சின்னநெற்குணம் ஊராட்சியில் ஊழல்
27 Nov 2025, 3:11 pm
<p>விழுப்புரம், நவ.28 – மயிலம் ஊராட்சி ஒன்றியம், சின்ன நெற்குணம் ஊராட்சியில் தலைவர் மற்றும் அதிகாரிகள்மீது பல திட்டங்களில் கூட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதைக் கண்டித்து, சிபிஎம் சார்பில் கூட்டேரி பட்டில் உள்ள மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில், போடாத பைப்லைனுக்கு ரூ. 6.41 லட்சம், கட்டாத சிமெண்ட் சாலைக்கு ரூ. 30.47 லட்சம், பழங்குடி மக்கள் பகுதியில் கழிப்பறை கட்டிடத்தில் ரூ. 5.25 லட்சம் உட்படப் பல திட்டங்களில் நிதி கையாடல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது, விளை யாட்டுச் சாமான்கள் விற்பனை, தரமற்ற சாலைகள் அமைத்தது, மற்றும் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் குலதெய்வக் கோவில் கட்டியது போன்ற பல முறைகேடுகள் நடந்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்குக் காரணமான ஊராட்சி மன்றத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர்கள் ஜான்சி ராணி, ராதா, மற்றும் ஊராட்சி செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ். காளிதாஸ் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் டி.கெஜமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்கும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
