தவெக-வோடு போனது காங்கிரஸ்; விஜய்க்கு ஆதரவுக் கடிதம்!
6 May 2026, 10:51 pm

தவெக-வோடு போனது காங்கிரஸ்; விஜய்க்கு ஆதரவுக் கடிதம்!

சென்னை, மே 6 - காங்கிரஸ் கட்சி திடீரென விஜய்- யின் தவெக-வோடு கூட்டணி சேர்ந்து உள்ளது. அடுத்துவரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெக-வுடன் தான் கூட்டணி என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சி யாக உருவாகியுள்ளது. எனினும் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக தேடி வருகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் செவ்வாயன்று நள்ளிரவு நடத்திய அவசர ஆலோச னைக்கு பிறகு, தவெகவுக்கு நிபந்த னையுடன் ஆதரவு அளிப்பதாக புதன்கிழமை (மே 6) அன்று அதிகாரப் பூர்வ அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸின் இந்த ஆதரவு மூலம், தவெகவிற்கான ஆதரவு பலம் 108-லிருந்து 113 ஆக உயர்கிறது. காங்கிரஸின் நிபந்தனை இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட அறிவிப்பில், அரசியலமைப்பை எதிர்க்கும் மதவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கப்படு வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தவெக ஆட்சியிலும் காங்கிரஸ் பங்குபெறும் என்று கூறியுள்ள கிரிஷ் சோடங்கர், இந்தக் கூட்டணி வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும் என்று கூறியுள்ளார். பனையூரில் சந்திப்பு இதனிடையே, காங்கிரஸ் நிர்வாகிகள் குழு அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தலைமை யில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் சென்று காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். காங்கிரஸ் துண்டை, விஜய்க்கு அணிவித்த செல்வப்பெருந்தகை, பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

பச்சைத் துரோகம்; டி.ஆர். பாலு கண்டனம்!

சென்னை: திமுக மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சரு மான டி.ஆர். பாலு, தவெகவுக்கு ஆதரவளித்த காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டி யிட்டு, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களை பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளனர். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவு எடுத்தது போல கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். சந்தர்ப்பவாதத் திற்கு கொள்கை முகமூடி போடும் இந்த முயற்சி பல்லிளிக்கிறது. இது திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம்” என்று டி.ஆர். பாலு குற்றம்சாட்டினார். “எப்போதெல்லாம் காங்கிரஸுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டதோ, அப்போ தெல்லாம் திமுக உடனிருந்தது. 2019 தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திமுக. இரண்டு தேர்தல்களில் அதிக நாடாளு மன்ற உறுப்பினர்களை அனுப்பித் தந்தது திமுக கூட்டணி. இன்று அவை முறிந்து விட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை பார்க்கும்போது திகைப்பு ஏற்படவில்லை. குறுக்கு வழியில் அதிகாரம் தேடி பாஜக பல மாநிலங் களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் தமிழ்நாட்டில் செய்திருக் கிறது” என்று அவர் வேதனையுடன் கூறினார். “தோல்வி எங்களுக்கு புதிதல்ல. துரோகமும் எங்களுக்கு புதிதல்ல. ஆனால் அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும். காலம் பதில் சொல்லும்” என்று டி.ஆர். பாலு குறிப்பிட்டுள்ளார்.