சென்னை விரைவு செய்திகள்
9 Jul 2026, 11:21 pm

பெண் குழந்தைகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்

புதுச்சேரி, ஜூலை 9 – புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெண் குழந்தைகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. “கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில், புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 12 மற்றும் 19 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறும். 14 வயதுக்கு மேற்பட்ட, 15 வயது நிறைவடையாத பெண் குழந்தைகள் அனைவரும் இந்தத் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பயனடையலாம். எனவே, பெற்றோர்கள் தங்கள் தகுதியுடைய பெண் குழந்தைகளைத் தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து வந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள சுகாதார மையங்களை அணுகலாம் அல்லது செயலியைப் பயன்படுத்தலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

விழுப்புரம், ஜூலை 9 – விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி அருகே கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் ரயில்வே காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவானந்தகுமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில்வே காலனி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் பொட்டலங்களுடன் நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஊரல் கரைமேடு தெருவைச் சேர்ந்த தாமஸ் என்பவரின் மகன் கிஷோர் குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ 400 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக் குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டம் கடலூர் சிறையில் அடைப்பு

கள்ளக்குறிச்சி, ஜூலை 9 – கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொலை வழக்கு ஒன்றில் கைதான நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் ராஜப்பா (வயது 40). இவர் மீது சங்கராபுரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே, குற்றவாளி ராஜப்பாவின் தொடர் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.ஷஹ்னாஸ் பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் பத்மஜா, ராஜப்பாவைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், ராஜப்பா காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு கடலூர் மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

புதிய காப்பீடு திட்டத்தை வலியுறுத்தி விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஜூலை 9- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் செல்வராணி, மாவட்டச் செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் இளங்கோபிரபு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சிலம்புச்செல்வன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயந்தி, தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் காந்திமதி உள்பட பலர் பேசினர்.

நெய்வேலி அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை

கடலூர், ஜூலை 9- நெய்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடை பெற்று வருவதாக ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். "கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம்-12-இல் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பொறியியல் தொழிற்பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வி யடைந்தவர்கள், கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் பாதியிலேயே நிறுத்தியவர்கள் என ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 98420 54292 அல்லது 93600 02845 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பட்டா வழங்க லஞ்சம்: பொதுமக்கள் வாக்குவாதம்

விழுப்புரம், ஜூலை 9 – விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ஓரத்தூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரி பவர் சீனுவாசன் (45). இவர் கடந்த இரண்டு ஆண்டு களாகப் பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, பணி களை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த பாதிக்கப்பட்ட கிராம மக்கள், புதன்கிழமை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு திரண்டு சீனு வாசனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த விக்கிர வாண்டி வட்டாட்சியர் மகா தேவன், கிராம நிர்வாக அலுவலர் மீது விழுப்புரம் கோட்டாட்சி யருக்குப் புகார் அளித்தார். அதன்பேரில் கோட்டாட்சி யர் விசாரணை நடத்தி வருகிறார்.

வேலூரில் விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்

வேலூர், ஜூலை 9 – வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தலைமையில், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டி.சரத்குமார் முன்னிலையில், 8மாவட்டங்களுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை (2026-27) குறித்த விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ர.வினோத் தெரிவித்தார். மேலும், உரக் கடத்தல் மீதான நடவடிக்கை, நெல் கொள்முதல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறுவதற்கான சட்டப் போராட்டங்கள் குறித்து அவர் உறுதியளித்தார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைத்தல், பாலாற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டுதல், தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டையில் வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் அமைத்தல், வறட்சியால் அழிந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கல், மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயம் செய்தல் மற்றும் தோல் கழிவுகளால் பாதிக்கப்படும் பாலாற்றை மீட்டல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தங்கம் விலைகுறைந்தது

சென்னை, ஜூலை 9- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 13,220-க்கும், ஒரு சவரன் ரூ. 240 குறைந்து ரூ. 1,05,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனையானது.