திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறதா கோ-ஆப்டெக்ஸ்?
6 Jul 2026, 10:48 pm

திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறதா கோ-ஆப்டெக்ஸ்?

சென்னை, ஜூலை 6 - தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான ‘கோ–ஆப்டெக்ஸ்’ நிறுவனம், அதிகாரிகளின் தவறான அணுகுமுறைகளால் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 145 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில், அண்மைக்காலமாகச் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வாடிக்கை யாளர்களுக்குத் துணிப்பைகள், அட்டைப் பெட்டிகள் வழங்குவது நிறுத்தப்பட்டு, சுட்லிக் கயிற்றால் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே வீண் சச்சரவுகள் ஏற்படுகின்றன.

நிதி மோசடியும் பாரபட்ச ஊதியமும்

கடந்த மார்ச் மாதம், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 49.60 லட்சம் ரூபாய், மூன்றாம் நபர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டது. சைபர் கிரைம் புகாருக்குப் பின் 19 லட்சம் ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30.60 லட்சம் ரூபாய் குறித்து மூன்று மாதங்களாகியும் எவ்விதத் தகவலும் இல்லை; காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகளில் கடும் பணியாளர் பற்றாக்குறை நிலவியும், புதிய தற்காலிக ஊழியர்களை நியமிக்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை. இதனால் நடப்பு ஊழியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், தலைமை மற்றும் மண்டல அலுவலகங்களில் எவ்வித அரசாணையும் இன்றி தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் 47 ஆயிரம் முதல் 1.20 லட்சம் ரூபாய் வரை வாரி வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, மீண்டும் தற்காலிக ஊழியர்களாகச் சேர்ந்து பல ஆண்டுகளாக எவ்விதப் பணியும் செய்யாமல் சம்பளம் பெறுகின்றனர்.

மொபைல் போன் ஆடம்பரம்

பயன்பாட்டில் உள்ள மொபைல் போன்கள் நல்ல நிலையில் இருந்தபோதிலும், 18 லட்சம் ரூபாய் செலவில் புதிய போன்களை வாங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதில் முதன்மை பொது மேலாளருக்கு 1 லட்சம், ஆலோசகருக்கு 70 ஆயிரம், மண்டல மேலாளர்களுக்குத் தலா 44 ஆயிரம் ரூபாய் என நிதி விரயம் செய்யப்படுகிறது. இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளைப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு உடனடியாகத் தலையிட்டுச் சரிசெய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.