கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
2 hours before

ரூ.150 கோடி ஃபாரக்ஸ் டிரேடிங் மோசடி புகார்

சேலம், அக்.5-சேலத்தில் ரூ.150 கோடி ஃபாரக்ஸ் டிரேடிங் மோசடியில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து, பணத்தை மீட்டுத்தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘எம்சிஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற ஃபாரக்ஸ் டிரேடிங் நிறுவனம், 150-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், லாபத்தில் 4 சதவீதம் பங்குத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2020 முதல் 2023 வரை தொடக்கத்தில் சுமார் 3 மாதங்கள் மட்டும் வாக்குறுதியளித்தபடி தொகை வழங்கிவிட்டு, பின்னர் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், நகைகளை அடகு வைத்தும், தனது மகள், சகோதரி, நண்பர்கள் பெயர்களிலும் மொத்தம் ரூ.48 லட்சம் முதலீடு செய்ததாகவும், இதுவரை பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.சிசிபி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய நபரான வாசுதேவன் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரை கைது செய்து, முதலீட்டாளர்களின் பணத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளிக்கப்பட்டது.

பட்டா கேட்டு பட்டியலின மக்கள் மனு

தருமபுரி செப் -5,கணபதிப்பட்டி மோட்டூர் கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டு அப்பகுதி மக்கள் தருமபுரி ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.

அம்மனுவில், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தாமரைகோழியம்பட்டி வருவாய் கிராமத்திற்குட்பட்ட கணபதிப்பட்டி மோட்டூர் கிராமம் இங்கு பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை பெருக்கம் மற்றும் திருமணமானவர்கள் என குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தற்போதுள்ள குடியிருப்பு பகுதிகளில் வீட்டுமனை பற்றாக்குறை உள்ளது. இதனால் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, கணபதிப்பட்டி மோட்டூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான, பொதுப் பயன்பாட்டிற்கு இடையூறு இல்லாத மற்றும் குடியிருப்பு பயன்பாட்டிற்கு தகுதியான அரசு புறம்போக்கு நிலங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை வருவாய்த்துறை மூலம் கள ஆய்வு செய்து கண்டறிந்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும்.மேலும் மனைப்பட்டா வைத்திருப்பவர்களுக்கு அரசு வீடுவழங்கவேண்டும்என தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்து கோவில் உண்டியல்கள் உடைப்பு

உதகை, அக்.5– நீலகிரி மாவட்டம், உதகை - குன்னூர் வால்சம் சாலையில் உள்ள மாதா கோவில் மற்றும் பாம்பே கேசில் பகுதியில் உள்ள ஆலயத்தில் பூட்டை உடைத்து, உண்டியலில்இருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திங்களன்று காலை கோவில் கதவு திறக்கப்பட்டபோது இத்திருட்டு தெரியவந்தது.

இதுகுறித்து உதகை மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே கும்பல் இந்த திருட்டுகளில் ஈடுபட்டதாஎன்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள கோவில்களில் திருட்டு நடந்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அனுபவமுள்ள பயிற்றுநர்களை நியமிக்க கோரிக்கை

தருமபுரி, செப். 5-மொரப்பூரில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அனுபவமுள்ள பயிற்றுநர்களை நியமிக்க கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் திங்களன்று மனு அளித்தனர்.

அம்மனுவில், தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பயின்று வருகின்றனர். இந்த பயிற்சி நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக கூட்டுறவுத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற ஓய்வுபெற்ற பணியாளர்கள் பயிற்றுநர்களாக பணியாற்றி, மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஏற்கனவே பணியாற்றி வந்த 4 பயிற்றுநர்களும் மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிதாக 4 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்றுநர்களுக்கு கூட்டுறவுத் துறையில் போதிய அனுபவம் இல்லாததால், பாடங்களை புரிந்துகொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

எனவே, கூட்டுறவுத் துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவர்களை பயிற்றுநர்களாக நியமித்து, தரமான பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்போது, அனுபவம் இல்லாத புதிய பயிற்றுநர்களை மாற்றி, கூட்டுறவுத் துறையில் அனுபவம் பெற்றவர்களை மீண்டும் பயிற்றுநர்களாக நியமிக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், புதிய பயிற்றுநர்களின் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.