5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பான அரசியல் சூழலும் இந்தியா அணி பற்றிய சிபிஎம் அணுகுமுறையும் - எம்.ஏ.பேபி
17 Jun 2026, 8:46 pm

5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பான அரசியல் சூழலும் இந்தியா அணி பற்றிய சிபிஎம் அணுகுமுறையும் - எம்.ஏ.பேபி

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்று முடிந் துள்ளது. அக்கூட்டத்தில் தேசிய அரசியல் நிகழ்வுகளில் முன்னுக்கு வந்துள்ள முக்கியமான சில போக்குகளைப் பற்றிப் பின்வருமாறு கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு கள் அரசியல் அமைப்பின் மீது ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிடிமானத்தை மேலும் பலப்படுத்தி யுள்ளது. மேற்குவங்கத்தில் பாஜகவின் வெற்றி இடதுசாரி, முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். தேர்தல் ஆணையம் போன்ற அரசமைப்புகள் தேர்தல் நடை முறைகளின் தூய தன்மையை சீர்குலைத்து, வெளிப்ப டையாகவே ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் சென்றன. மேற்குவங்கம், அசாம் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையின் கீழ் வலதுசாரி வகுப்புவாத சக்திகள் மேலாதிக்க நிலைக்கு உயர்ந்திருப்பதை வெளிப் படுத்துகின்றன. இது அனைத்து மதச்சார்பற்ற, முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகள் ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய விஷயமாகும்.”

24ஆவது அகில இந்திய மாநாட்டு அறிக்கை

இந்த தற்போதைய அரசியல் பின்னணியில்தான் ‘இந்தியா’ அணிசேர்க்கை (INDIA bloc) இன்னும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பாஜகவைத் தனிமைப்படுத்தி முறியடிப்பதற்காக நாம் எடுத்த அணுகுமுறை சரியானது என்பதையே நமது கட்சி யின் 24ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் பரிசீலனை அறிக்கை அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது:

“மதச்சார்பற்ற சக்திகளை மிகப்பரந்த அளவில் திரட்டுவதற்காக நாம் செயல்பட்டோம். மக்களவைத் தேர்தலில் நாம் கடைப்பிடித்த தேர்தல் உத்திதான் ‘இந்தியா’ அணிசேர்க்கை உருவாகக் காரணமாக இருந்தது. இக்கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் மாநில ரீதியாகத் தொகுதிப் பங்கீடு செய்து கொண்டது, தனித்தனியான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டது மற்றும் ‘இந்தியா’ அணிக்கென நிரந்தரமான அமைப்பு சார்ந்த கட்டமைப்பு ஏதும் இல்லாமல் செயல்பட்டது ஆகிய அனைத்தும் சரியானவையே என்று நிரூபணமாகியுள்ளது. இந்தத் தேர்தல் ரீதியான ஒருங்கிணைப்புதான், அது ஒரு பகுதி அளவினதாக இருந்தாலும், பாஜகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தி யது. பாஜக தனிப்பெரும் பெரும்பான்மை பெற முடியா மல், மக்களவையில் 240 இடங்களை மட்டுமே பெற்று 63 இடங்களை இழந்தது. அதேநேரத்தில், இந்தியா அணியில் அங்கம் வகித்த கட்சிகள் 234 இடங்களைப் பெற்றதன் மூலம் எதிர்க்கட்சிகளின் பலம் கணிசமான அளவில் வலுப்படுத்தப்பட்டது.”

