தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றமும் தமிழும்; கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பும்! - மதுக்கூர் இராமலிங்கம்

1 hour before
சட்டமன்றமும் தமிழும்; கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பும்! - மதுக்கூர் இராமலிங்கம்

சட்டமன்றமும் தமிழும்; கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பும்! - மதுக்கூர் இராமலிங்கம்

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரில் மாநில உரிமைகள் குறித்தும், தாய்மொழியான தமிழுக்கு அளிக்க வேண்டிய முதன்மை குறித்தும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், அனைவரும் நேரடியாகப் பார்ப்பதற்கான வசதி ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்,அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தான “நீராரும் கடலுடுத்த...” பாடல் 3 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ‘வந்தே மாதரம்’பாடல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜகஅரசு சட்டம் இயற்றி, இந்தப் பாடலை அனைத்துநிகழ்வுகளிலும் முதல் பாடலாகவும் முழுமையாகவும் பாட வேண்டும் என்று வகுப்புவாத நோக்கில் கூறியுள்ளது. எனினும், உச்சநீதிமன்றம் இந்தப் பாடலைப்பாடுவது கட்டாயமல்ல என்றும், அனைத்து வரிகளையும் பாட வேண்டியதில்லை என்றும் ஏற்கெனவே கூறியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், ‘வந்தே மாதரம்’ பாடலைத்தான் முதலில்பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறவில்லை எனப்பின்வாங்கியுள்ளனர். இந்தப் பின்னணியில், தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்அவர்கள்,தமிழ்நாட்டின் அரசு நிறுவனங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்பாடப்பட வேண்டும் என்று அரசினர் தனித்தீர்மானம்கொண்டுவந்தது பாராட்டுக்குரியது.

பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்புச் செய்தநிலையில், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன்இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்பேரவையில் வரலாறு குறித்த வாதப் பிரதிவாதங்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. இந்தப் பின்னணியில், தமிழ்நாடு என்ற மொழிவழி மாநிலம் அமையப் பெற்றதிலும், சென்னைமாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டதிலும், தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உண்மையான வரலாற்றுப் பங்களிப்பை நினைவுகூர வேண்டியுள்ளது.

மொழிவழி மாநிலங்களும் கம்யூனிஸ்ட்களும்

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, மொழிவழி மாநிலங்கள் என்பதை முதன்முதலில் முன்மொழிந்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்தான். விடுதலைக்குப் பின்பு மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, முன்பின்முரணின்றி மொழிவழி மாநிலங்களைத் தொடர்ச்சியாக வலியுறுத்தியவர்கள் கம்யூனிஸ்ட்களே. விடுதலைப் போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியும் மொழிவழி மாநிலங்களை ஆதரித்தது என்றாலும், பின்னர்தடுமாறி ஊசலாடியது.

1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ்மாநாட்டில், அந்தக் கட்சியை மொழிவாரியாகப் பிரித்துமாநில அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், நாடு விடுதலை பெற்ற பிறகு மொழிவழி மாநிலம் அமைக்ககாங்கிரஸ் தலைமையிலான அரசு தயங்கியது; “ஒருமைப்பாடு பாதிக்கப்படும்” என்று சப்பைக்கட்டு கட்டியது.ராஜாஜி போன்றவர்கள் மொழிவழி மாநிலத்தை மறுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளை இணைத்து ‘தட்சிணபிரதேசம்’அமைக்கலாம் என்று குறுக்குச்சால் ஓட்டினார்கள். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கம்மொழிவழி மாநிலத்தை ஒருபோதும் ஏற்றதில்லை. இன்னும் சொல்லப்போனால், வலிமையானமாநிலங்களே கூடாது என்பதும், அதிகாரங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட ஒன்றிய அரசு என்பதும்தான் அவர்களுடைய கோட்பாடு. மாநிலங்களுக்குப் பதிலாக, பிரதேசங்களை ‘ஜனபாதங்களாக’ப் பிரிக்கலாம் என்றார்கள்.

1952-இல் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் கோரிய பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த்தியாகத்திற்குப் பிறகுதான் முதல் மொழிவழி மாநிலமாக ஆந்திர மாநிலம் உருவானது. 1951 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி, 1952 ஆம் ஆண்டு தொடக்கத்தில்முடிவுற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில், சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முன்னணி அமைத்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணிக்குப் பெரும்பான்மைகிடைத்தபோதும், குறுக்கு வழியில் குதிரைப்பேரத்தின் மூலம் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது என்பது வரலாறாகும்.

சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்களின் பங்கு

சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர் பி.ராமமூர்த்தி மதுரை வடக்குத் தொகுதியிலிருந்தும், தலைமறைவாக இருந்த தோழர் மணலி கந்தசாமி திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியிலிருந்து தோழர் ஜீவா, திருச்சியிலிருந்து தோழர் எம்.கல்யாணசுந்தரம் உட்பட இன்றைய தமிழ்நாடு பகுதியிலிருந்து 13 கம்யூனிஸ்ட்கள் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல, சென்னை மாகாணத்தின் ஆந்திரப் பகுதியிலிருந்து 42 கம்யூனிஸ்ட்களும், கேரளத்தின் மலபார் பகுதியிலிருந்து 8 கம்யூனிஸ்ட்களும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் தேர்தலில், மொழிவழி மாநிலம் அமைக்கப்படும் என்பது கம்யூனிஸ்ட்களின் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

இந்தச் சென்னை மாகாணச் சட்டப் பேரவையில் ஆங்கிலமே பேசுமொழியாக இருந்தது. ஆனால், மொழிவழிமாநிலத்திற்காகப் போராடி வந்த கம்யூனிஸ்ட்கள், தாய்மொழியிலேயே சட்டப்பேரவை நடவடிக்கைகள் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். அதன்படி, தமிழ்நாடு பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்கள் தமிழிலும், ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தெலுங்கிலும், மலபார் பகுதியைச் சேர்ந்தவர்கள் மலையாளத்திலும் முழக்கமிட்டனர்.

மொழிவழி மாநிலம் அமைக்க மறுப்பதைக் கண்டித்தும், ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வலியுறுத்தியும் ஒரு அனைத்துக் கட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நீதிக்கட்சி,திமுக, சோசலிஸ்ட் கட்சி மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையிலான புதுவை மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. இதன் சார்பாக நடைபெற்ற பேரணியில் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். பேரணிக்குத் தலைமை தாங்கி வந்ததலைவர்களான எம்.ஆர்.வெங்கட்ராமன், ஜீவா ஆகியோர் மீது காவல்துறையினர் நடத்திய தடியடித் தாக்குதலில் ஜீவா மயங்கி விழுந்தார்.

எம்.ஆர்.வெங்கட்ராமனின் மூக்குக் கண்ணாடி உடைந்து நெற்றியில் அரை அங்குலத்திற்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது;ஏராளமானோர் படுகாயமடைந்தனர். ஜீவா, எம்.ஆர்.வி உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு பெயர் சூட்டலும் தமிழ் ஆட்சிமொழியும்

1956 நவம்பர் 1 அன்று மொழிவழி மாநிலங்கள் மலர்ந்தன. கம்யூனிஸ்ட்களின் நீண்டகாலக் கனவான ஐக்கிய தமிழகம் நனவானது; எனினும், ‘சென்னை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டது. தோழர் எம்.கல்யாணசுந்தரம் ஒவ்வொரு ஆண்டும் ‘தமிழ்நாடு’ என்று பெயர்சூட்டக் கோரி தீர்மானம் கொண்டுவருவதும், அதை எதிர்த்து “தமிழ்நாடு என்று வைத்துவிட்டால் சோறு கிடைத்துவிடுமா?” என்று ஏகடியம் பேசி மறுப்பதும் நடந்துவந்தது.

சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர்சூட்டக் கோரி உண்ணாவிரத அறப்போர் இருந்த விடுதலைப்போராட்ட வீரரும் காங்கிரஸ்காரருமான விருதுநகர் சங்கரலிங்கனாருக்குப் பாதுகாப்பாக நின்றது கம்யூனிஸ்ட்இயக்கம். 77 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு, 1956 அக்டோபர் 13 அன்று மதுரை அரசு மருத்துவமனையில்உயிர் நீத்தார்சங்கரலிங்கனார். அவர் தனது உடலைக் கம்யூனிஸ்ட்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்த அடிப்படையில், மதுரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்தலைவர்கள் கையெழுத்திட்டு அவரதுஉடலைப் பெற்றுக்கொண்டனர். 1963-இல் சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்டக் கோரி தோழர் பி.ராமமூர்த்தி தீர்மானம் கொடுத்திருந்தார். விவாதம் நடந்த அன்று தோழர் பி.ராமமூர்த்தி அவையில் இருக்க முடியாத சூழலில், தோழர் பூபேஷ் குப்தா இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்துபேசினார். 1967-இல் அறிஞர் அண்ணா தலைமையில்திமுக அரசு அமைந்த பிறகுதான், சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது.

