முன்னாள் அமைச்சர் வேலுமணி காலத்தில் முறைகேடு கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செல்லாது!
2 Jul 2026, 9:31 pm

முன்னாள் அமைச்சர் வேலுமணி காலத்தில் முறைகேடு கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செல்லாது!

உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை, ஜூலை 2 - அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற இளநிலை உதவியாளர் பணி நியமனங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, 54 பேரின் பணி நியமனங்களைச் செல்லாது என அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலு மணி உள்ளாட்சித் துறை அமைச்ச ராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 654 விண்ணப்பங்கள் பெறப் பட்டன. 2021 பிப்ரவரி 8 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் 440 பேர் கலந்து கொண்டனர்.

அதிர்ச்சியூட்டும் விதமாக, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த அதே நாளி லேயே தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 54 நபர்களுக்குப் பணி நியமன ஆணை களும் வழங்கப்பட்டன. அடுத்த நாளே அவர்கள் பணியிலும் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவா ளர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இதை எதிர்த்து மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் ஈஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கை முதன்முதலில் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

விசாரணையில், மாநகராட்சி நிர்வாகம் ‘மக்கள் குரல்’ நாளிதழில் விளம்பரம் கொடுத்ததாகக் கூறியது பொய் என்பது அம்பலமானது. பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட அசல் நாளிதழில் அப்படியொரு விளம்பரமே இல்லை என்பதும், நீதிமன்றத்தைத் திசைதிருப்ப இ-பேப்பரில் மட்டும் முறைகேடாக அது சேர்க்கப்பட்டிருந்ததும் மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டது. மாநகராட்சி விதிகளின்படி, மூன்றில் ஒரு பங்கு இடங்கள் நான்காம் நிலை ஊழியர்களுக்கான பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதால், துப்புரவுப் பணியாளரான ஈஸ்வரிக்கு இந்த நியமனத்தை எதிர்க்க முழு தகுதி உள்ளது என நீதிபதிகள் உறுதிபட தெரிவித்தனர்.

மேலும், 440 பேரின் சான்றிதழ்களைச் சரிபார்த்து, அன்றே மதிப்பெண் வழங்கி, ஒரே நாளில் ஒட்டுமொத்த தேர்வு முறையையும் ‘கணினி வேகத்தில்’ முடித்திருப்பது, இந்த நியமனங்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டவிரோதச் செயல் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என நீதிமன்றம் சாடியது. சட்டப்படியான ‘நியமனக் குழு’வும் இதில் பயன்படுத்தப்படவில்லை.

மாநகராட்சியின் இந்தச் செயல் தகுதியான பொதுமக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் நெறியற்ற செயல் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களையும் ரத்து செய்து, ஒட்டுமொத்த தேர்வு செயல்முறை யையும் ‘செல்லாது’ என அறிவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், உரிய விதிகளைப் பின்பற்றி, வெளிப்படையான முறையில் புதிய தேர்வு செயல்முறைகளைத் தொடங்கவும் கோவை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.