கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
10 Oct 2026, 2:29 am

நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

ஈரோடு, அக்.9-நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நகரப் பேருந்துகள் பெருந்துறையில் இருந்துஇயக்கப்பட்டு வருகின்றன. இதில் சில நகரப்பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வழித்தடம் எண்:7 இல் ஈரோடு முதல் குன்னத்தூர் வரை பேருந்து இயக்கப்பட்டது. 2324 பதிவெண் கொண்ட பேருந்து நாள்தோறும் 6 முறை குன்னத்தூர் வரை இயக்கப்பட்டு வந்தது. அப்பேருந்து இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவேஉடனடியாக அப்பேருந்தினை இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தாலுகா செயலாளர் ஆர்.அர்ஜுனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள்வி.ஏ.விஸ்வநாதன், த.நவீன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதேபோல, பி3 என்ற வழித்தடத்தில் இரண்டு பேருந்துகளும், பி7/7பி தடம் எண் கொண்ட பேருந்துகளும்நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றையும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு: எம்எல்ஏ உறுதியை ஏற்று போராட்டம் ஒத்திவைப்பு

ஈரோடு, அக்.9-பவானிசாகர் பேரூராட்சியில் கடைகள் ஏலம், ஒதுக்கீடு குறித்து எழுந்த புகாரையடுத்து வணிகர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்த நிலையில், சட்டடப்பேரவை உறுப்பினர் உறுதியை ஏற்றுதற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பேரூராட்சியில் கடந்த பிப்.12 ஆம் தேதி காலிக்கடைகள் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏலம் 24 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது என மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 67 கடைகள்என அறிவிக்கப்பட்ட நிலையில், 123 கடைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சாலையோர காலி இடங்களில் கடைகள் வைத்து நடத்த இருப்புத் தொகை ரூ.15 ஆயிரம், வாடகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் வங்கி வரைவோலையாக பெறப்பட்டது. மேலும், கூடுதலான தொகையினை பேரூராட்சி தலைவர் பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது. இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு மே மாத இறுதியில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. செலுத்திய தொகைக்கான ரசீதும் வழங்கப்பட்டது. பொது ஏலம் என கூறப்பட்டாலும், தலைவர் சொல்பவருக்கே கடைகள் ஒதுக்கப்படும் நிலையும் இருந்தது.

இதில் ரமேஷ் என்பவர் கடை கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு கடை ஒதுக்கப்படவில்லை. வங்கி வரைவோலைக்கான ரசீதும்அளிக்கப்படவில்லை. இதுகுறித்து நிர்வாகத்தை அணுகியபோது, ‘ஆனந்த் என்பவருக்கு கடை ஒதுக்கப்பட்டுவிட்டது. வேண்டுமானால் அவரிடம் பணம் வாங்கித் தருகிறோம்’ என கூறியுள்ளனர். ‘தனது வாழ்வாதாரத்திற்காக கடை கேட்டு விண்ணப்பித்தால், எனது பணத்தை எடுத்துக் கொண்டு வேறு ஒருவருக்கு கடை ஒதுக்குவீர்களா? இந்த முறைகேடு குறித்து தலைவர் மற்றும் செயல்அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ரமேஷ் வலியுறுத்தினார். மேலும்,ராபியா என்பவருக்கு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்புறம் கடை ஒதுக்கப்பட்டது. பள்ளிநிர்வாகம் ஆட்சேபணை செய்ததால், கடை அமைக்க முடியவில்லை. ஆகவே காலியாக இருக்கும் வேறு கடையை கேட்டால், ராபியாவிற்கு ஏதுவாக இல்லாத இடத்தை காட்டுகின்றனர். இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென ராபியா முறையிட்டுள்ளார்.

இவ்வாறான முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழனன்று பவானிசாகர் வட்டார ஒருங்கிணைந்த வணிகர் நலச்சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம் அறிவித்தனர். ஆனால், சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல பேரூராட்சியின் செயல் அலுவலர்உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டக்குழுவினரிடம் 20 நாட்கள் அவகாசத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஎம்எல்ஏ தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

புறக்கணிக்கப்படும் குடிமங்கலம் ஒன்றியம்! கோரிக்கைகளை நிறைவேற்ற சிபிஎம் வலியுறுத்தல்

உடுமலை, அக்.9-உடுமலை தாலுகாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குடிமங்கலம் ஒன்றியம்,அரசு நிர்வாகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. 23 கிராம ஊராட்சிகளையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களையும் கொண்டஇந்த பகுதியில், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் முடங்கிக் கிடப்பதாகசுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை தாலுகாக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீண்டகால பிரச்சினையாக நீடித்து வருகிறது. மக்களின் முதன்மைத்

தேவையான குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க அரசு உடனடியாக நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்தமாக வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் உடனடியாக மனைப்பட்டா வழங்கப்பட வேண்டும்.

