தொழிலாளி வர்க்கம் எனும் பெரும் படையே சுரண்டலுக்கு எதிராக ஆர்ப்பரித்து வா! - மார்க்சிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து
30 Apr 2026, 12:20 pm

இன்றும் உலகம் உயிர்ப்புடன் இயங்கிட கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"உழைப்பவருக்கே உலகம் உரியது என்று எட்டுத் திசையிலும் கொட்டி முழக்கமிடுவதே மே தினமாகும். எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்பதைக் குருதி சிந்தி, உயிர் நீத்துப் போராடிப் பெற்றுக் கொடுத்த தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான தியாகிகளுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றும் உலகம் உயிர்ப்புடன் இயங்கிட கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் விண்ணைத் தாண்டி வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்து வருகின்றன. இத்தகைய வளர்ச்சிகள் அனைத்தையும் தன்வயப்படுத்தி லாபமீட்டும் முதலாளித்துவ வர்க்கம் மிகக் கொடூரமான சுரண்டலைத் தொழிலாளர்கள் மீதும், வெகுஜன மக்கள் மீதும் தொடுத்து வருகிறது. இதன் வெளிப்பாடே உலகம் முழுமையும் பில்லியனர்கள் எண்ணிக்கை 3000-த்தைக் கடந்திருப்பதும், இந்தியாவில் அது 300-ஐத் தொட்டிருப்பதும் ஆகும்.

முதலாளித்துவத்தின் சுரண்டல் இந்திய மண்ணில் தங்குதடையின்றி நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டையே காணிக்கையாக்கி வருகிறது. 1961-ல் இந்திய முதலாளிகளில் டாப் 1 சதவீதப் பணக்காரர்களின் கையில், 11.9 சதவீத சொத்துக்கள் இருந்தன. இன்றோ கார்ப்பரேட் ஆதரவு மோடியின் ஆட்சியில் இந்திய டாப் 1 சதவீத முதலாளிகளின் கைகளில் 70 சதவீத சொத்துக்கள் போய்ச் சேர்ந்திருக்கின்றன.

இந்தியாவின் இயற்கை வளங்களையும், வற்றாத ஜீவ நதிகளையும், கனிமச் சுரங்கங்களையும், அடர் காடுகளையும், ஏன் கடல் வளத்தையும் கூட கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்து வருகிறது ஒன்றிய மோடி அரசு. இதனால் மட்டும் திருப்தியடைந்து விடுமா முதலாளித்துவ வர்க்கம்? அதன் அகோர கொள்ளைப் பசிக்கு மலிவான மனித உழைப்பும் வேண்டுமல்லவா? எனவேதான் கார்ப்பரேட்டுகளின் கட்டளைக்கு அடிபணிந்து ஒன்றிய அரசு, இந்திய தொழிலாளி வர்க்கம் 100 ஆண்டு காலம் போராடிப் பெற்ற உரிமைகளையும், தொழிலாளர் நலச் சட்டங்களையும் காவு வாங்குகிறது. அனைத்து மாநில அரசுகளையும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க நிர்ப்பந்தப்படுத்துகிறது.

வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணிச்சுமை, பற்றாக்குறை, வறுமை என இந்தத் தேசத்தின் ஒட்டுமொத்த அவலங்களையும் இந்திய உழைக்கும் மக்களும், வெகுஜன மக்களுமே சுமக்கிறார்கள். இதனோடு சேர்ந்து உலக முதலாளித்துவம் தனது லாப வெறிக்காக நடத்தி வரும் யுத்தங்களின் விளைவுகளும் பொதுமக்களின் தலை மீது இடியாக இறங்குகின்றன.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் காரணம் முதலாளித்துவமும், அதன் சுரண்டலுமே ஆகும். முதலாளித்துவத்தால் நெருக்கடிகளை ஒருபோதும் தீர்க்க முடியாது. கல்வி, வேலை, உணவு, சுகாதாரம், வாழ்விடம் என்கிற மனித வாழ்வின் தேவைகள் அனைத்தையும் தொழிலாளி வர்க்கம் போராடித்தான் பெற்றிருக்கிறது.

பாடுபடும் பாட்டாளி வர்க்கம் இதுவரை போராடிப் பெற்றிட்ட உரிமைகளைப் பாதுகாத்திடவும், இழந்ததை மீளப் பெறவும், சாதி, மதம், இனம், மொழி கடந்து தொழிலாளர்களாய் ஒன்று சேர்வதும், உரிமைகளுக்காக விண்ணதிர முழங்கிடுவதுமே மே தினம் விடுக்கும் அறைகூவல் என்பதை உணர்வோம்.

இன்றும் தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் அனைத்துத் துறைகளிலும் தற்காலிகப் பணி, தொகுப்பூதியம், மதிப்பூதியம், கேசுவல், கான்ட்ராக்ட், தினக்கூலி என்கிற பெயரால் நடைபெறுகிற உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி வருகிற அனைத்துத் தரப்பு தொழிலாளர்களோடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

தொழிலாளி வர்க்கம் எனும் பெரும் படையே சுரண்டலுக்கு எதிராக ஆர்ப்பரித்து வா! நமக்கான பொன்னுலகம் ஒன்றை நம்மால் தான் உருவாக்கிட முடியும். உழைப்பாளர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.