‘கம்யூனிசம் இந்த மண்ணிற்குப் புதியதல்ல’
23 Feb 2026, 5:35 pm
<p><strong>‘கம்யூனிசம் இந்த மண்ணிற்குப் புதியதல்ல’</strong></p>
<p>திருவனந்தபுரம், பிப். 23- “இந்தியாவில் கம்யூனிசம் என்பது ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு அந்நிய சித்தாந்தம் என்று வாதிடுபவர்கள், உண்மையில் பாசிசக் கொள்கைகளை இறக்குமதி செய்தவர்களே” என்று சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி சாடினார். திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் உள்ள நான்காவது எஸ்டேட் மண்டபத்தில், டாக்டர் சாந்தவிலா முரளி எழுதிய ‘ஆலக கம்யூனிஸ்ட் பத்திரிகைகள்’ (Alaka Communist Periodicals) என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. கேரள மீடியா அகாடமி வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் மினி சுகுமார் பெற்றுக்கொண்டார். அய்யா வைகுண்ட சுவாமியின் கனவு விழாவில் சிறப்புரையாற்றிய எம்.ஏ. பேபி, “கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே, இந்த மண்ணில் அய்யா வைகுண்ட சுவாமி போன்ற மகான்கள் சமத்துவக் கருத்துக்களை முன்வைத்தார்கள். அனைவரும் சமம், ஆண்-பெண் சமத்துவம் போன்றவற்றை அவர் வாதிட்டார். அது ஒரு கற்பனையான சோசலிசமாக இருந்தது. மார்க்சும் ஏங்கெல்சும் செய்த மகத்தான சாதனை என்னவென்றால், அத்தகைய கற்பனையான சோசலிசக் கருத்துக்களை ‘அறிவியல் சோசலிசமாக’ மாற்றியதுதான். எனவே, கம்யூனிசம் இந்த மண்ணிற்குப் புதியதல்ல,” என்று விளக்கினார். பாசிசத்தின் முகமூடி தொடர்ந்து பேசிய அவர், “ஹிட்லர் மற்றும் முசோலினி யின் பாசிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதே இராணுவக் கட்டமைப்பின் அடிப்படையில் அமைப்புகளை உருவாக்கி யவர்கள்தான் இன்று கம்யூனிசத்தை விமர்சிக்கிறார்கள். அவர்கள் வெறுப்பைப் பரப்பி, நாட்டை இருண்ட காலத்திற்கு (Black Age) அழைத்துச் செல்ல முயல்கிறார்கள். அவர்களுக்கு எதிராகச் சமூகத்தின் உண்மை நிலையையும், சமத்துவத்தை யும் உரக்கச் சொல்ல வேண்டிய கடமை கம்யூனிசப் பத்திரிகைகளுக்கு உண்டு. உலகெங்கிலும் உள்ள கம்யூனிச இதழ்கள் செய்திகளை நேர்மையுடனும் துல்லியத்துடனும் பதிவு செய்த வரலாற்றை நாம் போற்ற வேண்டும்,” என்றார்.</p>
<p> </p>
