ஜமீன் எதிர்ப்புப் போராளி தோழர் எஸ்.பி. செல்லப்பிள்ளை படம் திறப்பு : தியாக வரலாற்றை ஏந்திச் செங்கொடி இயக்கம் முழக்கம்!
26 May 2026, 10:22 pm

ஜமீன் எதிர்ப்புப் போராளி தோழர் எஸ்.பி. செல்லப்பிள்ளை படம் திறப்பு : தியாக வரலாற்றை ஏந்திச் செங்கொடி இயக்கம் முழக்கம்!

இராஜபாளையம், மே 26 - நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளுக்கும் ஜமீன்தார்களின் அராஜகங்களுக்கும் எதிராகத் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களின் உரிமைக்களத்தில் சமரசமின்றிப் போராடிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், சேத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜமீன் எதிர்ப்புப் போராளி தோழர் எஸ்.பி. செல்லப்பிள்ளையின் வீரமிக்க தியாக வரலாற்றைப் போற்றும் உருவப் படம் திறப்பு மற்றும் புத்தக வெளியீட்டு விழா பொதுக்கூட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் திங்கட்கிழமை இரவு உணர்ச்சிப் பெருக்கோடு நடைபெற்றது.

மக்கள் பெருமளவில் திரண்டிருந்த இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கலந்துகொண்டு தோழர் செல்லப்பிள்ளையின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன் எழுதிய வரலாற்று நூலைத் திரைக்கலைஞர் சமுத்திரக்கனி வெளியிட, அதனைத் தோழரின் குடும்பத்தினர் பெருமிதத்துடன் பெற்றுக் கொண்டனர்.

செங்கொடி இயக்கத்தின் சமரசமற்ற தியாகப் பாரம்பரியம் இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ஜமீன்தார்களின் கொடூர அடக்குமுறைகளுக்கு எதிராக, ஏழை எளிய மக்களின் நில உரிமைக்காகவும், கூலி உயர்வுக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த உன்னதப் போராளி தோழர் எஸ்.பி. செல்லப்பிள்ளை என்பதை நினைவு கூர்ந்தார்.

தற்போதைய சுயநல அரசியலில் பதவிக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் மறுநாளே கட்சி மாறும் அவலங்கள் மலிந்துவிட்ட சூழலைச் சாடிய அவர், எத்தகைய அடக்குமுறைகளும் சித்ரவதைகளும் வந்தாலும், இறுதி மூச்சு வரை செங்கொடியையும் அதன் வர்க்கக் கொள்கையையும் கடுகளவும் கைவிடாத உன்னதப் பாரம்பரியம் கம்யூனிஸ்டுகளுடையது என்பதற்குத் தோழர் செல்லப்பிள்ளையின் தியாக வாழ்வே காலத்தால் அழியாத சாட்சி என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் கற்ற கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு இல்லாததே இளம்தலைமுறையினரின் மிகப்பெரிய அரசியல் விரக்திக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டினார்.

வேலையில்லாத இளைஞர்களைக் ‘கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணி’ என உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் பகடி செய்துள்ளதற்குத் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்த சண்முகம், ஆட்சியாளர்கள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் நியாயமான சமூகக் கோபத்தையும், அதிகார எதிர்ப்பு மனநிலையையும் ஆட்சியாளர்கள் தங்களின் போக்கிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார்

. மக்கள் நலனுக்கான நிபந்தனையற்ற ஆதரவு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத அசாதாரண சூழல் நிலவியதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற முதிர்ச்சியான நோக்கிலும்; நேரடியாகவோ மறைமுகமாகவோ பாசிச பாஜக தமிழ்நாட்டின் அதிகாரத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்கிலும், மக்கள் தீர்ப்பை மதித்துத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் பின்னணியை விளக்கினார்.

கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்துபவர்கள் என்பதை அவர் திட்டவட்டமாக உணர்த்தினார்.

அரசியல் பிரிவுச் செயலாளராக ஒரு ஜோதிடரை நியமித்த தவெக அரசின் தவறான முடிவை மார்க்சிஸ்ட் கட்சி உடனடியாக எதிர்த்ததையும், அந்த நியாயமான விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு மறுநாளே அந்த நியமனத்தை முதலமைச்சர் ரத்து செய்த ஆரோக்கியமான அணுகுமுறையையும் அவர் வரவேற்றுப் பேசினார்.

அதேநேரம், தற்போதைய கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் 5 ஏக்கருக்குக் கீழ் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் 100 சதவீதம் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கையைத் தவெக அரசு உடனே பரிசீலிக்க வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசுக்குக் குறைந்தபட்சம் 6 மாத காலமாவது அவகாசம் கொடுத்து, அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்துவிட்டே அடுத்தகட்ட

நகர்வுகள் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசு தனது புதிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும், விவசாய, தொழிலாளர் அமைப்புகளையும் நேரில் அழைத்து ஆலோசித்து, ஒரு சிறந்த மக்கள் பட்ஜெட்டை உருவாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தினார். எழுச்சிமிகு விழா முன்னதாக, நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக் குழு உறுப்பினர் ராமர் தலைமை தாங்கினார்.

இராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார் வரவேற்றார். சேத்தூர் நகரச் செயலாளர் குருநாதன், மூத்த தோழர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன், மாவட்டச் செயலாளர் குருசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் மற்றும் செல்லப்பிள்ளையின் பேரன் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரநாராயணன் ஆகியோர் தோழரின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை உணர்வுப்பூர்வமாக நினைவு கூர்ந்து வாழ்த்துரை வழங்கினர்.

சேத்தூர் 4-ஆவது கிளைச் செயலாளர் கெங்கையா நன்றி கூறினார்.