பீகார் தேர்தல் முடிவுகளில் சதி
14 Nov 2025, 1:26 pm

பீகார் தேர்தல் முடிவுகளில் சதி தேஜஸ்வி - தலைவர்கள் குற்றச்சாட்டு

பாட்னா பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளானது பாஜகவிற்கு விசுவாசமாக நடந்து கொண்ட தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது. உண்மைக்குப் புறம்பாக தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுவிட்டது என நாடு முழுவதும் எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 75 ஆண்டு கால பீகார் அரசியலில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 66.91 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் நிதிஷ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தேர்தலை சந்தித்தன. வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான கூட்டணியே முன்னிலை வகித்து வருவதாக ஆரம்பத்தில் இருந்தே காட்டப்பட்டு வந்தது. இது மனரீதியாக சிதைத்து தங்கள் முடிவை மக்களை ஏற்க வைக்கக்கூடிய செயல் என எதிர்க்கட்சிகள் கண்டித்தன. பீகார் தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் எனவும், பல போலி வாக்குகள் இணைக்கப்பட்டுள்ளன எனவும் அம்பலமானது. மேலும் பாஜகவை வெற்றி பெற வைப்பதற்காக தேர்தல் ஆணையம் முழு மூச்சாகச் செயல்படுகிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களை உறுதி செய்யும் வகையில் பீகார் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மாற்றப்படும் களநிலவரம் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, களத்திலிருந்து வரும் நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர்களே முன்னிலை வகிக்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணைய இணையதளம், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிப்பதாகச் சொல்கிறது. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிலவரம் இதுதான். இவர்கள் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியை மன அளவில் உடைக்கப் பார்க்கிறார்கள். தோல்வியை மனரீதியாக ஒப்புக்கொண்டால், அதனையே முடிவாக அறிவித்துவிடுவார்கள் என கூறியுள்ளார். சிசிடிவி கேமராவை அணைத்து வாக்குப்பெட்டி திருட்டு தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே பீகாரில் சாசாரம் பகுதியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சந்தேகப்படும் படி ஒரு லாரி வெளியே வந்தது. அதனை மக்கள் பிடித்து பார்த்த போது அதில் வாக்கு இயந்திரப் பெட்டிகள் இருந்திருக்கின்றன. அதே நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை சோதனை செய்து பார்த்தபோது, சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மணீஷ் திவாரி கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் எதற்கும் பதில் கொடுக்கவில்லை. இது போன்று உண்மைக்குப் புறம்பாக வெற்றி பெறுவதற்காக தான் தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 210 இடங்களுக்கு மேல் வெல்லும் என சொல்லப்பட்டுள்ளது எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். சதி அம்பலமானது : அகிலேஷ் கருத்து பீகார் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் சதி அம்பலமாகிவிட்டது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற சதி வேலை இனி எடுபடாது. இனியும் அவர்களை இந்த விளையாட்டை விளையாட விடமாட்டோம். பாஜகவின் நோக்கங்களை நிச்சயம் முறியடிப்போம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் 65 லட்சம் பேரை நீக்கியபின் என்ன முடிவை எதிர்பார்க்க முடியும்? போட்டி தொடங்குவதற்கு முன்பே வெற்றியாளரை அறிவித்துவிட்டால் ஜனநாயகம் எப்படி பிழைக்கும்?” என பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா குற்றம்சாட்டியுள்ளார்.