க மாநிலம் பாங்குராவில் உள்ள ஒரு உள்ளூர் பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததை சுட்டிக்காட்டியதற்காக மட்டும் ஜனாப் மாஃபிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அவர்களின் சகிப்பின்மையின் உச்சக்கட்டமாகும்.

இந்தப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை பாஜக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களிலும் போதுமான ஆசிரியர்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமையாகும். கல்வி கட்டமைப்பை மேம்படுத்துதல், பொதுக் கல்வியை வலுப்படுத்துதல், வெளிப்படையான மற்றும் குறைபாடற்ற தேர்வுகளை நடத்துதல் ஆகியவற்றில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

வெற்று அறிவிப்புகளாலும் அடக்குமுறை நடவடிக்கைகளாலும் அல்ல; இத்தகைய உறுதியான நடவடிக்கைகள் மூலமே மாணவர்களை உண்மையாக வலுப்படுத்த முடியும்.” இவ்வாறு தெரிவித்துள்ளது.