மக்கள் பணியாற்றிய மார்க்சிய ஆசான்: தோழர் எஸ்.ஏ. பெருமாள் வாழ்வும் பணியும் - எம்.ஏ.பேபி
10 May 2026, 9:09 pm

மக்கள் பணியாற்றிய மார்க்சிய ஆசான்: தோழர் எஸ்.ஏ. பெருமாள் வாழ்வும் பணியும் - எம்.ஏ.பேபி

மதுரையில் தோழர் எஸ்.ஏ. பெருமாள் (எஸ்.ஏ.பி) அவர்களின் பணிகளைப் போற்றும் “மார்க்சிய ஆசான் தோழர் எஸ்ஏபி” என்ற நூலை வெளியிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

கொண்டாட்டத்தின் நோக்கம்

ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது நமது இயக்கத்தில் பொதுவான ஒன்றல்ல. அப்படியிருக்க, நாம் ஏன் இன்று தோழர் எஸ்.ஏ. பெருமாளின் வாழ்க்கையைக் கொண்டாடுகிறோம்? சுய விளம்பரத்திற்காகவும், பதவி மற்றும் அதிகாரத்திற்காகவும் அரசி யலைப் பயன்படுத்தும் நபர்களுக்கு மத்தியில், தியாகம் மற்றும் மக்கள் சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு கம்யூனிஸ்டின் வாழ்வை இளைய தலைமுறைக்கு அடையாளப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் அர சியலுக்கு வருவது என்பது சிறைவாசம், சித்ரவதை மற்றும் துன்பங்களை அனுபவிக்கத் தயாராக இருப்பதாகும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு நிலைமை மாறியது. அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றும் கருவி யாகச் சீரழிந்து போனது.

காந்தியின் பார்வையும் கம்யூனிஸ்டுகளும்

தேசப்பிதா மகாத்மா காந்தி படு கொலை செய்யப்படுவதற்கு முன்பே ஒரு கருத்தை முன்வைத்தார். காங்கிரஸ் என்பது பல்வேறு சித்தாந்தங்கள் கொண்டவர்கள் ஒன்றிணைந்த ஒரு போராட்ட அமைப்பாக இருந்தது. சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் (ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஏ.கே. கோபாலன், பி. ராமமூர்த்தி போன்ற வர்கள்) என அனைவரும் அதில் இருந்தனர். சுதந்திரப் போராட்டத்தி லிருந்து விலகி இருந்த ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே.

சுதந்திரம் கிடைத்த பிறகு, காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாகத் தொடரக் கூடாது, அது ஒரு தன்னார்வ அமைப் பாக மாற வேண்டும் என்று காந்தி விரும்பினார். அரசியல் கட்சிகள் எவ்வாறு சீரழியும் என்பதை அவர் அன்றே முன்னுணர்ந்தார். இன்று அந்தச் சீரழிவை நாம் நேரில் காண் கிறோம். ஆனால், அரசியலில் ஏற் பட்டுள்ள இத்தகைய சீரழிவுகளுக்கு எதிராகப் போராடும் ஒரே இயக்கமாக கம்யூனிஸ்ட் இயக்கம் இன்றும் தனித்து நிற்கிறது.

வெறும் கால்களுடன் நடந்த வீரர்

தோழர் எஸ்.ஏ.பி அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், தென் மாவட்டங்களில் அவரது காலடித் தடம் படாத கிராமமே கிடையாது. சீனா வில் ‘வெறும் கால்களுடன் நடமாடும் மருத்துவர்கள்’ (Barefoot Doctors) பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். தோழர் எஸ்.ஏ.பி மக்களின் உரிமை களுக்காகப் போராடிய ஒரு ‘வெறும் கால்களுடன் நடமாடிய வீரர்’ (Barefoot Soldier). மக்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதையே உண வாக உட்கொள்வார்; எதுவும் கிடைக்கா விட்டால் பட்டினியாக இருப்பார். கௌதம புத்தரைப் போலத் தியாகம் நிறைந்த வாழ்க்கை அவருடையது.

