உலகக்கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி தங்கம் வென்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு
21 Dec 2025, 3:21 pm
<p><strong>உலகக்கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி தங்கம் வென்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு</strong></p>
<p>சின்னாளப்பட்டி, டிச.21- உலகக்கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற மாணவ, மாணவியரை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பாராட்டினார். உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை துபாயில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் பிரேம்நாத்தின் மாணவர் தீபக் ராஜா மற்றும் மாணவி மதுநிதா ஆகியோர் இந்திய அணி சார்பில் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்திய ஆடவர் அணி கென்யா அணியை 11 - 10 என்ற கணக்கிலும், இந்திய மகளிர் அணி கென்யா அணியை 3 - 2 என்ற கணக்கிலும் வீழ்த்தி இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். மேலும், டேக்வாண்டோ போட்டியில் உலக அளவில் பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்ற வின்சியாவையும் அமைச்சர் இ.பெரியசாமி பாராட்டி பரிசளித்தார். பரிசு பெற்ற மாணவ, மாணவியரை கௌரவிக்கும் வகையில், சின்னாளப்பட்டி பகுதியில் இருந்து மாணவ, மாணவியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, தேவாங்கர் பள்ளி வழியாக பேருந்து நிலையத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