போதிய பேருந்து வசதிகள் இல்லாததால்பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். தேவைக்கேற்ப புதிய பேருந்துகளை இயக்குவதுடன், பழைய வழித்தட சேவைகளையும் அதிகரிக்க வேண்டும். விவசாயத்தையே பிரதான வாழ்வாதாரமாக கொண்ட இப்பகுதியில், சீரற்ற மின் விநியோகத்தால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே, விவசாயத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலில், கிராமப்புறமக்களுக்கு முறையான சேவை கிடைக்கவில்லை. அதிகாரிகள் நேரடியாக கிராமங்களுக்கு சென்றுமக்களின் மனுக்களை ஆய்வு செய்து உரியநடவடிக்கைஎடுப்பதில்லை.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் குடிமங்கலம் ஒன்றியத்தின் நீண்டகால கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு,தேவையான வளர்ச்சி நிதியை உடனடியாக ஒதுக்கி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவை அரசுப்பள்ளி அசத்தல்கலைத்திருவிழா போட்டியில் முதலிடம்!

கோவை, அக்.9-கோவை, வடவள்ளி அருகேயுள்ள கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான கலைத்திருவிழா நாடகப்போட்டியில் தொடர்ச்சியாக 5-வது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் வட்டார, மாவட்ட மற்றும் மாநிலஅளவில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் விழுப்புரத்தில் உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரியில்நடைபெற்றன. இதில் 5 முதன்மைப் பிரிவுகளின் கீழ் 36-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நாடகப் பிரிவில் பாவனை நடிப்பு, குழு நடிப்பு, பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில், ‘குழு நடிப்பு’ பிரிவில்கோவை வடவள்ளியை அடுத்த கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பள்ளிகள் பங்கேற்ற இந்த சவாலான போட்டியில், கல்வீரம்பாளையம் பள்ளி மாணவ, மாணவிகளான எஸ்.சுபஸ்ரீ, எஸ்.ப்ரீத்தி, ஆர்.அசோக், ஏ.ஸ்ரீதர் மற்றும் எஸ்.பிரதீப் ஆகிய 5 பேர் அடங்கிய குழுவினர் முதல் பரிசை தட்டிச்சென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறுமியை கடத்திச்சென்ற இளைஞர் கைது

ஈரோடு, அக்.9-கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமியை கடத்திச்சென்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கடந்தசில தினங்களுக்கு முன்பு 15 வயது சிறுமி காணாமல் போனதாக, பங்களாபுதூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில், சிறுமியின் கைப்பேசி சிக்னலை கொண்டு இருப்பிடத்தை ஆய்வு செய்ததில், அவர் வேலூர்

மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று, அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேலூர் மாவட்டம், மேல்மணவூர், மோட்டூர் பகுதியை சேர்ந்த டெனில் (23) என்பவரது வீட்டில் இருந்தசிறுமியை மீட்டனர். மேலும், சிறுமியை கடத்தி வைத்திருந்த டெனிலையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அச்சிறுமியிடம் டெனில் தவறான முறையில் நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்சோசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், டெனிலைகைது செய்தனர்.

தாய் - சேய் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

உதகை, அக்.9-சோலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தாய் – சேய் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே சோலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகியவை சார்பில்,கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மனநலம் மற்றும் ஊட்டச்சத்துவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சோலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஹரிபிரகாஷ் தலைமைவகித்து பேசுகையில், கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் உடல் நலத்துடன் மனநலத்தையும் பாதுகாப்பது அவசியம், தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், முறையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அரசு சுகாதார நிலையத்தில் வழங்கும் சிகிச்சைமுறைகள் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.

இந்நிகழ்வில், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ரன்’ அமைப்பின்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் மற்றும் சோலூர், கோக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளை சேர்ந்தகர்ப்பிணிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் சங்கப் போராட்டத்திற்கு வெற்றி! உழவர் சந்தை முன்பு எச்சரிக்கை பலகை

உடுமலை, அக்.9–உடுமலை உழவர் சந்தைப் பகுதியில் வெளிநபர்கள் ஆக்கிரமித்துக் கடைகள் அமைப்பதை தடுக்கக் கோரி,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடந்த மாதம் போராட்டம் நடத்தியது. இதனையடுத்து தற்போது அப்பகுதியில் எச்சரிக்கை பலகை நிறுவப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை நகராட்சி உழவர் சந்தைப் பகுதியில் வெளிநபர்கள் மற்றும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உடுமலை நகரக் குழு சார்பில் கடந்த மாதம் சாலை மறியல் நடைபெற்றது. இதன் பலனாகதற்போது வேளாண்மை விற்பனைத் துறை சார்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைக்கு வெளியேசாலையின் இருபுறமும் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையோரக் கடைகள் அமைக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இல்லாதசூழலால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இனி தடையின்றி விற்கலாம். பொதுமக்களும் சிரமமின்றி வந்து செல்லமுடியும். இப்போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், இந்த தடையை அதிகாரிகள் முறையாக அமல்படுத்த வேண்டும் எனவிவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

உதகை, அக்.9-கோத்தகிரியில் நேரு பூங்கா அருகே அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் வசித்து வரும் கோத்தர் பழங்குடியின மக்கள், நேரு பூங்கா பகுதியில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, நகராட்சி நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, அந்த கடைகளை உடனே அகற்ற வேண்டும் என, அறிவித்து, மூன்று கடைகளில் நகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகராட்சிப் பணியாளர்களை வைத்து கடைகளை அப்புறப்படுத்துவதுடன், அதற்கான ஏற்படும் அனைத்து செலவுகளும் தங்களிடம் இருந்து வசூல் செய்யப்படும், என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்ற பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.