கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
31 Oct 2026, 12:04 am

ஆட்சியர் அலுவலகத்தில் மின்தடைஇ-சேவை மையப்பணிகள் பாதிப்பு

கோவை, அக்.30-கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 45 நிமிடங்களுக்கு மேலாக மின்சாரம் தடைபட்டதால், இ-சேவைமையம் உள்ளிட்ட அலுவலகப்பணிகள் பாதிப்புக்குள்ளானது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பழைய கட்டடம் செயல்படுகிறது. இந்த கட்டடத்தில், இ-சேவை மையம், நில அளவைப் பிரிவு, குழந்தைகள்நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், வெள்ளியன்று திடீரென மின்சாரம்துண்டிக்கப்பட்டது. வழக்கமாக மின்வெட்டு ஏற்பட்டால் ஐந்து நிமிடங்களுக்குள் மீண்டும் வந்துவிடும்அல்லது ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படும். ஆனால், சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாகமின்சாரம் வழங்கப்படாததால் அலுவலகப் பணிகள்முழுமையாக பாதிக்கப்பட்டது. கணினிப் பணிகள் மட்டும் யுபிஎஸ் வசதி மூலம் மேற்கொள்ளப்பட்டன. மின் விளக்குகள் எரியாததால் பழைய கட்டிடம் இருளில்மூழ்கியது. மேலும், மின்தூக்கியும் இயங்கவில்லை.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்சார இணைப்பில் உள்ள ஜம்பர்பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாகமின்தடை ஏற்பட்டது எனவும், இதனை சரிசெய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு பழுது சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

உழவர் சந்தை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியரிடம் மனு

உடுமலை, அக்.30- உழவர் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உடுமலை நகரக்குழு சார்பில் வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது, உடுமலை உழவர் சந்தையின் முன்புறம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்விதிமுறைகளை மீறி நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் உழவர் சந்தையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, விதிமீறி அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், உழவர் சந்தைக்குள் குண்டும், குழியுமாக காணப்படும் பாதைகளை சீரமைத்து, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையில் சீரான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும்.தினசரி காய்கறிகளின் விலையை நிர்ணயம் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விவசாயிகளையும் உள்ளடக்கிய விலைக் குழுவை அமைக்க வேண்டும்.

உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதிசுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைஉடனடியாக செய்து தர வேண்டும். உழவர் சந்தையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு முழுமையான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தையும் வழங்க வேண்டும்.

அதேபோல், ’சுகாதார ஆர்வலர்’ என்றபெயரில் சிலர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தவறான புகார்களை அளிக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்தி, விவசாயிகள் அச்சமுமின்றி தங்களது விற்பனைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாராந்திர விரைவு ரயில் ரத்து

சேலம், அக். 30 –மங்களூரு - சாலிமார் விவேக் வாராந்திர விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புயல் மற்றும் பலத்த மழை காரணமாக விசாகப்பட்டினம் கோட்டத்தில் உள்ள ரயில்வே பாலத்தில் வெள்ளநீர் அபாய அளவை தாண்டிப் பாய்ந்து வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி, கடந்த அக். 29-ஆம் தேதி சாலிமாரில்இருந்து புறப்பட வேண்டிய சாலிமார் - மங்களூரு சென்ட்ரல் விவேக் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்: 22851) ரத்து செய்யப்பட்டது. மறுமார்க்கத்தில் இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சாலிமார் விவேக் வாராந்திர விரைவுரயிலும் (வண்டி எண்: 22852) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் வரும் அக். 31-ஆம் தேதி இரவு 11 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு நவ.1 ஆம் தேதி சாலிமார் நோக்கி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் இச்சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி: சாதிப்பெயரை கூறி இழிவாக பேசியதாக முன்னாள் எம்எல்ஏ மீது புகார்

தருமபுரி, அக்.30-முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சாதிப்பெயரைக்கூறி இழிவாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக்கூறி, அவர் மீதும், அவருடன் வந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டோர் தருமபுரிமாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளியன்று புகாரளித்தனர்.