நமது எச்சரிக்கை அணுகுமுறையும் காங்கிரசின் வர்க்க குணாம்சமும்

அதேசமயம், மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, இந்தியா அணியில் ஒரு பகுதியாக இருக்கும் அதே வேளையில், அதன் மீதான நமது அணுகு முறையை ஒரு எச்சரிக்கை உணர்வோடுதான் கையாண்டு வருகிறோம். 24 ஆவது மாநாட்டு அரசியல் பரிசீலனை அறிக்கை குறிப்பிடுவது போல: “இந்தியா அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளோடு நமக்கு இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில், நம்முடைய அணுகுமுறையையும் நடைமுறை உத்தி யையும் மிகக் கவனமாக நாம் வகுக்க வேண்டும்; இந்தியா அணியின் செயல்பாடுகளைக் காட்டி, கட்சி யின் சுயேச்சையான பாத்திரத்தையும் (independent role) சொந்த நடவடிக்கைகளையும் பலியிடும் எத்த கைய போக்கையும் நாம் முறியடிக்க வேண்டும். இந்தியா அணியின் பிரதான கட்சியாக இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியின் வர்க்க குணாம்சம் (class character) பற்றி நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களின் தேசியப் பொருளா தாரக் கொள்கைகளாக முன்வைக்கும் அல்லது அவர்க ளின் மாநில அரசுகளால் தீவிரமாகப் பின்பற்றப்படும் புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் கூறுகளிலிருந்து நாம் முற்றிலும் வேறுபட்டு நிற்க வேண்டும். அதேபோல், இந்துத்துவா வகுப்புவாதப் பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சி எடுக்கும் எத்த கைய சமரச நிலைப்பாட்டையும் நாம் விமர்சன ரீதியாக அணுக வேண்டும்.”

காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பப்பட்ட கடிதம்

இந்தத் தத்துவார்த்தப் பார்வையோடுதான், கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி தில்லியில் நடை பெற்ற இந்தியா அணியின் கூட்டத்திற்கு முன்னோ டியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் பொதுச் செயலாளர் என்ற முறையில், காங்கி ரஸ் கட்சியின் தலைவருக்கு நான் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். எதிர்க்கட்சி அணி சேர்க்கையின் பெரிய கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், இந்தியா அணியின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் எடுக்கும் சில சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்து அக்கடிதத்தின் மூலமாகத் தெளிவு (clarification) கோரப்பட்டது.

குறிப்பாக, கேரளத்தில் சமீபத்தில் நடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் தலைமை கடைப்பிடித்த பிரச்சார உத்திகள் குறித்து நமது குறிப்பான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். சிபிஎம் மற்றும் பாஜக இடையே இரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்யப் பட்டது. “இது ஒரு அவதூறு, இதை நாம் சாதாரண மாக எடுத்துக் கொள்ள முடியாது. இது பாஜகவுக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்ட ஒற்றுமையின் அடிப் படை மீதே தாக்குதல் தொடுப்பதாகும். கேரளத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு எதிரான கடுமையான போராட்டங்களில் எங்களது நூற்றுக்கணக்கான தோழர்கள் தியாகிகளாகியுள்ளனர் என்பதை நீங்கள் உணர வேண்டும். மேலும், இந்தியாவில் பிற மாநிலங்க ளில் நடந்தது போல் அல்லாமல், கடந்த 10 ஆண்டுகால இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) ஆட்சிக் காலத்தில், கேரளத்தில் எவ்விதமான மதக் கலவரங்க ளும் நடைபெறவில்லை என்பது, மதச்சார்பின்மை மற்றும் மதநல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் எங்க ளுக்கிருக்கும் உறுதிப்பாட்டுக்கு சான்றளிக்கிறது” என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடிதத்தின் வாயிலாக பதில்கள் கோரப்பட்டன: “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அன்றைய கேரள முதல்வருக்கு எதிராக அம லாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் வலியுறுத்தினார். இந்தப் பிரச்சாரத்தை பாஜகவிற்கு எதிரான நிலைப் பாடு என்று அழைக்க முடியுமா? அல்லது சக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் மீது சட்டவிரோதத் தண்டனை நடவடிக்கை மேற்கொள்ளும்படி மோடி அர சாங்கத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பா? இவையெல் லாம் விளக்கப்படாமல் இந்தியா அணியின் நோக்கம் கேள்விக்குரியதாகவே மாறிவிடும். இந்தச் சீர்குலைவு நடவடிக்கைகள் பற்றித் தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, நிலவும் குழப்பமான சூழலைச் சீர்செய்யும் பொறுப்பு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் தங்களையும் தங்கள் கட்சியையுமே சார்ந்தது.”

