கிரேட் நிக்கோபார் பெருந்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்! ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்'
21 May 2026, 9:14 pm

கிரேட் நிக்கோபார் பெருந்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்! ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்'

ஸ்ரீவிஜயபுரம் (போர்ட் பிளேர்), மே 21 - அந்தமான் நிக்கோபார் தீவு களின் சுற்றுச்சூழல் சமநிலையை சீர்குலைக்கும் வகையிலும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலும் திட்டமிடப் பட்டுள்ள ரூ. 74 ஆயிரம் கோடி மதிப்பிலான ‘கிரேட் நிக்கோபார் தீவு (GNI) பெருந்திட்டத்தை’ உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று, ஒன்றிய அரசு மற்றும் அந்தமான் நிக்கோபார் நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தமான் - நிக்கோபார் மாநில அமைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தாமல், முறையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கை களை உறுதி செய்யாமல், நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடரக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதார சீர்குலைவு

க்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநருக்கு, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் டி. அய்யப்பன் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், அந்தமான் - நிக்கோபார் தீவின் சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் மீது, குறிப்பாக பழங்குடி இனத்தவர் மீது இந்த மெகா உள்கட்டமைப்பு திட்டம் ஏற்படுத்தப் போகும் மோசமான பாதிப்புகள் குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எழுப்பியுள்ள அச்சங்களை, ஒன்றிய அரசு முற்றிலும் புறக்கணித்துவிட்டு, ஒருதலைப்பட்சமாக இத்திட்டத்தை அமல்படுத்த துடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2026 மார்ச் 12 அன்று சிபிஐ(எம்) பிரதிநிதிகள் குழு கிரேட் நிக்கோபார் தீவிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதை அடுத்து இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டம் நிக்கோபாரி பழங்குடியினரின் பாரம்பரிய வாழ்விடங்களை அழிப்பதுடன், உலகில் வேறு எங்கும் காணப்படாத அரிய வகைத் தாவரங்கள் மற்றும் லட்சக்கணக் கான மரங்களை வெட்டி வீழ்த்துவ தற்கு வழிவகுக்கும் என்று கடிதத்தில் சிபிஐ(எம்) எச்சரித்துள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் சட்ட விதிமீறல்கள்

மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டத்தின்படி (2013), பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையான இழப்பீடும் மறுவாழ்வுத் திட்டமும் வகுக்கப்பட வேண்டும். ஆனால், லட்சுமி நகர் கிராமப் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சாஸ்திரி நகர் மற்றும் காந்தி நகர் கிராமங்களில் வாழும் நூற்றுக்கணக்கான மக்கள், தகுந்த இழப்பீடு இன்றி வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித மறுவாழ்வுத் திட்டத்தையும் தயாரித்து வெளியிடவில்லை. இது சட்டப்பிரிவு 16(2)-இன் கீழ் அப்பட்டமான விதிமீறல் ஆகும் என சிபிஐ(எம்) சுட்டிக்காட்டியுள்ளது.

ஒருதலைப்பட்சமான முடிவும் கார்ப்பரேட் மயமும்

ஒன்றிய அரசானது, நிக்கோபார் தீவு மக்களிடமோ, தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளிடமோ அல்லது அரசியல் கட்சிகளிடமோ எந்தவொரு ஆலோசனையையும் நடத்தாமல் இத்திட்டத்தை தன்னிச்சையாக அறிவித்துள்ளது. மேலும், உள்துறை அமைச்சரின் ஆலோசனைக் குழு (HMAC), அந்தமான் - நிக்கோபார் நிர்வாகியின் ஆலோசனைக் குழு போன்ற அமைப்புகள் பல ஆண்டுகளாகச் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப் படும் உள்கட்டமைப்புகள் அரசு கட்டுப்பாட்டில் இருக்குமா அல்லது இறுதியில் தனியார் கார்ப்பரேட் நிறு வனங்களின் வசம் ஒப்படைக்கப் படுமா என்பது குறித்தும், இத்திட்டம் முடிவடைவதற்கான காலக்கெடு குறித்தும் எவ்வித தெளிவும் அரசாங்கத்திடம் இல்லை.

அற்பமான இழப்பீடும் சந்தை மதிப்பு மோசடியும்

ந்தமான் நிர்வாகம் நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பை திட்டமிட்டு குறைத்து நிர்ணயம் செய்துள்ளதாக சிபிஐ(எம்) குற்றம் சாட்டியுள்ளது. நவம்பர் 2024 அறிவிப்பின்படி, சாஸ்திரி நகரில் சதுர மீட்டருக்கு ரூ. 113 என்றும், காந்தி நகரில் ரூ. 131 என்றும் மிகக் குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது வட அந்தமானின் உட்புற கிராமங்களான ஜெகந்நாத தேரா (ரூ. 263) போன்ற பகுதிகளை விட மிகக் குறைவானதாகும்.

சர்வதேச கப்பல் போக்குவரத்து முனையம் மற்றும் சுற்றுலா மேம்பாடு காரணமாக நிலத்தின் மதிப்பு உயரும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், மக்களுக்கு உரிய இழப்பீட்டை மறுப்பதற்காகவே அரசாங்கம் திட்டமிட்டு இந்த விலைக் குறைப்பைச் செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்ட வெறும் 50 சதுர மீட்டர் நிலம் மட்டுமே வழங்கப்படும் என்ற நிர்வாகத்தின் திட்டத்தை நில உரிமையாளர்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.

திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரிக்கை

அண்மையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இத்தீவிற்கு நேரில் வந்து, இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து தனது கடுமையான கவலைகளைப் பதிவு செய்திருந்ததையும் சிபிஐ(எம்) சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்த ஆபத்தான பெருந்திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து விரிவான மறுஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தீவு மக்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்தும் வரை நிலம் கையகப்படுத்தும் அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் சிபிஐ(எம்) ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது. (லெப்ட் வியூஸ்)