தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பண்ணையடிமையின் மகன்... பாட்டாளிகளின் தலைவன்! - நாகைமாலி

10 Oct 2026, 9:08 pm
பண்ணையடிமையின் மகன்... பாட்டாளிகளின் தலைவன்! - நாகைமாலி

பண்ணையடிமையின் மகன்... பாட்டாளிகளின் தலைவன்! - நாகைமாலி

1940 களில் கீழத்தஞ்சையின் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்நிலை வர்ணிக்க முடியாத அவலம் நிறைந்தது. சூரியன் உதிக்கும் முன் வயலுக்குச் சென்று, இருள் கவிழ்ந்தபின்தான் வீடு திரும்ப வேண்டும். திருமணத்துக்கும் பண்ணையாரின் அனுமதி வேண்டும். வேலைக்கு வராவிட்டால் சவுக்கடி; வாயில் சாணிப்பால். அடிக்கும்போதுகூட ‘அய்யோ’என்று அல்ல, ‘அய்யா’ என்றுதான் அழ வேண்டும். இவ்வளவையும் தலைவிதி என்று தாங்கிக்கொண்டிருந்த மக்களைத் தட்டி எழுப்பியது செங்கொடி இயக்கம். அந்த இயக்கத்தில் மாவீரன் சீனிவாசராவோடுகைகோர்த்து நின்றவர், தஞ்சை மக்களால் ‘பி.எஸ்.டி.’ என்று போற்றப்பட்ட தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி.

தனிக்கொடி எனும் தனுஷ்கோடி

திருத்துறைப்பூண்டி வட்டம் விளத்தூரில், பண்ணையடிமை சாத்தனின் மகனாகப் பிறந்தவர் தனிக்கொடி; அதுவே பின்னர் தனுஷ்கோடி ஆனது. ஒருநாள் களத்துமேட்டில் தன்னை அடித்தபண்ணையாரைத் திருப்பி அறைந்த சாத்தன், மனைவி, மகன், ஆடு, மாடு, குடிசையின் கதவு, நிலைகளோடுபக்கத்து ஊரான பாங்கலுக்கு ஓடினார். அந்தப் பாங்கலே தனுஷ்கோடியின் வாழ்நாள் களமானது.பர்மா சென்று திரும்பிய பண்ணையடிமைகளிடம் மணலில் எழுதக் கற்ற சிறுவன் தனுஷ்கோடி, பண்ணைச்சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுத்தான். “எங்கள் சொத்தில் பாகம் கேட்கவா?” என்று பண்ணையார் சாத்தனைக் கட்டிவைத்து அடித்தார்; தனுஷ்கோடி மாடு மேய்க்கப் பண்ணைக்கு அனுப்பப்பட்டான். குளத்தில் தண்ணீர்குடித்ததற்காக ரத்தம்வரும்வரை கம்பால் அடிக்கப்பட்டான். பண்ணையார்களின் ஈவிரக்கமற்ற செயல்கள் அவன் மனதில் நெருப்புக்கனலை மூட்டின.கோவணத்தோடு திரிந்த பண்ணையடிமைச் சிறுவன், முண்டா பனியனும் வேட்டியும் அணிந்து தோளில் துண்டுபோடத் தொடங்கினான்; வேட்டி கட்டும் பழக்கமே இல்லாத அவ்வூரில் அதுவே ஒரு கலகமாகப் பார்க்கப்பட்டது.

