வர்க்கத்தைத் திரட்டுவதில் வல்லமை மிக்கவர் தோழர் கே.ரமணி - கே.துரைராஜ்
29 May 2026, 8:28 pm

வர்க்கத்தைத் திரட்டுவதில் வல்லமை மிக்கவர் தோழர் கே.ரமணி - கே.துரைராஜ்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் கே.ரமணி பிறந்து 110 ஆண்டுகள் ஆகின்றன. 1916-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி, கேரள மாநிலம் பொன்னானி தாலூகா, இடப்பாள் என்னும் கிராமத்தில் உள்ள “பொரூக்கரை” என்னும் சிற்றூரில், சங்கரன்- லட்சுமி தம்பதியினருக்கு மகனாக ராமுண்ணி பிறந்தார். மலபார் பகுதிக்குள் உள்ள இவ்வூர் அன்றைய சென்னை ராஜதானியின் பகுதியாக இருந்தது. பாட்டி பானு அம்மாள், தாயார் லட்சுமி, ஒன்றுவிட்ட மூத்த சகோதரி கல்யாணி, தம்பி கோவிந்தன் என ஐந்து பேர் கொண்ட குடும்பம் அது. தந்தை சங்கரன் இவர்களை விட்டுப் பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். அக்கிராமத்தின் நில உடைமை நம்பூதிரிகளிடம் இருந்தது. அவர்களின் வீடுகளில் வேலை செய்து, அந்த வருமானத்தில் அம்மா லட்சுமி குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இடப்பாள் பள்ளிக்கூடத்தில் 5-ஆம் வகுப்பு வரை படித்த ராமுண்ணி, அதன் பிறகு நாட்டு மருந்துக்கடையில் 3¾ அணா கூலிக்கு கடை உதவியாள் வேலைக்குச் சேர்ந்தார்.

கோவை நோக்கிய பயணம்

வாழ வழி தேடி, குடியிருந்த வீட்டை விற்றுவிட்டு, முதலில் திருக்காவு என்ற ஊருக்கும் அதன்பிறகு கோவைக்கும் குடிபெயர்ந்தார்கள். ராமுண்ணி, கோவையில் ஓட்டல் தொழிலாளியாகவும், பிறகு காளீஸ்வரா மில்லில் அரியா எடுக்கும் தொழிலாளி யாகவும் வேலைக்குச் சேர்ந்தார். பிரபல தேச பக்தரான வ.உ.சிதம்பரனார் தோற்றுவித்த “கோயம் புத்தூர் லேபர் யூனியன்” சங்கத்தில் சேர்ந்தார். அந்தச் சங்கம் தொழிலாளர்களிடையே சுதந்திரப் போராட்ட வேட்கையை விதைத்தது. தொழிலாளி வர்க்கமும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு போராடியது. அக்காலத்தில் பரவிய காலரா நோய், ராமுண்ணி யின் பாட்டி, தாயார், தம்பி என மூவரையும் பலிகொண்டது. அடக்கம் செய்வதற்குக் கையில் பணம் இல்லாத சூழலில், மாநகராட்சி ஊழியர்களே அவர்கள் மூவரையும் அடக்கம் செய்தார்கள். அந்த காலக் கட்டத்தில் கோவையில் உள்ள ஸ்டேன்ஸ் மில், சோமசுந்தரா மில், லட்சுமி விலாஸ் மில், ரங்கவிலாஸ் மில் எனப் பல மில்களில் தொழி லாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். தோழர்கள் ப.ஜீவானந்தம், பி.ராம மூர்த்தி போன்ற தலைவர்கள் அவர்களுக்கு வழிகாட்டி னார்கள். மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு கோவைக்கு வந்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.எம். ராமையா தொழிற்சங்கப் பணிகளுக்கு உறுதுணை யாக இருந்தார். அவருடைய ஆலோசனையின் படிதான், ராமுண்ணி தன் பெயரை ‘ரமணி’ என்று மாற்றிக் கொண்டார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வர்க்கத் தலைவராக உயர்வு