அதேசமயம், ஆர்எஸ்எஸ்-பாஜக சங்பரிவா ரங்களை எதிர்ப்பதில் எங்களது பொறுப்புகளை முழுமையாக நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என்ற அடிப்படையில், மோடி அரசாங்கத்தின் எதேச்சதி கார, வகுப்புவாத மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து, நாடாளுமன்றத்திற்குள் இந்தியா அணியோடும் மற்ற எதிர்க்கட்சிகளோடும் எங்களது ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்றும் அக்கடிதத்தில் மீண்டும் உறுதிப்படுத் தப்பட்டது. எங்களின் மீது எத்தகைய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டாலும், உண்மைக்கு மாறாக திரிப்பு கள் செய்யப்பட்டாலும், மார்க்சிஸ்ட் கட்சி இந்த நாடா ளுமன்றக் கடமையில் ஒருபோதும் பின்வாங்காது.

காங்கிரசின் குறுகிய பார்வையும் சந்தர்ப்பவாதமும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, ஆர்எஸ்எஸ்-பாஜக சக்திகளை முறியடிக்க வேண்டும் என்றால், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருமுகப்பட்டுப் போராட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளது. இந்தப் போராட்டத்தில் இடதுசாரிகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் மிக முக்கியப் பங்குள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால், காங்கிரஸ் கட்சி தொலை நோக்குப் பார்வையின்றி குறுகிய நோக்குடன் செய லாற்றும் போது, நாம் அவர்களுக்கு அதற்கான தாராள மான வாய்ப்பை அளித்துவிட முடியாது. இந்தியா அணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகள் மீதான தங்களது தாக்குதல்கள் பற்றிச் சுயவிமர்சன மதிப்பீட்டிற்கு வர வேண்டியது காங்கிரசின் அவசரத் தேவையாகும்.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் கேர ளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியையும் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் அவர்களை யும் குறிவைத்தவர்கள்; இதற்கு முன் தில்லி யில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலையும் இதேபோன்றுதான் குறிவைத்தார் கள். அதேபோல், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே, பல ஆண்டுகளாகத் தங்களின் நம்பிக்கையான கூட்டாளியாக இருந்த திமுகவுட னான உறவை முறித்து, புதிய அரசாங்கத்தில் எப்படியா வது இடம் பெற வேண்டும் என்ற அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தை காங்கிரஸ் வெளிப்படுத்தியது.

ஆம் ஆத்மி, திமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் இல்லாத நிலைமையானது, ஒன்றுபட்ட மேடையைப் பலவீனப்படுத்தியுள்ளது. இந்தியா அணி என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைமையி லான ஒரு கூட்டணி என்று எவரும் கருதக் கூடாது. பொதுவாக இந்தியா அணி என்பது மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் பரந்து விரிந்த ஒரு கூட்டு மேடை யாகும்; அது எந்த நோக்கத்திற்காகத் துவக்கத்தில் விழைந்ததோ, அதே பொதுத் தன்மையுடன் செயல்பட வைப்பது அவசியம்.

வரும் நாட்களுக்கான நாடாளுமன்ற உத்திகள்

மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநாட்டு அரசி யல் பரிசீலனை அறிக்கையை நிறைவு செய்யும் பகு தியில், “இந்தியா அணியுடன் தேர்தல்களில் இணைந்து செயல்படுவதையும், ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான பொதுவான பிரச்சனைகளில் நாடாளுமன்றத்திற்குள் ஒத்துழை ப்பு நல்குவதையும் நாம் தொடர்ந்து செய்வோம்” என்று கூறியுள்ளோம். இந்த அரசியல் பார்வையின்அடிப் படையில்தான், இந்திய தேர்தல் ஆணையம்தன்னிச்சை யாகச் செயல்படுத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைகளுக்கு எதிரான கூட்டு நிலைப்பாட்டை எமது கட்சி எடுத்தது.