சொல்லும் செயலும்

‘ஆதிதிராவிடர் வாலிபர் சங்கம்’ அமைத்து, தாழ்த்தப்பட்டோருக்கென்று குளம் வெட்டினார் பிஎஸ்டி; அதையும் நிலப்பிரபுக்கள் பறித்துக்கொண்டனர். காங்கிரஸ் ஊழியர் செங்கமலத்தம்மாள் நடத்திய ‘வந்தே மாதரம்’ ஊர்வலத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டு, சிறுவர்களோடு விளத்தூர் அக்ரஹாரத்துக்குள் நுழைந்தார். அவர்கள் சென்றபின் பசுமாட்டை வீட்டுக்குள் கொண்டுவந்து கோமியம் தெளித்துப் ‘பரிகாரம்’ செய்தனர் பிராமணர்கள். மறுநாள், அக்ரஹாரத்துக்குள் நுழைந்ததற்காக, பிராமண நிலப்பிரபுக்கள் அவரை மாட்டுக்கொட்டிலில் அடைத்துப் புளிய விளாரால் அடித்துத் துவைத்தனர். முறையிடச் சென்றபோது காங்கிரஸ் தலைவர் ராமு படையாச்சி, “உன்னைக் குழி தோண்டிப் புதைத்திருக்கணும்” என்றார். பின்னர் பெரியார், அம்பேத்கர் பேட்ஜ்களுடன் திருத்துறைப்பூண்டி டீக்கடைக்குச் சென்றபோது, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கடைக்காரரே அவரை நையப்புடைத்தார். சொல்லுக்கும் செயலுக்குமானஇடைவெளியை இரு அனுபவங்களும் அவருக்குக் கற்றுத்தந்தன.

“அடித்தால் திருப்பியடி”

1942இல் ‘ஜனசக்தி’ மூலம், தாழ்த்தப்பட்டோர் வீட்டில் அவர்கள்பாத்திரத்திலேயே சாப்பிடும் ‘கன்னடத்து அய்யர்’ சீனிவாசராவைப் பற்றி அறிந்தார். அறுவடைக்கூலி நெல்லை விற்ற ஏழு ரூபாயுடன், ஏழெட்டு இளைஞர்களோடு களப்பாலுக்கு நடந்தார். அங்கே களப்பால் குப்புசாமியிடம், “எங்கள் ஊரில்சங்கம் அமைக்கச் சீனிவாசராவ் வர வேண்டும்” என்று கேட்டார். நீல அரைக்கால் சட்டை, வெள்ளைச் சட்டை,தோளில் பை,மூக்குக்கண்ணாடியுடன் தென்பரையிலிருந்து வந்த சீனிவாசராவைச் சேரி மக்கள் திரண்டு வரவேற்றனர். “ஆண்டைகளும் மனிதர்கள்தான்; நீங்களும் மனிதர்கள்தான். அடித்தால் திருப்பியடி;சாணிப்பால் கொடுத்தால் குடிக்காதே; சங்கம் உங்களைக் காப்பாற்றும்” என்றசீனிவாசராவின் உரையைத் தனுஷ்கோடி மெய்மறந்து கேட்டார். ‘அடிக்கு அடி’ என்று இதுவரை எவரும் சொன்னதில்லை. அந்த ஒரு உரை, அவருக்கு நம்பிக்கையையும் துணிவையும் உறுதியையும் தந்தது.பாங்கலில் சங்கம் அமைத்தார்; அறுவடைக் களத்துமேட்டில் நின்று கண்காணித்து, தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியைப் பெற்றுத் தந்தார்; பல கிராமங்களில் சங்கம் கட்டினார். “அடிமையாகஇருந்தவனெல்லாம் துணிந்து கூலி உயர்வு கேட்கிறான்” என்று கொதித்த நிலப்பிரபுக்கள், அவரது பெற்றோரிடம் “எனக்கும் என் மகனுக்கும் சம்பந்தமில்லை” என்று எழுதி வாங்கினர்; அவரைக் கொல்லக் குண்டர்களை ஏவினர். அதே காலத்தில்பாங்கல் கிராமத்தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நெருக்கடியில் ராணுவத்தில் சேர்ந்து கொழும்பு சென்றவர், அங்கிருந்தும் நாற்பது ரூபாய் மணியார்டருடன், “சங்கத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; தொல்லை தரும் நிலப்பிரபுக்களின் பெயர்களை எனக்கு எழுதுங்கள்” என்று தாய்க்குக் கடிதம்எழுதினார். வெள்ளைக்காரன் பட்டாளத்துச் சிப்பாயின் அந்தக் கடிதத்தைப் படித்த பண்ணையார் நடுங்கிப்போய், “உன் மகனுக்கு எந்த ஆபத்தும் வராது” என்று சாத்தனிடம் உறுதியளித்தார். போர் முடிந்து திரும்பியதும், சீனிவாசராவின் அழைப்பை ஏற்றுமுழுமையாகச் சங்கப் பணியில் இறங்கினார். 1945இல் கட்சியின் பரீட்சார்த்த உறுப்பினரான அவர், 1946இல்சீனிவாசராவ், கே.ஆர்.ஞானசம்பந்தன், களப்பால் குப்பு, கே.பி.நடராஜன் ஆகியோரின் பரிந்துரையில் முழு உறுப்பினரானார்.

