மார்க்ஸியம் வெல்ல நூற்றாண்டைக் கடந்து வாழ்க!
28 May 2026, 11:33 pm
<p><strong>மார்க்ஸியம் வெல்ல நூற்றாண்டைக் கடந்து வாழ்க! </strong></p><p>“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்கிறது விவிலியம். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றார் அருட்பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகளார். இருவரின் கூற்றையும் தனது வாழ்வியலாக்கிக் கொண்ட மனிதர்தான் தோழர் செ. அருமைநாதன். “ஏழையிடம் சென்று பணியாற்ற ஏசு என்னைப் பணித்தார். ஏழைகளிடம் சென்று பணியாற்றும் போதுதான் நான் மார்க்ஸிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது” என்று உலகம் போற்றும் கல்வியாளர் பாலோ ஃப்ரீயர் கூறுவார். தனது இளமைப் பருவத்திலேயே, உள்ளுர் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் தொடங்கி, அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் உரிமைக்கான போராட்டம் வரை, பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கார்ல் மார்க்ஸ் அவர்கள் வடிவமைத்த மார்க்ஸியத்திலே அனைத்து சிக்கலுக்கும் தீர்வு இருக்கிறது என்பதை உணர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திட்டத்தை ஏற்று கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். இன்றுவரை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மக்கள் ஊழியனாக அரசியல் மற்றும் சமூகம் தளங்களில் தொண்டாற்றி வருகிறார். நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஈழத்து மக்களின் இன்னல் தீர்க்க சென்னை கலைவாணர் அரங்கில் நாடகம் நடத்தி நிதி திரட்டும் பணி தொடங்கி, தற்போது எண்பதை கடக்கும் வயதிலும் குடியிருப்போர், மாணவர், பெற்றோர் நலனுக்காக குரலெழுப்பி வரும் தோழர் செ. அருமைநாதன் அவர்களின் செம்மையான வாழ்க்கைக்கு ஏற்ற துணையாக இருந்து அவரை பாதுகாத்து வருபவர் அவரது இணையர் ஆசிரியர் கு. மேரித் தெரஸ் அவர்கள். இவர்களது இரண்டு மகன்களும் தாய், தந்தை உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பாதையில் பொதுத் தொண்டை சிறப்புடன் செய்து வருவது பெரும் மகிழ்ச்சியைத் தரும் செய்தி. செ. அருமைநாதன் - கு. மேரித் தெரஸ் இணையர் நூற்றாண்டைக் கடந்து நலமுடன் வாழ்ந்து மார்க்ஸியம் வெல்ல தொடர்ந்து தொண்டாற்றுவார்கள். அவர் பிறந்த எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.</p>