1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணச் சட்டமன்றத்தில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட முன்வரைவை சி.சுப்பிரமணியன் கொண்டுவந்தார். இந்த முன்வரைவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர்தோழர் பி.ராமமூர்த்தி மகத்தான ஒரு உரையைநிகழ்த்தினார். தமிழ் ஆட்சிமொழிச் சட்ட விவாதங்களின் போது தோழர்கள் ஏ.பாலசுப்பிரமணியம், என்.சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி போன்ற தலைவர்கள் நிகழ்த்திய உரைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை ஆகும். அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழே தலைமை தாங்க வேண்டும் என தோழர்என்.சங்கரய்யா தொடர்ந்து முழங்கி வந்தார்.

தாய்மொழிக்கு முதன்மை

இந்தியா - ஆங்கிலமா என்ற விவாதங்கள் முன்னுக்கு வந்தபோது, அவரவர் தாய்மொழியே ஆட்சிமொழியாகவும் பயிற்சி மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவுடமை இயக்கம் முன்பின் முரணின்றிஎடுத்த சரியான நிலைப்பாடாகும்.தமிழக சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி, 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வரவு -செலவுத் திட்டம் குறித்து ஒருமணிநேரம் தமிழில் சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் பேசினார். நிதிநிலை அறிக்கையை ஆங்கிலத்தில் சமர்ப்பித்த நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம், “தமிழில் பொருளாதாரப் பிரச்சனைகளை விளக்கமுடியும் என்பதை தோழர் பி.ராமமூர்த்தி நிரூபித்துவிட்டார்” என்று சொல்லித்தான் தன்னுடைய பதில் உரையைத் தொடங்கினார்.

தொடக்க காலத்தில் தோழர் பி.ராமமூர்த்தி ஆங்கிலம் கலந்த தமிழில் பேசும்போது, அடுத்து பேசவரும் தோழர் ஜீவா, “இதுவரை தோழர் பி.ராமமூர்த்தி பேசியதை நான் தமிழில் சொல்கிறேன்” என்றுதன்னுடைய உரையைத் தொடங்குவாராம். ஆனால்,தன்னுடைய முயற்சியாலும் பயிற்சியாலும் தங்குதடையின்றி பொருளாதாரம், தத்துவம், அரசியல் எனத் தமிழில் பல மணிநேரம் பேசும் ஆற்றலைவளர்த்துக்கொண்டார் தோழர் பி.ராமமூர்த்தி.

இன்றைய நிதியமைச்சர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மொழியைத் திருத்தமுறப் பேச வேண்டும் என்றுசுட்டிக்காட்டினால், தேவையில்லாமல் கோபப்பட்டு மதத்தை இழுக்கக் கூடாது. அவரே தன்னுடைய மொழியில் பிரச்சனை இருக்கிறது என்பதைத் தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறார். இங்கு கிறித்தவத்தைப் பரப்ப வந்த அயல்நாட்டைச் சேர்ந்த பாதிரியார்கள் கூட தமிழ் மொழியின் வலிமையால் கவர்ந்து ஈர்க்கப்பட்டு, தமிழ் பயின்று உலகம் முழுவதும் அந்தமொழியை பரப்புவோர்களாக மாறினார்கள் என்பதே கடந்த கால வரலாறாகும்.இந்தியாவின் முதல் மாநகராட்சியாக விளங்கிய சென்னை மாநகர மன்றத்தில் ஆங்கிலத்தில்தான் உரை நிகழ்த்தவேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்த காலத்தில், 1925 ஆம் ஆண்டு சென்னை மாநகர மன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தன்னுடைய முதல் உரையைத் தமிழில்தான்நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிவழி மாநிலம் என்பதும் தாய்மொழி வாழ்த்து என்பதும் இந்தியாவின் பன்முகத் தன்மையின் அடையாளங்களாகும். இந்தியாவின் மதச்சார்பின்மையையும், கூட்டாட்சியையும், மக்களாட்சியையும் பாதுகாக்க இடையறாது போராடிவரும் கம்யூனிஸ்ட்கள், சங்பரிவாரத்தின் ஒற்றைக் குவிப்புக்கு எதிராக இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.