“கரப்பான் பூச்சிகளை” களப் போராட்டத்தில் வழி நடத்துவோம்! - கே.ஜி.பாஸ்கரன்
26 May 2026, 9:26 pm

“கரப்பான் பூச்சிகளை” களப் போராட்டத்தில் வழி நடத்துவோம்! - கே.ஜி.பாஸ்கரன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பேச்சைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்க ளில் ‘காக்ரோச்’ (Cockroach) பக்கப் பதிவுகளும், அதனைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் முதன்மைப் பேசுபொருளாக மாறியுள்ளன. “வேலை இல்லாதவர்கள், வேலை பார்க்க விருப்பம் இல்லாத வர்கள் கரப்பான்பூச்சியைப் போல, ஒட்டுண்ணி களைப் போல விமர்சனம் செய்கிறார்கள்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் (RTI) பயன்படுத்திச் சமூக ஆர்வலர்களாக அவதாரம் எடுக்கிறார்கள்” என்ற தலைமை நீதிபதியின் கூற்றுக்கு எதிர்வினையாக இளைஞர்கள் களம் கண்டுள்ளனர்.

கடந்த எட்டு நாட்களில் இப் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டிவிட்டது. கரப்பான்பூச்சி வேடமிட்டுச் சிலர் தில்லி யமுனை ஆற்றங்கரைச் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் காணொலிகளும் வெளியாகியுள்ளன. பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு, கட்சித் தாவும் எம்பி-எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை, ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எம்.பி., பதவி வழங்கக் கூடாது, வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் அதிகாரி கள் மீது சட்ட நடவடிக்கை போன்ற கொள்கை அறிவிப்பு கள் மூலம் இவ்வியக்கம் தீவிர விவாதத்தைத் தூண்டி யுள்ளது.

அதிகாரத்திற்கு எதிரான இந்த ஆவேசமும் கோபமும், சமூக வலைத்தளங்களால் ஓர் ஆட்சிக்கு எதிரான மனநிலையை முழுமையாகத் தூண்டிவிட முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கான விடையைக் கண்டறிய கடந்த காலச் சர்வதேச மற்றும் உள்நாட்டு வெகுஜன நிகழ்வுகளைத் திரும்பிப் பார்ப்பது அவசியமாகிறது.

‘அரபு வசந்தம்’

சமூக வலைத்தளங்கள் மக்கள் கிளர்ச்சிகளில் முதன்முதலில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது ‘அரபு வசந்தம்’ இயக்கத்தில்தான். வட ஆப்பிரிக்க நாடான துனீசியாவில், 2010 டிசம்பரில் தெருவோரக் கடை நடத்திவந்த 26 வயது இளைஞன் முகம்மது பவுச்சி, போலீஸ் அடக்குமுறை தாளாமல் நடுவீதியில் தீக்குளித்து மாண்டார். அவரது தாயாரின் நீதி கோரும் ஆவேச வேண்டுகோளை ஏற்று மக்கள் அணிதிரண்ட னர். 1987 முதல் நீடித்த ஜனாதிபதி பென் அலியின் சர்வாதிகார ஆட்சியில் அதிருப்தியுற்ற மக்களின் இக்கிளர்ச்சியால், ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பி யோடினார். துனீசியாவில் துவங்கிய இந்த அலை எகிப்து, லிபியா, ஏமன், சிரியா, பஹ்ரைன் எனப் பரவியது.

எகிப்தில் முப்பது ஆண்டுகள் நீடித்த முபாரக்கின் கொடுங்கோன்மை வீழ்ந்தது. தலைநகர் கெய்ரோ வின் தஹ்ரீர் சதுக்கத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடிப் போராடியது அனைத்தும் சமூக வலைத் தளத் தகவல் பரிமாற்றங்களால்தான் சாத்தியமானது.

இளைஞர்கள், தொழிலாளர்கள் முன்னெடுத்த எகிப்திய எழுச்சியை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சுட்டிக்காட்டியது. பஹ்ரைனின் கலீபா குடும்ப ஆட்சிக்கும், ஏமனின் அலி அப்துல்லா சர்வாதிகா ரத்திற்கு எதிராகவும் நடந்த இப்போராட்டங்களுக்கு நவதாராளமயக் கொள்கைகள், ஊழல், வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களே ஊற்றுக் கண்ணாக அமைந்தன. 2009 உலகப் பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக உருவான ‘வால் ஸ்ட்ரீட்’ போராட்டம் அமெரிக்காவின் 70 நகரங்களுக் கும், உலகின் 82 நாடுகளுக்கும் பரவியது குறிப்பி டத்தக்கது.

