பாஜகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
27 May 2026, 11:23 pm

பாஜகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை, மே 27- கேரளம் முன்னாள் முதல்வர் மற்றும் அவரது மகள் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனையும், பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளம் மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லம் மற்றும் அவரது மகளுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை எதிர்த்தும் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்து பேசிகையில், கடந்த 2020-21 காலகட்டத்தில் சிஎம்ஆர்எல் நிறுவனத்திற்கும், முதல்வர் பினராயி விஜயனின் மகள் பங்குதாரராக உள்ள எக்சாலஜிக் நிறுவனத்திற்கும் இடையே சட்டப்பூர்வமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி தான் தொகை பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றிய அரசின் பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி, இதில் முறைகேடு ஏதுமில்லை என்பதை உறுதி செய்தன.

பொய்யான புகார் என்பது நிரூபணமான பின்னரும், தற்போது காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில், கேரளாவில் பத்து இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

இந்த சோதனையின் முடிவில் எந்தவிதமான ஆவணங்களோ அல்லது பொருட்களோ கைப்பற்றப்படவில்லை.

முன்னாள் முதலமைச்சர் பதவியில் இருந்தும், அரசு இல்லத்தை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் வசித்து வரும் ஒரு தலைவரை அரசியல் ரீதியாக பழிவாங்கவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக கோவை மாவட்டக்குழு சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் பொய் வழக்குகளைப் பதிவு செய்வதை பாஜக அரசு நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய சோதனைகள் ஏதும் நடைபெறுவதில்லை.

ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், ஆர்.கோபால் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.