அந்த புகாரில் அருண்குமார் என்பவர் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி வட்டம், வெள்ளாளப்பட்டி கிராமத்தை (பட்டியலின சமூகம்) சேர்ந்த நான், ராஜாபேட்டையில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த அக்.26 ஆம் தேதி காலை, பெட்ரோல் விற்பனை நிலையத்தில்வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தேன். அப்போது, பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் அவரது உதவியாளர் லோகேஷ் ஆகியோர் காரில் வந்து, பெட்ரோல் நிரப்புவதற்காக வந்த வாகனங்களை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி என்னைபார்த்து, பெட்ரோல் நிரப்புவதை நிறுத்துமாறு தகாத வார்த்தைகளால் திட்டினார். நான் எனது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தபோது, எனதுசாதிப்பெயரை குறிப்பிட்டு இழிவாகப்பேசி, வேலையை நிறுத்துமாறு மிரட்டினார்.

மேலும், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த மற்ற ஊழியர்களையும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அருவருக்கத்தக்க மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டினார். எனவே, தன்னை சாதிப் பெயரைக் கூறி இழிவுபடுத்திய முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் அவருடன் வந்த நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புருக்கோலி கொள்முதல் விலை உயர்வு!

உதகை, அக்.30-உதகை மார்க்கெட்டில் முதல் முறையாக புருக்கோலி கிலோ ரூ.460க்கு ஏலம் போனது. நட்சத்திர ஓட்டல்களில் அதிகளவு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம்ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. தேயிலைக்கு உரிய விலை இல்லாததால் மாற்று சாகுபடியாக சுமார் 20 ஆயிரம்ஏக்கரில் மலை காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் தட்பவெட்பநிலை இந்தபயிர்களின் சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை விவசாயிகளை ஊக்குவித்து, மலை காய்கறிஉற்பத்தியை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த மலை காய்கறிகளை சாகுபடிசெய்ய 3 முதல் 4 மாதங்கள் ஆகும் நிலையில், அவற்றின் விலை அடிக்கடி ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. இதனால் சில விவசாயிகள் பெரும்பாலும் விலை குறையாத சைனீஸ் வகை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். 70 நாட்களில் இந்த பச்சை பூகோஸை அறுவடை செய்ய முடியும் என்ற நிலையில், தற்போதுஉதகை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் புருக்கோலி உதகை காய்கறி மண்டிகளில் கிலோ ரூ.430 முதல் ரூ.460 வரை ஏலம் போகிறது. இதனால் புருக்கோலி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், புருக்கோலி உயர்தர ஓட்டல்கள் மற்றும் சைனீஸ் ஓட்டல்களில் சூப் தயாரிக்க எப்போதும் தேவைப்படுகிறது. இந்நிலையில், எல் - நினோ பாதிப்பு காரணமாக மகசூல் சற்று பாதிக்கப்பட்டு இருப்பதால், வழக்கமாக ரூ.250 வரை விற்கும் புருக்கோலி தற்போது நல்ல லாபகரமாக இருக்கிறது. இதேபோல் ரூ.80 வரை விற்கும் ஐஸ்பெர்க் தற்போது ரூ.220-க்கு ஏலம் போகிறது, என்றனர்.

தாயை கொன்ற மகன் கைது

தருமபுரி, அக்.30-பழைய இண்டூர் பகுதியில். பெற்ற தாயையே போதையில் மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியைசேர்ந்த சின்னபாப்பா (42) என்பவரின் மகன் தேவராஜ் (20). கூலி வேலை செய்து வரும் இவர், வெள்ளியன்று போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டில் இருந்த தனது தாய் சின்னபாப்பாவை, இரும்பு பட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்தஇண்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குசென்று சடலத்தை, மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தாயை கொலை செய்த தேவராஜை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட தேவராஜ், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இண்டூர் பேருந்து நிறுத்தத்தில், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் புதனன்று ஜாமினில் வெளியே வந்த நிலையில், தாய் அறிவுரைகூறியதால் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம், அக்.30-வரவிருக்கும் பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் கூடுதல் பயண தேவையை நிறைவு செய்யவும் சென்னை எழும்பூர் மற்றும் கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்டரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து நவம்பர் 5 மற்றும் 12 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06117), மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில், கொல்லத்திலிருந்து நவம்பர் 6 மற்றும் 13 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் – சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06118), மறுநாள் மதியம் 12.30 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும். இவ்விரு ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு,திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா,எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரா மற்றும் காயங்குளம் ஆகியநிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுக்கிணற்றை முழுமையாக சீரமைக்க கிராமசபைக் கூட்டத்தில் சிபிஎம் மனு அளிக்க முடிவு

