மின்வாரியத்தைத் தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு!
7 Oct 2026, 6:08 pm

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் தமிழக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அதனை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக ஒப்பந்தப் புள்ளிகளைக் (டெண்டர்) கோரி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது மின்சார வாரியத்தை முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கிற திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

மின்சார சட்ட திருத்த மசோதா இதுவரை நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு ஸ்மார்ட் மீட்டரை பொருத்துவதற்கான நிர்ப்பந்தங்களை அனைத்து மாநில அரசுகள் மீதும் திணித்து வருகிறது.

2023-ஆம் ஆண்டு திமுக அரசு இத்தகைய ஒப்பந்த புள்ளிகளை கோரிய போது மார்க்சிஸ்ட் கட்சி அதனை கடுமையாக எதிர்த்தது. திமுக அரசும் அதனைத் திரும்ப பெற வேண்டி வந்தது. தற்போது தவெக அரசும் அதே பாதையில் பயணிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 மண்டலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிற பணியினை துவக்கி உள்ளது. கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு இருந்தபோது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை அரசு நிறுவனமே தனது மூலதன செலவில் (Capex முறை) சோதனை ஓட்டம் மூலமாக துவக்கியது. ஆனால், தமிழ்நாட்டில் ஒப்பந்த புள்ளிகள் தனியாரிடமிருந்து வரவேற்கப்பட்டு (Totex முறை) செய்யப்படுவதால் இது தனியார் மயத்திற்கான நகர்வாகவே உள்ளது என்பது தெளிவு. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகக் கடுமையானவையாக இருக்கும். முழுக்க முழுக்க மின்சார சேவையை சந்தையின் சூதாட்டத்திற்கு ஒப்படைப்பதே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

தற்போது நடைமுறையில் உள்ள 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், சிறு குறு தொழில்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், கைத்தறி நெசவு தொழிலுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குறுக்கு மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் கேள்விக்குறியாக்கப்படும். மின்சாரக் கட்டணம், விநியோகம் மீதான அரசின் கட்டுப்பாடும் கை கழுவப்படும். வணிக நிறுவனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் உச்ச நேரக் கட்டணங்கள் (ஞநயம hடிரச சயவநள) வீடுகள் மீதும் திணிக்கப்படும். இது தவிர மாநில உரிமைகள், சமூக நீதி, வேலைவாய்ப்புகள் மீதும் கடுமையான பாதிப்புகளை தனியார் மயம் ஏற்படுத்தும்.

ஆகவே, அரசின் இத்தகைய முடிவு எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. ஒன்றிய அரசின் நிர்பந்தத்திற்கும், நவீன தாராளமய பொருளாதாரப் பாதையின் அழுத்தத்திற்கும் பணிகிற இம்முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.