85 வயதைக் கடந்த நிலையிலும், அவர் ஒரு கம்யூனிசப் போர்வீரனாகத் தனது கொள்கைகளை நிலைநாட்டி வருகிறார். குறிப்பாக, அறிவியல் மனப் பான்மையை அவர் தனது வாழ்வில் கடைபிடித்த விதம் போற்றத்தக்கது. தனது திருமணத்தை ராகு காலத்தில் நடத்தி, மூடநம்பிக்கைகளை உடைத் தெறிந்தார். மகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார். நானும் எனது மகனின் திருமணத்தை அவ் வாறே நடத்தினேன். கம்யூனிஸ்டுகள் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே சான்று. மேலும், அவரும் அவரது துணைவியார் தோழர் வசந்தா அவர்களும் தங்கள் உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்குத் தானம் செய்ய முடிவு செய்திருப்பது, மரணத்திற்குப் பின்னாலும் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற அவர்களின் உயரிய சிந்தனையைக் காட்டுகிறது.

பண்பாட்டுத் தளத்தில் ஒரு புரட்சியாளர்

கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது வர்க்கப் போராட்டத்தை மட்டும் முன்னெடுப்பதல்ல; அது ஒரு கருத்தியல் போர் (Battle of Ideas). 1975-ல் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இருண்ட காலத்தில், ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை’ (தமுஎச) உருவாக்குவதில் தோழர் எஸ்.ஏ.பி முக்கியப் பங்காற்றி னார்.

அவர் நாட்டுப்புறக் கலைஞர் களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். செவ்வியல் கலை களை விட, அடித்தட்டு மக்களின் கலை வடிவங்களைப் போராட்டக் கருவி களாகப் பயன்படுத்த அவர் ஊக்க மளித்தார். பேராசிரியர் கே.என். பணிக்கர் கூறியது போல, நாம் கலாச்சா ரத் தலையீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், ‘கலாச்சாரத்திற் குள்ளும்’ தலையிட வேண்டும். நாம் பழகும் விதம், பெண்களுக்கு அளிக்கும் மதிப்பு, குழந்தைகளுக்கு வழங்கும் ஜனநாயக உரிமை என ஒவ்வொன்றும் கலாச்சாரத்தின் வெளிப்பாடே. தோழர் எஸ்.ஏ.பி-யின் இத்தகைய தலையீடுகள், தமிழகத்தின் கலாச்சாரச் சூழலில் இன்று மதச் சார்பற்ற மற்றும் முற்போக்குத் தன்மை நிலை பெறுவதற்கு வலுவான பங்களிப்பு செய்துள்ளன. சு. வெங்கடேசன், தமிழ்ச் செல்வன், ரோகிணி, களப்பிரன் போன்ற ஆளு மைகள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற இத்தகைய இயக்கங்களே அடித்தளமிட்டன. ‘ஜெய் பீம்’ போன்ற வணிகத் திரைப்படங்களில் கூட கார்ல் மார்க்ஸும் அம்பேத்கரும் பேசப்படுவதற்கு இந்த நீண்டகாலப் பண்பாட்டுப் போராட்டமே காரணம்.

தோழர் எஸ்.ஏ.பி அவர்களின் பங்களிப்பை நாம் கொண்டாடும் வேளையில், அவர் வழிநடத்திய இயக்கம் வலிமை பெற வேண்டியது அவசியமாகும். சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்தி களின் செல்வாக்கு அதிகரித்தால் மட்டுமே, ஏழைகளுக்கான உண்மை யான மாற்றம் சாத்தியமாகும்.

தோழர் எஸ்.ஏ.பி-யின் இந்த நீண்டகால மக்கள் பணிகளுக்குப் பக்கபலமாக இருந்த அவரது துணைவி யார் தோழர் வசந்தா அவர்களுக்கும் எனது செவ்வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இல்லையென்றால் தோழர் எஸ்.ஏ.பி-யால் இவ்வளவு சாதனைகளைச் செய்திருக்க முடியாது.

மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.