மீட்டர் கட்டணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்: ஆட்டோ சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
9 hours before

மீட்டர் கட்டணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்: ஆட்டோ சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோவை, அக்.28-அரசு அறிவித்த ஆட்டோ மீட்டர் கட்டணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.முத்துக்குமார், பொருளாளர் மைக்கேல்சாமி, எல்பிஎப் ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் வணங்காமுடி, ஏஐடியுசி ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், தமிழக அரசு புதிய ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அறிவித்துள்ளது. அதன்படி, முதல் 1.8 கி.மீ.க்கு ரூ.50, அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25 என கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம். கடந்த 14 ஆண்டுகளாக விலைவாசி, வீட்டு வாடகை, கல்விச் செலவுகள் உள்ளிட்டவை அதிகரித்தும் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை. கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, முதல் 1.5 கி.மீ.க்கு ரூ.70, அடுத்தடுத்த கி.மீ.க்கு ரூ.30 நிர்ணயிக்க வேண்டும். மேலும், அனைத்து ஆட்டோக்களுக்கும் இலவச டிஜிட்டல் மீட்டர் வழங்கவும், கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும். ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்களும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் பின்பற்ற வேண்டும்; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.