கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
13 Jul 2026, 12:21 am

ரயில் சேவைகளில் மாற்றம்

சேலம், ஜூலை 12- கரூர் ரயில் நிலையத்தில் நடைபெற உள்ள ரயில் பாதை சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் கார ணமாக, ஜூலை 14 ஆம் தேதி (நாளை) ஈரோடு, திருச்சி மார்க்கமாக இயங்கும் சில ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி சந்திப்பிலிருந்து காலை 07.25 மணிக்கு ஈரோடு புறப்படும் பயணிகள் ரயில் (எண். 56809), ஜூலை 14 ஆம் தேதியன்று கரூருடன் நிறுத் தப்படும். திருச்சியில் இருந்து கரூர் வரை மட்டுமே இயங்கும். அதேபோல், ஈரோட்டிலிருந்து காலை 08.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் (எண். 56106), மூர்த்திபாளையம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். ஈரோட்டில் இருந்து மூர்த்திபாளையம் வரை மட்டுமே இயங் கும். ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண். 16845), ஈரோட்டிற்கு பதிலாக கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஈரோடு மற்றும் கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருச்சியில் இருந்து மதியம் 1.00 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண். 16843), திருச்சிக்கு பதிலாக கரூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு சென்ற டையும். செங்கோட்டையில் இருந்து அதிகாலை 05.20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் (எண். 16846), கரூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த பின்னர், இந்த ரயில் கரூரில் இருந்து ஈரோட்டிற்கு வழக்கமான நிறுத்தங்களுடன் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று மின்தடை

உடுமலை, ஜூலை 12- திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர் துணை மின் நிலையத்தில் திங்களன்று (இன்று) மாதாந் திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் உடு மலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, இராமேகவுண்டன்புதூர், மெட் ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காதென மின்வாரிய செயற்பொறியா ளர் த.மூர்த்தி அறிவித்துள்ளார். இதேபோன்று, ஈரோடு மாவட்டம், கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் திங்களன்று (இன்று) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சித்தார், கேசரிமங்கலம், பூதப்பாடி, குட்டமுனியப்பன்கோயில், சிங்கம்பேட்டை, எஸ்.பி.கவுண்ட னூர், கல்பாவி, காடப்பநல்லூர், சின்னப்பள்ளம், குறிச்சி, ஆனந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காதென மின்வாரிய செயற்பொறியாளர் டி.சண்முக சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

குப்பை பிரச்சனைக்கு போர்க்கால வேகத்தில் தீர்வு காணக

திருப்பூர், ஜூலை 12- குப்பை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டக் குழு கூட்டத்தின் முடிவாக வெளியிட்டுள்ள தீர்மானத்தில், திருப்பூர் மாநகரத்தில் உள்ள 60 வார்டுகளிலும் அதையொட்டி உள்ள கிராமப் பகுதிகளிலும், குப்பை மற்றும் உணவு கழிவு கள், இறைச்சி கழிவுகள் பல நாட்களாக குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாநகரத்திற்கு தற்போது குப்பை பிரச்சனையால் தொழில் கொள்முதல் செய்ய வருகை தரும் வெளிநாட்டு பையர்கள் வருகையும் குறைந்துள்ளதாக பனியன் உற்பத்தியாளர்களும் பெரும் கவலையுடன் தெரிவித்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக திருப்பூர் மாநகரத்தில் கடுமை யான நெருக்கடியை உருவாக்கி வரும் குப்பை பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் பொது மக்கள், தொழில் முனைவோர், வணிகர்க ளின் போராட்டத்தை தவிர்க்க இயலாது என் பதையும் மாநில அரசுக்கு சுட்டிக்காட்ட விரும் புவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து

சேலம், ஜூலை 12- சேலம் மாவட்டம், ஓம லூர் அருகே சேலம் - பெங் களூரு தேசிய நெடுஞ்சாலை யில், சந்தைத்தடம் சந்திப் பில் சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால், அதி வேகத்தில் வந்த கர்நாடகா மாநில பதிவு கொண்ட கார், கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில், சரக்கு வாக னத்திலிருந்து ஒரு நபர் பறந்து விழுந்தார். இந்த விபத்தில் ஒருவருக்கு கை எலும்பு முறிந்தது. இதுதொடர் பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்திலிருந்து தில்லிக்கு விரைவில் விமான சேவை!

