பயோமெட்ரிக், வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை சிபிஎம் கண்டனம்!
2 hours before

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் அட்டைக்குப் பதிலாக பயோமெட்ரிக் தரவுகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

“நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான அடையாள ஆவணமாக ஆதார் அட்டைக்குப் பதிலாக பயோமெட்ரிக் அடையாளமும் வாக்காளர் அடையாள அட்டையும் (EPIC) பயன்படுத்தப்படும் என்று ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இது கிராமப்புற ஏழைகள் மீதான மேலும் ஒரு தாக்குதலாகும்.

கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களில் பயோமெட்ரிக் அங்கீகார முறையால் விவசாயத் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவது ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. இயந்திரங்களால் கருவிழிகளைச் சரியாகப் பதிவு செய்ய முடியாததால் வயதான பெண் தொழிலாளர்கள் பலர் நலத்திட்டப் பலன்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். அதேபோல், கடின உழைப்பால் தேய்ந்துபோன கைரேகைகளைப் பயோமெட்ரிக் கருவிகள் அடையாளம் காணத் தவறுவதால் கூலித் தொழிலாளர்களும் திட்டங்களிலிருந்து விலக்கப்படுகின்றனர். மேலும், மின்னணு கேஒய்சி (e-KYC) நடைமுறைக்கு ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான கிராமப்புறக் குடும்பங்களிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை.

ஆதார் கட்டாயமல்ல; விருப்பத்தின் அடிப்படையிலானதுதான் என்று உச்சநீதிமன்றத்திடம் முன்பு உறுதியளித்த ஒன்றிய அரசு, பின்னர் மறைமுகமாக அனைத்துப் நலத்திட்டங்களிலும் ஆதாரைக் கட்டாயமாக்கியது. எந்தக் குறைபாடும் இல்லாத முழுமையான அடையாள முறை என்று ஆதாரைப் பெருமைப்படுத்திய அதே அரசு, இப்போது அதைக் கைவிடுகிறது.

வாக்குரிமையைப் பறிக்கும் வகையிலான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையுடன் இணைத்தே இந்த முடிவைப் பார்க்க வேண்டும். இது வாக்குரிமை மீதான ‘அறுவைச் சிகிச்சைத் தாக்குதல்’ மட்டுமல்ல; பெருமளவிலான மக்களின் வாக்குரிமையை முறையாகப் பறிக்கும் நடவடிக்கையாகும். இதுவரை 13.4 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் விளிம்புநிலை மக்கள், முஸ்லிம்கள், பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நலத்திட்டப் பலன்களைப் பெற வாக்காளர் அடையாள அட்டையைக் கட்டாயமாக்குவது, இத்திட்டங்களிலிருந்து மேலும் பலரை விலக்குவதற்கே வழிவகுக்கும். ஏற்கெனவே சில மாநில அரசுகள், SIR நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டதைக் காரணம் காட்டி, ரேஷன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மறுத்து வருகின்றன. சமூக நலத்திட்டப் பலன்களைப் பெறுவதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருப்பது அவசியமில்லை என்றும், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுவது சமூக நல உரிமைகளைப் பாதிக்காது என்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு இது முற்றிலும் எதிரானதாகும்.

மக்களில் பெரும்பான்மையானோருக்கு அரசின் நலத்திட்டப் பலன்கள் கிடைக்காமல் தடுப்பதற்கான திட்டமிட்ட முயற்சிகளாகவே இத்தகைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

எனவே, கிராமப்புற ஏழைகளுக்கு எட்டாத தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஆவணங்களை நிபந்தனைகளாகத் திணித்து நலத்திட்டப் பலன்களை மறுக்கும் இந்த விலக்கல் நடவடிக்கையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது. எவ்வித தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளோ, ஆவண நிபந்தனைகளோ இன்றி அனைவருக்கும் நலத்திட்ட உரிமைகள் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.