கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவி சடலமாக மீட்பு!
11 Jul 2026, 12:01 pm

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவி விடுதி கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்த மாணவி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை அவர் தங்கியிருந்த மாணவியர் விடுதியின் கழிவறையில் சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சக மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தகவலறிந்து பல்கலைக்கழகத்திற்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக குற்றம்சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் விடுதியை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர், முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.