சேலம், ஜூலை 12- சேலத்திலிருந்து தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய இயக்குநர் நவ்ஷாத் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலை யம் உள்ளது. இங்கிருந்து தற்போது சென்னை, கொச்சி, பெங்களூரூ, ஐதரா பாத் ஆகிய நகரங்களுக்கு விமானங் கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையை சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்ட மக்கள் பயன்ப டுத்தி வருகின்றனர். அதேசமயம், சேலம் விமான நிலையத்தை விரிவாக் கம் செய்து, இரவு நேர விமான சேவை மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்க ளுக்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந் நிலையில், மேட்டூரை சேர்ந்த சமூக ஆர் வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 4 கேள்விகளை கேட்டு சேலம் விமான நிலைய இயக்குநர் நவ்ஷாத் திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சேலத்திலிருந்து சென்னைக்கு தினமும் காலை மற்றும் மாலையில் விமானம் இயக்க வேண்டும். அதே போல், சேலத்திலிருந்து மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்க ளுக்கு புதிய நேரடி விமான சேவை களை அறிமுகப்படுத்துதல், விமான நிலைய முனைய விரிவாக்கம், பயணி கள் வசதிகள் மற்றும் செயல்பாட்டு வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், இரவு நேர தரையிறக்க வசதிகளை செய்தல் போன்ற கேள்வி கள் கேட்கப்பட்டிருந்தன. இதற்கு விமான நிலைய இயக்கு நர் நவ்ஷாத் அளித்த பதிலில், சேலத்தி லிருந்து சென்னைக்கு தினமும் கூடுதல் விமானங்களை இயக்குமாறு சம்பந்தப் பட்ட விமான நிறுவனங்களை கேட்டு கொண்டுள்ளோம். சேலம் விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின் றன. இந்த பணிகள் முடிந்த பிறகு சேலத்தில் இருந்து தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், இரவு நேரத்திலும் விமானம் தரை யிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு வரு கிறது. விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கான தேவையான நிலங் களை கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால், சம்பந்தப் பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. அந்த பணிகளும் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க் கிறோம், என கூறப்பட்டுள்ளது.

பஞ்சு கிடங்கில் பயங்கர தீ விபத்து

திருப்பூர், ஜூலை 12- குண்டடம் அருகே பஞ்சு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக் கிரையாகின. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடத்தை வேங்கிப்பாளையம் அருகே செங்காட்டுத் தோட்டம் பகுதி யில் நந்தகோபால் (47) என்பவருக்கு சொந்தமான பஞ்சு கிடங்கு உள்ளது. இங்கு சனியன்று திடீரென கரும்புகை எழுந்துள்ளது. இதையடுத்து தீ மளமளவென பரவி, அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி யது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாரா புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை யில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக் கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேசன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவும் இணைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் அங்கி ருந்த பல லட்சம் மதிப்பிலான கழிவு காட்டன் பொருட்கள் தீக் கிரையாகின. பணியிலிருந்த தொழிலாளர்கள் உரிய நேரத் தில் கிடங்கை விட்டு வெளியேறியதால், உயிர் சேதம் தவிர்க் கப்பட்டது.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு

நாமக்கல், ஜூலை 12- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் 100 இடங்களாக இருந்த மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை, 150 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் நாமக்கல்லும் ஒன்று. மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.380 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 2022 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (நீட்) தேர்ச்சி பெற்ற 100 மாணவர்கள் இங்கு சேர்க்கை பெற்றனர். இந்த 100 மாணவர்களில் 15 இடங்கள் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கான ஒதுக்கீடாகும். கடந்த திமுக ஆட்சியில் 100 சேர்க்கை இடங்களை 150 இடங்களாக உயர்த்த வேண்டும் என தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு போதுமான வசதிகள் இல்லை என்ற குறைபாட்டை சுட்டிக்காட்டி மறுத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து வந்த மூன்று மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாணவர்களுக்கான பயிற்சி அரங்குகள், வகுப்பறைகள், தங்குமிடங்கள், மருத்துவமனையில் நேரடி பயிற்சி, துறைத் தலைவர்கள், மருத்துவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களைக் கேட்டறிந்தனர். இதில் திருப்தி ஏற்படவே மாணவர் சேர்க்கை இடங்களை 150 ஆக அதிகரிப்பதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாக, மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீட்டர் அடிப்படையில் மட்டுமே கட்டண வசூல் செய்யக் கோரிக்கை

