விலைவாசி உயர்வு, கிராமப்புற வேலை உறுதித் திட்ட முடக்கத்தை எதிர்த்து களம் காணும் மார்க்சிஸ்ட் கட்சி
12 Jun 2026, 9:12 pm

விலைவாசி உயர்வு, கிராமப்புற வேலை உறுதித் திட்ட முடக்கத்தை எதிர்த்து களம் காணும் மார்க்சிஸ்ட் கட்சி

மாபெரும் வெற்றி பெறச் செய்ய பெ.சண்முகம் அழைப்பு

தென்காசி, ஜூன் 12- ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கை கள், விலைவாசி கடும் உயர்வு, கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்ட முடக்கம் மற்றும் தென் மாவட்டங் களில் அதிகரித்து வரும் சாதிய வன்முறைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் ஜூன் 19 அன்று தமிழகம் முழு வதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது எனவும், கட்சி அணிகள் பெருந்திரளாக பங்கேற்பீர் எனவும் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அழைப்பு விடுத் துள்ளார்.

தென்காசியில் ஜூன் 9, 10 தேதிகளில் நடை பெற்ற கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தின் நிறை வாக பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், பொதுமக்கள் சந்தித்து வரும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினை களை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கைகளை விடுத்தார்.

சர்வதேச மோதல்களும் இந்திய விலைவாசி உயர்வும்

பொதுக்கூட்டத்தில் பேசிய பெ. சண்முகம், பெட் ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை நாளுக்கு நாள் அபரிமிதமாக உயர்ந்து வரு வதைச் சுட்டிக்காட்டினார். பிப்ரவரி 28 அன்று துவங்கி 100 நாட்களைக் கடந்து நீடித்து வரும் அமெரிக்கா - ஈரான் இடையேயான சர்வதேச மோதல் களால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் விநியோகத் தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் விளைவாக உள்நாட்டில் பொதுமக்கள் கடுமையான பொருளாதாரச் சுமையைச் சந்தித்து வருவதாகக் கவலை தெரிவித்தார்.

“அமெரிக்கா தொடுத்துள்ள இந்த யுத்தத்தால் நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏழை எளிய மக்களின் கைமீறிப் போயுள்ளது,” என்று அவர் சாடினார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் மத்திய, மாநில அரசு கள் தங்களுக்குக் கிடைக்கும் வருவாயில் இருந்து லிட்டருக்கு தலா 5 ரூபாய் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

விபிஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிர்ப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) ஒன்றிய பாஜக அரசு திட்ட மிட்டுச் சீர்குலைத்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், தற்போது அத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புதிய நிபந்தனைகளுடன் கொண்டு வரப்பட்டுள்ள விபிஜி ராம்ஜி திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்

ஒன்றிய அரசு 60 சதவீத நிதியையும், மாநில அரசு 40 சதவீத நிதியையும் பகிர்ந்துகொள்ள வேண் டும் என்ற புதிய சட்டத் திருத்தத்தால் இத்திட்டம் முற்றி லும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறப் பெண்கள், முதியவர்கள் மற்றும் விதவைப் பெண்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு, அவர்கள் அண்டை மாநிலங்களுக்குப் புலம்பெயரும் அவலநிலை மீண்டும் உருவாகியுள்ளது என்றார். ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு வெறும் 95,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பழைய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தையே எவ்வித மாற்றமுமின்றித் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களும் தமிழக அரசின் கடமையும்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் தொழிலாளர் களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பெ. சண்முகம், இச்சட்டங்களுக்கான விதிகளைத் தமிழக அரசு உருவாக்கும்போது தொழிற்சங்கங்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும் என்றார்.

தமிழக மக்கள் பெரும் நம்பிக்கையுடன் தமிழக வெற்றிக் கழகத்தைத் தேர்ந்தெடுத்துள்ள நிலை யில், தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முதலாளி களுக்குச் சாதகமான விதிகளைத் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகக் கூறி னார்.

மின்வெட்டுப் பிரச்சினையும் குற்றாலம் உள்கட்டமைப்பும்

மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினைக்குத் தமிழக அரசு மிக அவசரமாகத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பலத்த காற்றினால் மின்கம்பிகள் உரசி மின்விநியோகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சென்னையில் உள்ளதைப் போல குற்றாலம் போன்ற சர்வதேச சுற்றுலாத் தலங்களிலும் மின் இணைப்புகளைப் பூமிக்கடியில் கேபிள்கள் (Underground Cables) மூலமாக அமைப்பதற் கான உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்

சாதிய வன்முறைகளும் சந்துரு ஆணையப் பரிந்துரைகளும்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சமீபகாலமாக அதிகரித்து வரும் சாதிய வன்முறைகள் மற்றும் பழிவாங்கல் கொலை கள் குறித்துப் பேசிய அவர், இதில் பெரும்பாலும் 16 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களே ஈடுபடு வது மிகுந்த கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த மே 29 அன்று நெட்டூர் மற்றும் மானூர் பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், குற்றவாளிகளுக்கு நீதிமன்றங் கள் எளிதாக ஜாமீன் வழங்குவதைத் தடுக்க அரசு வழக்கறிஞர்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றார்.

வன்முறை நடந்து பல நாட்களாகியும் பாதிக்கப் பட்ட நெட்டூர் கிராமத்திற்குத் தென்காசி மாவட்ட ஆட்சியரோ அல்லது காவல் கண்காணிப்பாளரோ நேரில் சென்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டாதது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு எதி ரானது என்று குற்றம் சாட்டிய அவர், அதிகாரிகள் உடனடியாக அங்கு செல்ல தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், கல்வி நிறுவனங்களில் சாதிய மோதல்களைத் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளைத் தமிழக அரசு உட னடியாக அரசாணையாக வெளியிட்டு அமல் படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மதச்சார்பின்மையைப் பாதுகாத்தல்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தி லும், பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாகப் பொது இடங் களில் விலங்குகளை வெட்டக் கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிலும், மக்களின் வழிபாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உறுதியான சட்டப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், மதவெறிச் சக்திகளுக்குத் தமிழகத்தில் இடம் தரக் கூடாது என்றும் பெ. சண்முகம் தனது உரையில் நிறைவாகக் கேட்டுக் கொண்டார்.