“என் நரம்புகளில் ஓடும் சிவப்பு நிறமே கம்யூனிசம்!”
15 Feb 2026, 3:03 pm
<p><strong>“என் நரம்புகளில் ஓடும் சிவப்பு நிறமே கம்யூனிசம்!” </strong></p>
<p>மேடையில் வாச்சாத்தி பெண்மணிகளின் கண்ணீரைக் கண்டு கலங்கிய கண் களுடன் கலைஞானி கமலஹாசன் உணர்ச்சிகரமாக பேசினார். தாஜ்மஹால் இடிந்தால் காதல் நின்றுவிடுமா? “அனைவருமே ஒரே இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இது நீதியை நோக்கிய நீண்ட பயணம். ‘ஏன் சோவியத் ஒன்றியம் உடைந்து போய்விட்டது, அப்புறம் ஏன் இன்னும் கம்யூனிசம் பேசு கிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில்: ‘மிஸ்டர் ரோமியோ, உங்கள் தாஜ்மஹால் இடிந்து போய்விட்டால் காதல் செய்வதை நிறுத்திவிடுவீர்களா?’. அந்த மாதிரி கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு. ஸ்பார்ட்டகஸ் வென்றிருந்தால் ஒருவேளை கிறிஸ்து வேறு புத்தகம் எழுதியிருப்பார். கிறிஸ்து சிலுவையில் அறையப்படாமல் இருந்திருந்தால் மார்க்ஸ் தனது புத்தகத்தைச் சற்று மாற்றியிருக்கக்கூடும். வரலாற்றின் இத்தகைய நீண்ட பயணத்தில், தாமதிக்கப்பட்ட நீதிக்காக நாம் அனைவரும் கட்சி பேதமற்று ஒன்று சேர வேண்டும். உங்கள் கையில் இருக்கும் கொடி உங்களுக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும், ஆனால் நம் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும். நானும் ஒரு உழைப்பாளிதான் திரைத்துறையில் தொழிலாளர் களுக்குக் கூலியை உயர்த்தப் பேரம் பேசிக்கொண்டிருந்தபோது, நானும் ஒரு தொழிலாளி என்ற முறையில் தொழிலாளியின் பக்கம்தான் நின்றேன். அதற்காகத் தயாரிப்பாளர்கள் என்னை இரண்டு வருடம் திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்கத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் பிறந்த வீட்டிற்கே (தொழிலாளர் வர்க்கம்) சென்றேன். வியாபாரிகள் என்னை நட்சத்திரமாக்கி இருக்கலாம், ஆனால் என் வேர்களை நான் மறக்கவில்லை. நானும் ஒரு ‘Skilled Labour’ (திறன் பெற்ற தொழிலாளி)தான். வறுமையை மூலதனமாக்கும் எகானமி இன்றும் நாம் ‘மன்னராட்சி’ மனநிலையிலிருந்து விடுபடவில்லை. ‘எங்க ஆளுதான் கிங்’ என்கிறார்கள். கிங் எதுக்குய்யா? நீங்கள்தான் இந்நாட்டின் மன்னர்கள் என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். மூலதனத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் வறுமையும், பட்டினியும் இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ‘நெல் வீணாகிறதே’ என்றால் ‘அதுதான் பொருளாதாரம்’ என்கின்ற னர். இந்த எகானமி எனக்குப் புரிய வில்லை. வறுமையின் நிறம் சிவப்பு என்பார்கள்... என் கோபத்தின் நிறமும் சிவப்புதான். நீங்கள் எனக்குப் போர்த்திய இந்தச் சிவப்புப் போர்வை என் நரம்புகளில் ஓடிக்கொண்டி ருக்கும் நிறம். கண்ணீரின் ஈரம் காயவில்லை இன்று வாச்சாத்தி மக்கள் எனக்கு வழங்கிய பரிசில் இருந்த கோந்து இன்னும் காயவில்லை. அதைப்போலவே அவர்களின் கண்ணீரும் இன்னும் காயவில்லை. அந்த ஈரத்தை அப்படியே நெஞ்சில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஈரம் காய்ந்துவிட்டால், அப்புறம் இது வெறும் அரசியலாகிவிடும். நீங்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், ஒரு காம்ரேடாக இருங்கள். வாச்சாத்தி ஆவணப்படத்தைச் சின்ன அரங்கத்தில் திரையிடுவதே சரியான உத்தி. தண்டி யாத்திரை யை காந்தி 50 பேருடன் தான் தொடங்கினார். இங்கிருந்து கிளம்பும் செய்தி உலகம் முழுக்கப் போய்ச் சேர வேண்டும். வெண்மணி தியாகிகளின் சாம்பலை நெற்றியில் பூசும் திருநீறாகப் பயன்படுத்தாதீர்கள்; அது உங்கள் மூளைக்குள் இருக்க வேண்டும். அநீதி இழைக்கப்படும் போது எவர் ஒருவர் கேள்வி கேட்கிறாரோ அவர் காம்ரேட்.”</p>
<p> </p>
