வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் களத்தில் குழப்பம்! அலுவலர்களுக்கு சுமை! மக்கள் அச்சம்!
13 Nov 2025, 3:30 pm

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் களத்தில் குழப்பம்! அலுவலர்களுக்கு சுமை! மக்கள் அச்சம்!

மதுரை/கோவை/ஈரோடு/நாமக்கல்/விருதுநகர், நவ. 13- தமிழகம் முழுவதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தீவிரமாக நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) களத்தில் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது. கணக்கீட்டுப் படிவங்களை விநியோகிப்பதில் உள்ள குளறுபடிகள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) கடுமையான பணி நெருக்கடி மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடிக்கும் அதிகமான (78.09%) படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆனால், இந்தப் பணி முன்னேற்றத்தில் பல சிக்கல்கள் இருப்பதாக மதுரை மேற்கு தொகுதி உட்படப் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். படிவக் குளறுபடிகளால் கல்வியறிவில்லாத மக்கள் திணறல் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் எஸ்ஐஆர் (SIR) கணக்கீட்டுப் படிவங்களில் கேட்கப்படும் விவரங்களே பொதுமக்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. பழைய தரவுகள் எங்கே?: படிவங்களில், வாக்காளர்கள் 2002ஆம் ஆண்டு எந்தத் தொகுதி, பாகம், வரிசை எண்ணில் வாக்களித்தார்கள் என்ற விவரங்கள் உட்படப் பழைய தகவல்கள் கேட்கப்படுகின்றன. ஈரோடு மேற்குத் தொகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் போன்றவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதே இடத்தில் வசித்தாலும், இந்த விவரங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது இயலாத காரியம் என்று கூறுகின்றனர். கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த சின்னபொன்னு போன்ற முதியோர்கள், எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் இந்த விவரங்களைப் பூர்த்தி செய்ய உதவுவது யார் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

குழப்பமான உறவினர் விவரம்: படிவத்தில் உள்ள உறவினர் பெயர் குறிப்பிடும் கட்டம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முதலில், நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) திருமணமான பெண்கள் கணவர் பெயரை எழுதலாம் என அறிவுறுத்தினர். ஆனால், திடீரென 2002 வாக்காளர் பட்டியலில் உள்ள தாய், தந்தை அல்லது தாத்தா, பாட்டியின் பெயரை மட்டுமே எழுத வேண்டும் எனப் புதிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து திருமணமாகி வந்த பெண்களின் விண்ணப்பங்கள், கணவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், நிராகரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. விளக்கம் தேவை: படிவத்தில், ஏன் முந்தைய பட்டியலின் அடையாள எண்கள் மற்றும் உறவினர் விவரங்கள் கேட்கப்படுகின்றன என்பதற்கான எந்தவொரு தெளிவான அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், இணையத்தில் பழைய வாக்காளர் பட்டியலைத் தேட முயன்றால், சர்வர் சரியாகக் கிடைப்பதில்லை என்ற புகாரும் நிலவுகிறது. உதவி செய்யாமல் செல்கிறார்கள்: கோவை, பழனிச்சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி போன்றவர்கள், இதற்கு முன் வீடு வீடாக வரும் அதிகாரிகள் விவரங்களைக் கேட்டு எழுதிச் செல்வார்கள். ஆனால், இப்போது படிவங்களைக் கொடுத்துவிட்டு, இரண்டே நாட்களில் பூர்த்தி செய்து கொண்டு வரச் சொல்கிறார்கள், என்கின்றனர். “விண்ணப்பங்களைக் கொடுக்க வரும் பி.எல்.ஓ ஊழியர்களே விவரங்களைப் பூர்த்தி செய்தால் வசதியாக இருக்கும்” என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

பூர்த்தி செய்யத் தெரியாததால் பலர் படிவங்களை அப்படியே வீட்டில் வைத்துள்ளனர். பிஎல்ஓ-க்களின் கடுமையான பணிச்சுமையும் சவால்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) பலரும் ஏற்கனவே அரசுப் பணியில் உள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் ஆவர். பணி நெருக்கடி: நாமக்கல்லைச் சேர்ந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை ஒருவர், தேர்தல் காலத்திற்கு ஆறு மாதங்கள் உள்ள நிலையில் இந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளதால், வழக்கமான பள்ளிப் பணிகளைக் கவனிக்க முடியாமல் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார். ஒரு பிஎல்ஓ 1,150 முதல் 2,000 வாக்காளர்களை நேரில் சந்தித்துச் சரிபார்க்க வேண்டியுள்ளதால், குறுகிய காலத்தில் பணியை முடிக்க முடியவில்லை. சரியான சன்மானம் இல்லை: மதுரையில் ஒரு பிஎல்ஓ கூறுகையில், “இந்தப் பணிக்கு நாங்கள் ரூ.7,150 மட்டும் பெறுகிறோம். அதோடு எந்த வகையான போக்குவரத்து அல்லது உணவுப் படிகளும் வழங்கப்படுவதில்லை. காலை 8.30 மணிக்கே வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்க வேண்டும். சிலர் வேலைக்குச் சென்றுவிடுவதால் பலமுறை திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது” என்றார்.