ஜல்லிக்கட்டு முதல் அரகலயா வரை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, 2017-இல் மெரினாவில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், ஐடி ஊழியர் கள், பெண்கள் திரண்டனர். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின் தமிழகம் கண்ட இந்த மாபெரும் வெகுஜன எழுச்சியில், ‘பீட்டா கோ பேக்’ முழக்கத்தைத் தாண்டி காவிரிப் பிரச்சனை, நீட் தேர்வு மற்றும் மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிரான முழக்கங்கள் முன்னுக்கு வந்தன. இறுதியில் தமிழக அரசின் அவசரச் சட்டம் மூலம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

அண்மைக்காலத்தில் இலங்கை, நேபாளம், வங்கதேசக் கிளர்ச்சிகளிலும் சமூக வலைத்தளங்கள் பிரதானப் பங்காற்றி ஆட்சி மாற்றங்களை உண் டாக்கின. இலங்கையில் 2022-இல் வெடித்த பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, மருந்து பற்றாக்குறை மற்றும் ராஜபக்சே குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்களை வீதியில் இறக்கியது. கொழும்பு நகரில் கூடாரங்கள் அமைத்துத் தங்கிய மக்கள், இலவச உணவகங்கள், நூலகங்கள், தெரு நாடகங்கள் எனப் போராட்டத்தைப் புதிய வடி வத்திற்கு நகர்த்தினர். இது தமிழர்-சிங்களர் பேதத்தைப் பின்னுக்குத் தள்ளியது. ‘கோ பேக் கோத்தா’ என்ற முழக்கத்துடன், அவசர நிலை மற்றும் சமூக வலைத்தளத் தடைகளை உடைத்து ஜனாதிபதி மாளிகையை மக்கள் வெள்ளம் சூழ்ந்ததால் கோத்த பய ராஜபக்சே இரவோடு இரவாக நாட்டை விட்டு ஓடினார். இதன் தார்மீக விளைவாக, 2024 தேர்தலில் ஜேவிபி (JVP) தலைவர் அனுர குமார திசா நாயக்க ஜனாதிபதியாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தேசிய மக்கள் சக்தி இயக்கம் 159 இடங்க ளைக் கைப்பற்றியும் மகத்தான வெற்றி பெற்றது.

வர்க்கப் போராட்டங்களும் சமூக வலைத்தளங்களும்

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளோய்டு என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட காணொலி வைரலானதைத் தொடர்ந்து, உலகளவில் ‘கருப்பின உயிர்களும் முக்கியம்’ (Black Lives Matter) என்ற இயக்கம் பரவியது. இந்தியா வில் 2018-இல் கடன் தள்ளுபடி, நில உரிமை கோரி நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி 180 கி.மீ நடந்த செருப்பணியாத விவசாயிகளின் கால்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, ஒட்டுமொத்த மும்பை மக்களையும் அவர்களின் வரவேற்புக்காக அலைபேசி ஒளியை அசைத்துத் தெருவில் நிற்க வைத்தது. 2021-இல் ஓராண்டைக் கடந்து நிகழ்ந்த, கார்ப்பரேட் நவதாராளமய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி முற்றுகைப் போராட்டமும் சமூக வலைத்தளங்களின் மூலமே உலகெங்கும் பரவி, ஒன்றிய அரசைச் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தது.

நைஜீரியாவின் போலீஸ் அடக்குமுறை எதிர்ப்பு, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான ‘மீ டூ’ (Me Too) இயக்கம், மற்றும் அண்மைக்காலமாக ஹரியானா, நொய்டாவில் குமுறிக் கொண்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் குறைந்த சம்பளம், பணியிடப் பாதுகாப்பின்மைக்கு எதிராகத் தன்னெழுச்சியாக நடத்திய உற்பத்தித் துறைப் போராட்டங்கள் என அனைத்திலும் சமூக வலைத் தளங்கள் விவாதங்களையும் இயக்கங்களையும் ஒன்றிணைப்பதில், தகவல்களை நொடிப் பொழுதில் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன

மாற்றை முன்வைத்து முன்னேறும்

காசா மீதான தாக்குதலை எதிர்த்தும், நவதாராள மயச் சுமையை மக்கள் மீது திணிக்கும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உழைப்பாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்ற னர். ஏகாதிபத்தியத்தின் யுத்த வெறியால் 53 வளரும் நாடுகள் மீள முடியாத கடன் சுமையில் சிக்கி யுள்ளன. இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

ஆட்சியாளர்கள் பெருமுதலாளிகளுக்குச் சேவை செய்யும் இந்தச் சூழல் மக்களைப் போராடத் தூண்டு கிறது. ஆனால், முறையான அரசியல் கோட்பாடற்ற, உணர்ச்சி வேகத்தில் சமூக வலைத்தளங்களில் உருவாகும் கிளர்ச்சிகள், அமைப்பு ரீதியாக மேலெழுந்து வரும் உண்மையான வர்க்கப் போராட்டங்களை மடைமாற்றம் செய்துவிடும் ஆபத்தும் உண்டு. எனவே, தன்னெழுச்சியாக மூண் டெழும் இத்தகைய டிஜிட்டல் போராட்டங்களையும் அரவணைத்து, “முதலாளித்துவ சமூக அமைப்புக்கு ஒரே மாற்று சோசலிசமே” என்ற தெளிவான கண்ணோட்டத்தோடு வர்க்க அமைப்புகள் வழிநடத்தி முன்னேற வேண்டிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த காலமிது.