உடுமலை, அக்.30- உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளபாளையம் ஊராட்சி, கொங்கலக்குறிச்சி கிராமத்தில் பராமரிப்பின்றி செடி, கொடிகள் சூழ்ந்துள்ள பொதுக்கிணற்றை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் மூலம் கிணற்றின் மேலிருந்த மரக்கிளைகள் மட்டும் அகற்றப்பட்டன. எனினும், கிணற்றைச் சுற்றியுள்ள செடி, கொடிகள் முழுமையாக அகற்றப்படாததால், ஒன்றிய நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து கிணற்றை முறையாக சீரமைக்கபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கிராமத்தில் சாக்கடை, தெருவிளக்குஉள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ஊராட்சிச் செயலாளர் ராஜேஸ்வரியிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நவ.1 ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் திரளாக பங்கேற்று, ஊராட்சிச்செயலாளரை பணியிடமாற்றம் செய்யக்கோரியும், கிராமத்தின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் மனு அளிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

டிஜிட்டல் மீட்டர்களை அரசே இலவசமாக வழங்க ஆட்டோ சங்க கூட்டுக்குழு ஆட்சியரிடம் மனு

கோவை அக்.30-புதிய ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் மற்றும் புதிய டிஜிட்டல் மீட்டர்களை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என அனைத்து சங்ககூட்டுக்குழுவினர் வெள்ளியன்று கோவைமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது, கோவையில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. ஆட்டோ தொழிலை நம்பி சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு புதிய மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் இயங்கும் 15,000 ஆட்டோக்களிலும் பழைய மீட்டர்களே உள்ள நிலையில், அவற்றைசரிசெய்ய மூன்று அல்லது நான்கு இடங்கள் மட்டுமேஉள்ளன. எனவே, புதிய மீட்டர்களை பொருத்த கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், கடந்த 2013-ல் அரசு உறுதியளித்தபடி, அனைத்து ஆட்டோக்களுக்கும்ஜிபிஎஸ் மற்றும் பிரிண்ட் அவுட் வசதியுடன் கூடிய புதிய டிஜிட்டல் மீட்டர்களை அரசே இலவசமாக வழங்க வேண்டும்.

அரசு அறிவித்துள்ள மீட்டர் கட்டணத்தை ஓலா, உபேர், ரேபிடோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் கண்டிப்பாக வசூலிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முத்தரப்புக் கமிட்டியை அமைத்து, எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர்கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். நல வாரியம் மூலம் தனி ஆட்டோ செயலியைஏற்படுத்தி அரசு கட்டணத்தை அமல்படுத்தவேண்டும். தீபாவளி போனசாக ரூ.5,000வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கூட்டுக்குழுவின் தலைவர் இரா.செல்வம், செயலாளர் ்பா.வணங்காமுடி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.முத்துக்குமார், ஏஐடியுசி ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் வேலுச்சாமி, அண்ணா தொழிற்சங்கத்தின் இஸ்மாயில்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுகாதாரமற்ற சூழலில் 27 கடைகள்;ரூ.79 ஆயிரம் அபராதம் விதிப்பு

உதகை, அக்.30-நீலகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறைஅதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், சுகாதாரமற்றசூழலில் இருந்த 27 கடைகளுக்கு ரூ.79 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் ஹோட்டல்களில்பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட உணவகங்கள், ஹோட்டல்கள், மெஸ் போன்றவற்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ச்சியாக ஆய்வுகள்

மேற்கொண்டு வந்தனர். இந்த ஆய்வில் சுகாதாரமற்ற சூழலில் இருந்த 27 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 11கடைகளுக்கு குறைபாடுகளை சரி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைகளை நோட்டீஸ் வழங்கி 14 நாட்களுக்குள் நிவர்த்தி செய்யாத பட்சத்தில், துறை ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கடைகள் மூடப்படும் என எச்சரித்தனர்.