வரும் நாட்களில், மோடி அரசாங்கம் வலுக் கட்டாயமாகத் தொகுதி மறுவரையறை மசோதாவை யும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாக்களையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வர முயலும்போது, இந்தியா அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மற்றும் திமுக, ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகளோடு நாடாளுமன்றத்திற்குள் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளுக்கு நாம் முதன்மை முக்கியத்துவம் வழங்குவோம். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதி ரான எதேச்சதிகாரத் தாக்குதல்களையும், மதச்சார் பற்ற கோட்பாடுகளின் மீதான இந்துத்துவா வகுப்பு வாதத் தாக்குதல்களையும், ஜனநாயகத்தின் மீதான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு தீவிரமாக முறியடிக்க வலுவான ஒன்றுபட்ட கூட்டு எதிர்ப்புகளே இன்றைய காலத்தின் கட்டாயம். இத்தகைய பிரச்ச னைகள் முன்வரும் போது, இந்தியா அணி இன்னும் ஒருங்கிணைந்த ஒற்றுமையான மேடையா கச் செயல்பட வேண்டும். ஜூன் 8ஆம் தேதி நடை பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவ டிக்கைகள் குறித்த ஐந்து முடிவுகள் சாதகமான ஒரு விளைவாகும்.

உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டங்கள்

இன்றைய காலகட்டத்தில், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளே மிகத் தெளிவாக மையமான இடத்தைப் பெற்றுள்ளன. தொழிலாளர்கள், விவசாயி கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோ ரின் தன்னெழுச்சியான போராட்டங்கள், இந்திய மக்களிடம் அடக்கி வைக்கப்பட்டுள்ள கோபக் கொந்தளிப்பை வெளிப்படுத்துகின்றன. எனவே, பொதுமக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளை நாம் தீவிரமாகக் கையில் எடுத்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொடரும் எரி பொருள் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை யேற்றம், தொழிலாளர் விரோதத் தொகுப்புச் சட்டங்க ளை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை முடக்குவது, உரத் தட்டுப்பாடு போன்ற பிரச்சனை கள் உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுக்கின்றன.

மறுபுறம், வேலையின்மை மற்றும் முறைகேடுகள் நிறைந்த நீட், சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளன. இந்தப் பின்புலத்தில், நமது கட்சி சுயேச்சையாகவும் இடதுசாரிக் கட்சிகளுடன் ஒருங்கி ணைந்தும், பலதரப்பட்ட உழைக்கும் மக்களின் பங்கெ டுப்போடு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடுவதற்காக வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புக ளின் பரந்துபட்ட ஒற்றுமையை உருவாக்குவது காலம் நமக்கு விடுத்துள்ள அறைகூவலாகும்.

ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சி என்ற வகையில், வர்க்க வெகுஜனப் பிரச்சனைகளை கையில் எடுப்பது நமது மிக முக்கியக் கடமையாகும். வடமாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி ‘ஜன் ஆக்ரோஷ் ஜாதா’ என்ற பெயரில் முன்னெடுத்த மக்கள் ஆவேச பிரச்சார இயக்கம், பல மாநிலங்களின் வழியே சென்று இறுதியில் தில்லி ராம்லீலா மைதானத்தில்; ‘மக்கள் ஆவேசப் பேரணி’ யாக மிக பிரம்மாண்டமாக நிறைவடைந்தது. இப்படியான மக்களின் வர்க்க இயக்கங்களை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்களுடனும், இன்னும் விரிந்த அளவில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க, இந்துத்துவா எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக இந்தியா அணி போன்ற மதச்சார்பற்ற கட்சி களின் பரந்த மேடையுடனும் இணைந்து கொண்டு செல்லப்பட வேண்டும். இந்தியா அணியுடனான நமது அணுகுமுறை இத்தகைய தெளிவான அரசியல் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஜூன் 14, 2026) தமிழில் : கே.வசந்தன்