717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவு; சிபிஎம் வரவேற்பு!
12 May 2026, 11:37 pm

717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவு; சிபிஎம் வரவேற்பு!

சென்னை, மே 12- வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் செயல்படும் 717 மதுபான சில்லரை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் தற்போது 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நடத்தப்படுகின்றன.

அவற்றில் வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 கடைகள் ஆய்வின் போது கண்டறியப்பட்டன.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த 717 கடைகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடு மாறு முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார்.

தனியார் மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தல்!

வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையம், பேருந்து நிலையங்களின் அருகிலுள்ள 717 டாஸ்மாக் மதுபான கடைகள் 2 வார காலத்திற்குள் மூடப்படும் என்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்-யின் அறிவிப்பை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

“அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகளுக்கு இணையாக எப்.எல்.2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் மதுக்கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த வகையிலான மதுக்கடைகளில் மட்டும் சுமார் 100 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் பகுதியில் இயங்கி வருகின்றன. இந்த தனியார் மதுக் கடைகள் அரசு அறிவித்துள்ள மூடப்படும் கடைகள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்படும் தனியார் மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இதர டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கும் அரசு முன்வர வேண்டும்” என்று சிபிஎம் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஊழியர்க்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்

தற்போது அரசு மூடுவதாக அறிவித்துள்ள 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 2 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு அரசின் இதர துறைகளில் கல்வித் தகுதிக்கேற்ப நிரந்தர மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.