சிறையும் சித்திரவதையும்

173 பேர் மீதான ‘நெடும்பலம் சதி வழக்கில்’ அவரும் ஒருவர். கொளப்பாட்டில் கைது செய்யப்பட்டு, வலிவலம் தேசிகர் பங்களாவில் குதிகாலில் லத்தியால் இடித்துச் சித்திரவதை செய்யப்பட்டார்; “மணலிகந்தசாமி எங்கடா? சிவராமன் எங்கடா?” என்ற கேள்விகளுக்கு ஒரு சொல்லும் பேசவில்லை. களப்பால் குப்புவைப் போல் விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்களோ என்று, அவர்கள் தந்த உணவையும் தொட மறுத்தார். கட்டிய கைகளோடு பூட்ஸ் காலால் லாரிக்குள் உதைத்துத் தள்ளப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் நுழைந்ததுமே, “யாரடா அந்தத் தனுஷ்கோடி?” என்று வார்டர்கள் தடியால் அடித்து உள்ளே இழுத்துச் சென்றனர். அன்று உள்ளே போனவர், மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்தான் வெளியே வந்தார். புதுச்சட்டியும் நல்ல குடிநீரும் கேட்டதற்காகக் கூழாங்கற்கள் மீது மண்டியிட வைத்து அடிக்கப்பட்டார்; ஆனாலும் பணியவில்லை. அவர் மீது மட்டும் 57 வழக்குகள். சிறையில் இருந்தபோதே தாயையும், தலைவர் சீனிவாசராவையும் இழந்தார்; செய்தி கேட்டுக் கதறி அழுத அவரை, மாநிலச்செயலாளர் எம்.ஆர்.வெங்கட்ராமன் சிறைக்குச் சென்று தேற்றினார். சிறையிலேயே சரளமாக எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். வாழ்நாளில் 9 ஆண்டு 9 மாதம்சிறைவாசம், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை.

மக்கள் தலைவராக

1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முழுமூச்சுடன் பங்காற்றினார்; நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தோழர்களுடன் அவரும் கைது செய்யப்பட்டார். 1958 முதல் தொடர்ந்து முப்பது ஆண்டுகள் பாங்கல் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967இல் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரானார்; அப்போது முதலமைச்சர் கலைஞர்உதவியோடு திருவாரூர் அரசுகலைக்கல்லூரியைக் கொண்டுவந்தார். 1970, 1986இல் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964 முதல் இறுதிவரை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்.1926 அக்டோபர் 13இல் பிறந்து, 1997ஆகஸ்ட் 19இல் மறைந்தார்; 52 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஊழியராக வாழ்ந்தார். சென்னை தாம்பரத்தில் உள்ள விவசாயிகள் சங்க மாநில அலுவலகம் இன்றும் அவர் பெயரைத் தாங்கி நிற்கிறது.

வாழ்வில் எதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னார்: “எழுதப்படிக்கத் தெரியாத, பண்ணையடிமையாக இருந்த என்னை, வர்க்க உணர்வு பெற்ற மனிதனாக்கி, மக்கள் ஊழியனாகத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகத் தொடர்ந்து செயல்படுவதே பெருமை.”நூற்றாண்டு காணும் தோழர் பி.எஸ்.டி.க்குச் செவ்வணக்கம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.