வாக்காளர்களை அடையாளம் காணுதல் * மதுரை மேற்குத் தொகுதியில், கோவில் நிலத்தில் குடியிருப்பவர்கள் போன்ற கதவு எண்கள் இல்லாதவர்கள் மற்றும் சமீபத்தில் குடிபெயர்ந்தவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் உள்ளது. * பல பிஎல்ஓ-க்கள் வசிக்கும் பகுதிக்கும், அவர்கள் பணி செய்யும் பகுதிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததால், வாக்காளர்களைச் சரியாக அடையாளம் கண்டு படிவங்களை ஒப்படைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. * மேலும், பிஎல்ஓ-க்களுக்குப் போதிய பயிற்சியும் வழங்கப்படவில்லை என்றும், இதனால் வாக்காளர்களின் சந்தேகங்களைத் தீர்க்க முடியாமல் அவர்களும் குழப்பத்தில் இருப்பதாகவும் விருதுநகர் பகுதியில் புகார் எழுந்துள்ளது. இடம் பெயர்ந்த வாக்காளர்கள்: நாமக்கல்லைச் சேர்ந்த குமரேசன் கூறுகையில், ஒரு வார்டில் 1,300 வாக்காளர்கள் உள்ள நிலையில் 500 பேர் மட்டுமே நிரந்தரமாக வசிக்கின்றனர். மீதமுள்ளவர்கள் வெளியூர்களில் பணிபுரிபவர்கள். “அவர்களை அரசியல் கட்சியினரே தொடர்பு கொள்ள முடியாத சூழலில், இந்தக் குறுகிய காலத்தில் அதிகாரிகள் எப்படிச் சந்திக்க முடியும்? அவர்கள் இருக்கும் இடத்திலேயே இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது எவ்வாறு நடைமுறைக்குச் சாத்தியமானது எனத் தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பினார். அரசியல் விமர்சனமும், மக்கள் கோரிக்கையும் எஸ்ஐஆர் (SIR) பணி தமிழக வாக்காளர்களைக் குறைக்கும் நோக்கிலேயே நடைபெறுவதாகப் பலரும் விமர்சிக்கின்றனர்.

வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: சேலத்தைச் சேர்ந்த ஜெ. ஆல்பட் மற்றும் சீ.வையாபுரி ஆகியோர், “பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து பல வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையாக எஸ்ஐஆர் உள்ளது. சிறுபான்மையினர், பழங்குடியினர், பட்டியலின சமூகத்தினர் ஓட்டுக்கள் அதிகம் நீக்கப்பட இந்த எஸ்ஐஆர் உள்ளதாகத் தெரிகிறது” என்று குற்றம் சாட்டினர். உடுமலையைச் சேர்ந்த மகேஸ்குமார், “கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து மோசடித் திட்டத்தை நடைமுறைப்படுத்த நினைக்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தீர்வுக்கான கோரிக்கை பொதுமக்கள் மற்றும் அலுவலர்களின் ஒருமித்த கோரிக்கை பின்வருமாறு: கால நீட்டிப்பு: சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இன்னும் காலதாமதம் நீட்டித்துச் செய்தால் மட்டுமே முறையாக வாக்காளர்கள் இணைக்கப்படுவார்கள். கூடுதல் பணியாளர்கள்: பணியின் சுமையைக் குறைக்க, கூடுதல் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். வழிகாட்டல் மையங்கள்: வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் மையங்களை அமைத்து, படிவங்களைப் பூர்த்தி செய்ய உதவ வேண்டும். வெளிப்படைத்தன்மை: படிவ விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். தற்போதைய சூழல், மக்களைப் பதற்றமடைய வைத்துள்ளது. தகுதி உள்ள வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சனைகளை உடனடியாகக் கவனத்தில் கொண்டு, மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் உரிய அவகாசம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். நமது நிருபர்கள்