கோயம்புத்தூர் லேபர் யூனியனில் இணைந்து வ.உ.சி-யின் தேசபக்தி மற்றும் ஜீவா, பி.ராமமூர்த்தி போன்றோரின் தத்துவார்த்த வழிகாட்டலில் வளர்ந்த தோழர் ரமணி, தொழிற்சங்க ஊழியராக மட்டும் நின்றுவிடவில்லை. கோவையில் மில் தொழிலாளர்க ளின் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தியதன் மூலம், 1939-ஆம் ஆண்டிலேயே அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். முன்னதாக 1938 -இல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் கோயம் புத்தூர் மாவட்ட அமைப்பு உருவான போது, கே.ரமணி, ஆர். கிருஷ்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டு கள் அதில் இணைந்து பணியாற்றினர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடி உறுப்பினர்களாகினர். 1940-களிலும், சுதந்திரத்திற்குப் பிறகு 1948-இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோதும், தோழர் ரமணி பல்லாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இரகசிய மாகக் கட்சிக் கிளைகளை அமைத்து, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து உழைப்பாளர்களைத் திரட்டினார். பிரிட்டிஷ் ஆட்சியிலும், அதற்குப் பிறகும் தொழிலாளர் போராட்டங்களுக்காகப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். கோவை யின் பஞ்சாலைத் தொழிலாளர்களை வர்க்க ரீதியாகத் திரட்டியதில் இவருக்கு நிகர் எவரும் இல்லை என்ற நிலை உருவானது. இவரது அசாத்தியமான பொதுவுடைமைப் பற்றையும், தொழிலாளர்களைத் திரட்டும் வல்லமையையும் கண்ட கட்சித் தலைமை, இவரைச் சென்னை மாகாண (தமிழ்நாடு) கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு உயர்த்தியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கம்

இந்தத் தொடர் போராட்டங்கள் மற்றும் தியா கங்களின் விளைவாகவே, கம்யூனிஸ்ட் கட்சியின் 112 பேர் கொண்ட அகில இந்தியத் தேசியக் கவுன்சிலில் தோழர் ரமணியும் இடம்பெற்றிருந்தார். 1964-ஆம் ஆண்டில், தேசியக் கவுன்சிலில் இருந்து 32 தோழர்கள் வெளியேறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியபோது தோழர் ரமணியும் அவர்களில் ஒரு வராக நின்றார். கோவை மாவட்டத்தில் தோழர்கள் கே.ரமணி, எம்.பூபதி, ஆர்.வெங்கிடு, எம்.கோவிந்தன், டி.பாலன், எம்.நஞ்சப்பன் போன்றோரின் கடுமை யான உழைப்பால் கட்சி படிப்படியாக வளர்ந்தது. கட்சி பிரிவதற்கு முன்பாகவே, தோழர் கே.ரமணி ஈரோட்டில் கட்சி உறுப்பினர்களின் பேரவைக் கூட்டத்தை நடத்தினார். தோழர் ஏ.கே.கோபாலன் இக்கூட்டத்திற்கு வந்து நிலைமைகளை விளக்கிய போது, அதை ஏற்றுக்கொண்ட தோழர்களைக் கொண்டு இரண்டு கட்சிக் கிளைகள் அமைக்கப் பட்டன. ஒன்றுக்குத் தோழர் மெயில் கே.பி.சின்னப்ப னும், மற்றொரு கிளைக்குத் தோழர் இலைக்கடை நாச்சிமுத்துவும் செயலாளராகச் செயல்பட்டனர். இதேபோல் சத்தியமங்கலத்தில் எஸ்.எம்.மாரப்பன், பவானியில் எம்.என்.காளியண்ணன், பெருந்துறை யில் ஜோதிநாத், தாராபுரத்தில் டி.பி.முத்துச்சாமி, காங்கயத்தில் சுப்புராயன், வெள்ளகோவிலில் அங்கப்பன் (மான்மார்க் செட்டியார்) ஆகிய தோழர்கள் கட்சியைக் கட்டப் பாடுபட்டார்கள். தோழர் கே.ரமணி, 1967 மக்களவைத் தேர்தலில், கோவை தொகுதியில் பிரபல தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தை எதிர்த்துப் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். அவர் எம்பி-யாக இருந்த போதே, ஈரோடு கொல்லம்பாளையத்தில் 1973 அக்டோபர் 23-இல் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி யின் முதல் கிளை துவங்கப்பட்டது. இதன் செய லாளராக நான் (கே.துரைராஜ்) பொறுப்பேற்றேன். எங்கள் முதல் பணியாக, நின்றுபோன ‘தீக்கதிர்’ வார இதழை மீண்டும் வரவழைத்து, நானும், இளம் வயதிலேயே மரணமடைந்த தோழர் டி.ராஜுவும் அதன் விற்பனைப் பொறுப்பை ஏற்றோம்.

