காவிரி உரிமையை அரசு ஒரு போதும் விட்டுத் தராது!
7 Aug 2026, 9:36 pm

காவிரி உரிமையை அரசு ஒரு போதும் விட்டுத் தராது!

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் உறுதி!மேகதாது அணையை கட்டுவதிலும், காவிரி உரிமைப் பிரச்சனைகளிலும் இந்தஅரசு தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தராது என்று முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார்.வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்குஇரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக்கொள்ள ப்பட்டது.

தரம் தாழ்ந்த அரசியல் செய்ய விரும்பவில்லை!

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பதிலளித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், “காவிரி பிரச்சனைஉணர்வு ரீதியான ஒன்று. இதை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் துளி கூட இந்தஅரசுக்கு இல்லை. மேகதாது விவகாரம் தொடர்பாக நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்துதான் தீர்மானம்நிறைவேற்றினோம். அதனை நேர்முக கடிதமாக பிரதமருக்கு அனுப்பியுள்ளோம். மாநிலங்களவையில் ஒன்றியஜல்சக்தி இணை அமைச்சர் முழு விவரங்களை குறிப்பிடவில்லை என்று தெரிந்ததும், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்டு மேகதாதுஅணைக்குஎந்தவித நிர்வாக அனுமதியும் வழங்கக் கூடாது என பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் சில அணைகளை கட்டியது தொடர்பாக இதே அவையில் 1969-ஆம் ஆண்டு ஒரு விவாதம் நடைபெற்றது. அப்போது நீர்வளத்துறைஅமைச்சராக இருந்தது யார்? அணை கட்ட விட்டது ஏன்? என்று கூறி தரம் தாழ்ந்த அரசியல் செய்யவிரும்பவில்லை. மேகதாது விவகாரத்தில் எந்த கட்சிக்கு பெருமை என்று பார்க்கக்கூடாது” என்றார்.

மக்களுக்காக ஏற்கத் தயார்

“அண்டை மாநிலத்துடன் பேசிப் பார்த்தால் என்ன? என்ற எண்ணத்தில் தான் கர்நாடகம் செல்ல திட்டமிட்டேன். நேர்மறையான அறிகுறிகள் ஏதேனும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான். பகை நாடுகளே பேசி தீர்க்கப் பார்க்கிறார்கள், பக்கத்து மாநிலத்தில் பேசி பார்த்தால் என்ன? என்றுதான் நினைத்தேன். ஒருவேளை அந்த சந்திப்பில் அவமானம் நேர்ந்தால் என்ன நிகழும்? என சிலர் கேட்டார்கள். அப்படி நடந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக உள்ளேன்.குறுவை சாகுபடிக்கு நிவாரணம் ஏற் கெனவே வழங்கப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் தினமும் நியூஸ் பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்கும்” என்றுகூறி தனது உரையை முடித்தார்.

விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரண நிதி:

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குறுக்கிட்டு, “குறுவை சாகுபடி நிவாரண நிதிக்கும் வறட்சி நிதிக்கும்வித்தியாசம் உள்ளது. தினமும் பேப்பர் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டி, அவர்களின் கோரிக்கை என்ன என்பதை கேட்டுக்கொள்ள வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட என்னபயம்? என்ன தயக்கம்?” என்று மீண்டும் கேள்வி எழுப்பியதோடு, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அதற்கான நிவாரண நிதியை விரைவில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு அவை முன்னவர்செங்கோட்டையன், “வறட்சிநிதி குறித்து பொதுவாக செப்டம்பரில் தான் ஆலோசிக்கப்படும்” என்றார்.

கூட்டம் தேவை இல்லை : நிர்மல் குமார்

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் தவெக அரசு பதிலளிக்கவில்லை. சட்டமன்றத்திற்கு வெளியே அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி அளித்தார். அப்போது காவிரி விவகாரத்தில், திமுக, அதிமுக-வை திருப்திப்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முடியாது என்று தெரிவித்தார். தேனி வனப்பகுதி மக்கள் வெளியேற்ற விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுக : சிபிஎம்

கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்றக் குழு தலைவர் ஆர். செல்லசுவாமி பேசினார். அப்போது, “மேகதாது அணை சம்பந்தமாக ஏற்கெனவே உச்சநீதிமன்றமும் நடுவர் மன்றமும் ஒரு முடிவை செய்துள்ளது. அதன் பிறகும் மேகதாது அணையை கட்டியே தீரு வோம் என்று கர்நாடகம் சொல்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

இந்த பிரச்சனைக்கு நாம் சட்டரீதியாக தீர்வு காண வேண்டும். அதைத் தவிர்த்து கர்நாடக முதலமைச்சரை சந்திப்பது தேவையற்றது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்களும் பாதிக்கப்படும். நமது முதலமைச்சருக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏற்படும் அவமானமாகவே கருதப்பட வேண்டும்.

எனவே, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, அனைவரின் கருத்துக்களையும் அறிந்து, ஒரு பொதுவான நிலைப்பாட்டை ஏற்படுத்தி சுமூக தீர்வு காண வேண்டும். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் வாடும் விவசாயிகளுக்கு குறித்த காலத்திற்குள் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.