உதகை, ஜூலை 10- தமிழ்நாட்டில் மீட்டர் அடிப்படையிலான கட்டண வசூல் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்டம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில், தமிழ்நாட்டில் பொது போக்குவரத்துக்கு அடுத்தபடியாக, ஆட்டோக்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆட்டோ கட்டண நிர்ணயம் என்பது ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் பொருளாதார நலன், நுகர்வோர் உரிமைகள், பயணிகள் பாதுகாப்பு மற்றும் சேவை தரத்தையும் உள்ளடக்கிய பொது நலக்கொள்கையாக கருதப்பட வேண்டும். எரிபொருள் விலை, வாகன பராமரிப்பு செலவு, காப்பீடு, வரிகள், பணவீக்கம், வாகன தேய்மானம் மற்றும் ஓட்டுநர்களின் நியாயமான வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஆட்டோ கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். எரிபொருள் விலை மற்றும் பணவீக்க மாற்றங்களை கருத்தில் கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு மறு ஆய்வு செய்ய வேண்டும். மீட்டர் பயன்படுத்த மறுத்தல், அதிக கட்டணம் வசூலித்தல், பயணிகளை ஏற்க மறுத்தல் மற்றும் தவறான நடத்தை போன்ற விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம், உரிமம் இடைநீக்கம் மற்றும் மீண்டும் மீண்டும் மீறினால் அனுமதி ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மஞ்சள் சிறப்பு மையத்தை விரைந்து திறக்க வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 12- அரச்சலூர் அருகே கட்டப்பட்டுள்ள மஞ் சள் சிறப்பு மையத்தை விரைந்து திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர். ‘மஞ்சள் மாநகரம்’ என்றழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தில்தான் அதிகளவில் மஞ் சள் விளைவிக்கப்படுகிறது. கீழ்பவானி, காலிங்கராயன் மற்றும் அரக்கன்கோட்டை தடப்பள்ளி ஆகிய வாய்க்கால் பாசனத்துக் குட்பட்ட பெரும்பாலான விவசாயிகள் மஞ் சள் பயிரிடுகின்றனர். குறிப்பாக மொடக் குறிச்சி, கொடுமுடி, கோபி, அவல்பூந்துறை, அரச்சலூர் ஆகிய பகுதிகளில் அதிகப்படி யாக மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக இங்கு மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்தனர். ஈரோடு மஞ் சளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு புவிசார் குறி யீடு கிடைத்தது. இதையடுத்து மொடக் குறிச்சி பகுதியில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க கடந்த 2018-2019 ஆம் ஆண்டு தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய் தது. அதைத்தொடர்ந்து அரச்சலூர் அருகே வடுகபட்டி வினோபா நகரில் 10 ஏக்கர் பரப் பளவில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, 2022-2023-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டும் பணி நடைபெற் றது. இந்த மையத்தில் ஒரு பகுதி மஞ்சளை உற்பத்தி செய்யும் விலை நிலங்களாகவும், மற்றொரு பகுதியில் மஞ்சள் சிறப்பு மைய கட்டடம் கட்டும் பணியும் தொடங்கியது. மேலும், விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கான பயிற்சிக் கூடம், ஆய்வுக் கூடம், மஞ்சளை காய வைப்பதற்கான களம், உலர் களம், சூரிய சக்தியுடன் கூடிய களம் மற்றும் மஞ்சள் சிறப்பு மையத்தில் விளை விக்க கூடிய மஞ்சளை இருப்பு வைத்து விவ சாயிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல் வேறு வசதிகள் கொண்ட மஞ்சள் சிறப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத் தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 6 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே, மஞ்சள் விவசாயிகளுக்காக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண் டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ள னர்.

சாலைப்பணியாளர் சங்க பேரவை

திருப்பூர், ஜூலை 12- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியா ளர் சங்கத்தின் மூலனூர் உட்கோட்ட 10ஆவது பேரவை அண்மையில் நடைபெற்றது. மூலனூர் திலகம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பேரவைக்கு உட்கோட்டத் தலைவர் ப.சுப்பிரமணியன் தலைமை ஏற்றார்.துணைத் தலைவர் சு.பெரியசாமி வர வேற்றார். கோட்டத் துணைத் தலைவர் ர.செல்வகுமார் தொடக்கி வைத்துப் பேசினார். செயலாளர் மா.விவே கானந்தன் அறிக்கை முன் வைத்தார். கோட்டத் துணைத் தலைவர் வீ.தங்கவேல், இணைச் செயலாளர் ஆ.மணி மொழி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கோட்டச் செய லாளர் இல.தில்லையப்பன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். கோட்ட செயற்குழு உறுப்பினர்.சண்முகம் நன்றி கூறினார்.

யானை தாக்கி அரசுப்பள்ளி ஆசிரியர் படுகாயம்

தருமபுரி, ஜூலை 12- ஏரியூர் அருகே ஒற்றை யானை தாக்கியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசுப்பள்ளி ஆசிரியர் படு காயமடைந்தார். தருமபுரி மாவட்டம், ஏரியூரை அடுத்த காமராஜ் பேட்டையை சேர்ந்தவர் சின்னமுத்து (39). இவர், ராயக் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வெள்ளியன்று நள்ளிரவு ராயக்கோட்டை பகுதியிலி ருந்து ஏரியூருக்கு இருசக்கர வாகனத்தில் சின்னமுத்து சென்று கொண்டிருந்தார். பெரியவத்தலாபுரம் - சந்தைப் பேட்டை இடைப்பட்ட உள்ள வனப்பகுதியில் கொடுகட்டை காடு பகுதியில் உள்ள சாலையை கடந்து பேவனூர் பீட் வனத்துக்குள் ஒற்றை யானை நுழைவதை கண்டதும், சின்னமுத்து தனது வாகனத்தை சாலையில் நிறுத்தியுள்ளார். அப்போது, அவரை நோக்கி வந்த ஒற்றை யானை, இருசக்கர வாகனத்தை தூக்கிவீசியது டன், சின்னமுத்துவை மிதித்தது. அவரது அலறல் கேட்டு வந்த பொதுமக்கள், சின்னமுத்துவை மீட்டு பென்னா கரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை யிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டார். இதுகுறித்து பென்னாகரம் வனத்துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.