சிஐடியு இயக்கத்தின் அலை

ஈரோடு டான்சி (TANSI) நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளம் தோழர்கள் வாலிபர் முன்னணியில் செயல்பட்டனர். அங்கு ஏஐடியுசி சங்கம் மட்டுமே இருந்தது. கொல்லம்பாளையம் நாச்சிமுத்து, மூலப்பாளையம் சண்முகம், செங்க ரப்பாளையம் சின்னசாமி, சந்திரன் போன்றோரின் முயற்சியால் அச்சங்கம் முழுமையாகச் சிஐடியு சங்கமாக மாறியது. தலைவராக மெயில் கே.பி.சின்னப்பனும், உதவிச் செயலாளராக நானும் பொறுப்பேற்றோம். தொடர்ந்து, ஈரோடு காலேஜ் ஹவுஸ், காமதேனு உணவகங்களில் சங்கம் அமைத்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பெருந்துறை ரோட்டில் உள்ள சீனிவாசா, காமதேனு, சிவக்குமார் ஆகிய ஆயில் மில்களில் தொழிலாளர்கள் டான்சி சங்கத்தில் சேர்ந்ததால், அது ‘டான்சி & பொதுத் தொழிலாளர் சங்கம்’ என மாறியது. இந்த தொழிலாளர்களைப் பணிய வைக்க முதலாளிகள் கதவடைப்புச் செய்த போது, மூன்று மாத காலம் தொழிலாளர்கள் உறுதியாகப் போராடினார்கள். இறுதியில் திருப்பூர் தோழர் கே.எஸ்.கருப்புசாமி மூலம் ஒப்பந்தம் உரு வாகி தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். இந்த வெற்றி தந்த உற்சாகத்தால், ஈரோட்டிலி ருந்த 56 நல்லெண்ணெய் மில்களிலும் தொழிலா ளர்கள் தாங்களாகவே வேலை நிறுத்தம் செய்து சங்கத்திற்கு வந்தார்கள். தோழர்கள் கே.ரமணி, ஆர்.வெங்கிடு, டி.பாலன் ஆகிய தலைவர்கள் வழிகாட்டலில் 13 நாள் வேலை நிறுத்தம் நடை பெற்று, இறுதியாக ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் விளைவாக எட்டு மணி நேர வேலை, மிகை நேரச் சம்பளம் (Overtime), வார விடுமுறை, ஈட்டிய விடுப்பு, இஎஸ்ஐ, பிஎப், போனஸ் போன்ற உரிமைகளைத் தொழிலாளர்கள் பெற்றார்கள்.

அடக்குமுறைகளும் சங்கம் தந்த பாடமும்

1979-இல் ஸ்ரீ கிருஷ்ணா ரீபைனரீஸ் எண்ணெய் ஆலைத் தொழிலாளர் போராட்டம் மூன்று மாதங்கள் நீடித்தது. நல்லெண்ணெய் ஆலை போனஸ் வேலை நிறுத்தத்தின்போது, என் மீதும் (கே.துரைராஜ்), ப.மாரிமுத்து, கே.பழனிச்சாமி மற்றும் தொழிலாளர்கள் சின்னப்பன், முத்து ஆகிய 5 பேர் மீதும் முதலாளிகள் பொய்வழக்கு கொடுத்து, காவல்துறை 307-பிரிவில் கொலை முயற்சி வழக்கு போட்டது. தோழர்கள் கே.ரமணி, ஆர்.வெங்கிடு ஆலோ சனையின்படி, கோவை சீனியர் வழக்கறிஞர் ஜி.நட ராஜன் சங்கத்துக்காக வழக்காடி எங்களை விடுதலை செய்தார். வழக்கறிஞர் துவாரகநாதனும் பொய் வழக்குகளை முறியடிப்பதில் தொடர்ச்சியாகச் செயல்பட்டார். போராட்டங்கள் வளர்ந்து சினிமா தியேட்டர், கேலண்டரிங் மில், விசைத்தறி, தூய்மைப் பணியாளர் கள், கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலைத் தொழி லாளர்கள் எனப் பலரும் திரண்டதால் சிஐடியு மிக வலிமை பெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பு, கட்டிடத் தொழிலாளர் சங்கம், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம், சுருட்டு தொழிலாளர் சங்கம், டிஆர்இயு போன்ற அமைப்புகளுக்குத் தோழர் கே.ரமணி நெருக்கமாக இருந்து வழிகாட்டினார். குறிப்பாகப் பஞ்சாலைகளில் தொழிற்சங்கம் அமைக்க இந்தக் கட்டுரையாளரும் தாராபுரம் என்.கனகராஜும் கடுமையாகப் போராடியபோது, தோழர் கே.ரமணி உடனிருந்து கோபி பாரியூர் அம்மன் மில், மேக்ஸ்வெல், அமர்ஜோதி ஸ்பின்னிங் மில், சலோனா காட்ஸ்பின், வேலன் டெக்ஸ் போன்ற பஞ்சாலை களில் வலிமையான தொழிற்சங்கத்தைக் கட்டி எழுப்பினார். சரியான தலைமையின் வழிகாட்டுதலும், அர்ப்பணிப்பு மிக்க தோழர்களின் கூட்டுச் செயல்பாடு களும் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதே வரலாறு தரும் பாடம். அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்த தோழர் கே.ரமணியின் 20-ஆவது ஆண்டு நினைவு தினம் மே 30 ஆகும். வர்க்கப் போராட்டக் களத்தில் அவர் காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம்!